தயாரிப்பாளர் ஸ்ருதி திலக் 11:11 Productions சார்பில் தயாரிக்க சிபிராஜ் நடிக்கும் “வால்டர்” படத்தை புதுமுக இயக்குநர் U.அன்பு இயக்கியுள்ளார்.
சத்யராஜின் திரைவாழ்வில் புகழ்மிக்க படம் “வால்டர் வெற்றிவேல்”. தற்போது “வால்டர்”தலைப்பில் சிபிராஜ் காவல் அதிகாரியாக கலக்கியுள்ளார். திரில்லர் பாணியில் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் இசை விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.
இவ்விழாவில் கலந்து கொண்ட வால்டர் தேவாரம் பேசியது…
எனக்கு சினிமா அவ்வளவாக தெரியாது. நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் மூணாறு. அங்கிருந்தபோது சினிமா பற்றி எதுவும் தெரியாா. நாா சென்னை வந்த பிறகு எம் ஜி ஆர் ஆட்சியில் அதிகாரியாக இருந்தேன். ஒரு பிரச்சனையின் போது இந்திரா காந்தி தமிழகம் வந்திருந்தார். எங்கும் அவரது கூட்டம் நடத்த முடியாத போது என் தலைமையில் சென்னையில் கூட்டம் நடத்தினோம். எம் ஜி ஆர் அவர்கள் கூப்பிட்டு பாராட்டினார். இது மாதிரி நிறைய சம்பவங்கள் இருக்கிறது.
சிவாஜியை நேரில் பார்த்திருக்கிறேன். சத்யராஜை எனக்கு நெருக்கமாக தெரியும். சிபியை சின்ன வயதில் பார்த்துள்ளேன். இங்கு இயக்குநர் வாசு வந்திருக்கிறார். அவர் வால்டர் வெற்றிவேல் படம் எடுத்த போது என்னை வந்து சந்தித்தார். இங்கு நான் வந்ததில் மகிழ்ச்சி. படத்தின் டிரெய்லர், பாடல்கள் நன்றாக இருந்தது.
நடிகர் சிபிராஜ் பேசியது….
இன்று இந்த விழா நடப்பது பெருமையாக இருக்கிறது. அப்பாவின் வாழ்வில் மிகப்பெரிய வெற்றிபடம் வால்டர் வெற்றிவேல். அந்த பெயரை வைத்தால் நிறைய ஒப்பீடுகள் வரும் என தெரியும் ஆனால் அதை ஈடு கட்டும் கதை படத்தில் இருப்பதால் படத்திற்கு வைத்தோம். இன்று வால்டர் வெற்றிவேல் படத்தை இயக்கிய வாசு சாரும், வால்டர் தேவாரம் அவர்களும் வந்திருந்து வாழ்த்தியது மிகப்பெரும் ஆசிர்வாதம்.
இயக்குநர் 2015லேயே இந்த கதையை என்னிடம் சொன்னார். காவல்துறை சம்பந்தமான குடும்பம் அவர்கள் தயாரிப்பில் நடிப்பது பெருமை. நட்டி சாருக்கு மிகப்பெரும் விசிறி. சதுரங்க வேட்டை படத்தை அவர் போல் யாரும் செய்ய முடியாது. அவருடன் நடித்தது சந்தோஷம். இந்தப்படம் எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி..!
இயக்குநர் U.அன்பு பேசியது….
சிபிராஜிடம் இரண்டு கதை சொன்னேன். அவர் தான் இந்த போலீஸ் கதையை எடுக்கலாம் என்றார். எட்டு வருடம் ஆனது இந்தப்படம் ஆரம்பிக்க, இடையில் வேறொரு ஹீரோவுடன் இந்தப்படம் ஆரம்பித்தது ஆனால் அப்போதும் ஆதரவாக இருந்தார். இந்தப்படம் நான் தான் செய்வேன் என தோன்றுகிறது என்றார்.
இப்போது அவருடன் இந்தப்படம் வருவது மகிழ்ச்சி. தயாரிப்பாளர் மிகப்பெரும் ஆதரவாக இருந்தார். எங்களுக்கு எல்லாவித்ததிலும் துணையாக இருந்தார். ஒரு மிகப்பெரும் பிரச்சனை ஏற்பட்ட சமயத்தில் நட்டி சார் வந்து நடித்து தந்தார். அவருக்கு மிகப்பெரும் நன்றி. இந்தப்படம் பெரும் கஷ்டபட்டு உருவாக்கியுள்ளோம். எல்லோருக்கும் நன்றி.