இப்போது எண்டமால் நிறுவனம் தயாரித்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியில் பெப்ஸி தொழிலாளர்கள் குறைந்த அளவே பயன்படுத்தப்படுவதால் அவர்களை நிறுத்திக் கொண்டு இதன்மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று ‘பெப்ஸி’ அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பெப்ஸி கூட்டமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது…
“பிக் பாஸ் முதல் சீசன் நடந்தபோதே அதில் பெப்ஸி தொழிலாளர்களை வேலைக்கு வைக்காமல் மும்பை தொழிலாளர்களை வைத்தே வேலைகள் நடந்தன. நாங்கள் கேட்டபோது பிக் பாஸ் அரங்கம் ரகசியமாக பாதுகாக்கப்படுவதால் இந்த சீசனில் உங்களைப் பயன்படுத்த முடியவில்லை. ஆனால், அடுத்த சீசனில் கண்டிப்பாக பெப்ஸி தொழிலாளர்களைப் பயன்படுத்துவோம் என்று உறுதி அளித்ததால் அப்போது விட்டுக் கொடுத்தோம்.
ஆனால், சீசன் 2 தொடங்கிவிட்ட இந்த நேரத்தில் 400 மும்பை தொழிலாளர்கள் வேலை செய்யும் இடத்தில் பெப்ஸி தொழிலாளர்கள் 41 பேர் மட்டுமே வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களும் மும்பை தொழிலாளர்களுக்கு ஈடாக நடத்தப்படவில்லை. இதனால் நியாயம் கேட்ட எங்களிடம் சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க பொதுச்செயலாளர் குஷ்பு பேசி இது தொடர்பாக நாங்கள் பேசி பிரச்சினையைத் தீர்க்கிறோம் என்றார். அவர்களுக்கு இரண்டுநாள் அவகாசம் கொடுத்துள்ளோம்.
அவர்களால் பிரச்சினையைத் தீர்க்க முடியாவிட்டால், வரும் 30-ம்தேதியன்று சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்துக்கு எதிராகவும், நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுக்கு எதிராகவும் போராட்டம் நடத்துவதாக இருக்கிறோம். அன்று ஒருநாள் எந்த சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கும் பெப்ஸியைச் சேர்ந்தவர்கள் ஒத்துழைக்க மாட்டார்கள்.
இந்த விஷயத்தில் இது தொடர்பாக கமல் அவர்களின் மேனேஜரிடம் பேசியிருக்கிறோம். அவருக்கும் தவறான தகவல்கள் தந்து குழப்பியிருப்பது தெரிகிறது. அவரும் உண்மை நிலையைப் புரிந்துகொண்டு எங்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பார் என்று எதிர்பார்க்கிறோம். இதுவரை நடந்த எந்தப் பிரச்சினைகளின் போதும் கமல் தொழிலாளர் பக்கம் நின்று ஒத்துழைப்பு அளித்திருக்கிறார். தவிர அவரும் ‘பெப்ஸி’யின் உறுப்பினர்தான்..!”
எப்போதும் ‘பெப்ஸி’யின் பக்கம் நிற்கும் கமல், அவரே ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை நடத்துபவராக இருக்க, இந்த பிக் பாஸ் விவகாரத்தில் எந்தப்பக்கம் நிற்கப்போகிறார் என்று தெரியவில்லை. அதற்குள் குஷ்பு தலையிட்டு பிரச்சினையைத் தீர்ப்பாரா..?
‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் நடக்கும் பிரச்சினைகளைவிட இது கொஞ்சம் சீரியஸாகப் போகும் போலிருக்கிறது. என்ன நடக்கிறதென்று பொறுத்திருந்து பார்ப்போம் – யார் நல்லவர், யார் கெட்டவர் என்று..!