வரும் 20ம் தேதியில் சென்னை, வட தமிழகத்தில் மிதமான மழை முதல் கனமழை பெய்வதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக பிரதீப் ஜான் தெரிவித்திருக்கிறார்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில், ”மத்திய வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உள்ளது. 19, 20ம் தேதிகளில் தென் ஆந்திரா கடல் அருகே சுழற்சியின் ஒரு பகுதி அருகில் வருகிறது. இதனால் தமிழகத்தில் வட மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்பிருக்கிறது.
சென்னையில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும். 20ம் தேதியன்று சென்னை, வட தமிழகத்தில் மிதமான மழை முதல் கனமழை பெய்வதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது.
தென்மேற்குப் பருவமழை இன்னும் முடிவுக்கு வரவில்லை. இப்போது பெய்யக் கூடிய மழை அனைத்தும் தென்மேற்குப் பருவக்காற்றின் தாக்கம் தான். தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இன்னும் தொடங்கவில்லை.
இன்னமும் மேற்கிலிருந்து தான் காற்று வீசிக்கொண்டிருக்கிறது. இம்மாத இறுதியிலோ அல்லது நவம்பர் முதல் வாரத்திலோ கிழக்கிலிருந்து காற்று வீசக்கூடும். அப்போது முதல் வடகிழக்குப் பருவமழை ஆரம்பமாகும்.
வரும் 24-ம் தேதி வரைக்கும் தமிழகத்திற்கு மறைமுகமாக மழை கிடைக்கப்பெறும். காற்றழுத்த தாழ்வு நிலை மூலம் நேரடியாக மழை கிடைக்காது. அடுத்து 20-ம் தேதி அன்றே மழை எந்தளவுக்கு பெய்யும் எனக் கணிக்க முடியும். தற்போதைய நிலவரம் இதுவே…” என்று வெதர்மேன் கூறியிருக்கிறார்.