June 12, 2024
  • June 12, 2024
Breaking News
August 11, 2018

விஸ்வரூபம் 2 விமர்சனக் கண்ணோட்டம்

By 0 1390 Views

கமல் ஒரு சகலகலா வல்லவர். அவருக்கு எல்லாக் கலைகளும் தெரியும் என்பதை நாம் உணர்ந்தே இருக்கிறோம். அதில் சமையலும் அடக்கம்..!

அந்த வகையில் மீந்துபோன புளித்த மாவில் புதிதாக வெங்காயம் சேர்த்து அவர் ஊற்றியிருக்கும் ஊத்தப்பம்தான் இந்த விஸ்வரூபம் 2. எப்படி ‘ஊத்தி’யிருக்கிறார் பார்ப்போம்.

கமல் என்கிற மகா கலைஞனை நாம் போற்றுகின்ற அளவுக்கு… கொண்டாடுகின்ற அளவுக்கு அவர் நம்மைப் புரிந்து வைத்திருக்கிறாரா என்றே புரியவில்லை. வழக்கமான தமிழ் சினிமாவைப்பற்றி ஒருமுறை அவர், “மணியடித்தால் சோற்றுக்கு வாலாட்டும் நாயாகத்தான் நம்மவர்கள் ரசிகர்களை வைத்திருக்கிறார்கள்..!” என்றார். ஒத்துக்கொள்ள வேண்டிய குற்றசாட்டு.

அதிலிருந்து விலகித்தான் இவரைப் போன்றவர்கள் புதிய முயற்சிகள் எடுக்கும்போதெல்லாம் வழக்கமான நம்மவர்களிலிருந்து ‘நம்மவர்’ வித்தியாசமானவர் என்றே அவர் வீழ்ந்துவிடாமலிருக்க வெகுஜன சினிமா ரசிகன் கைவிட்டாலும் நாம் அவரைத் தாங்கிப் பிடித்து கொண்டாடியே வந்திருக்கிறோம்.

ஆனால், அதை அவர் தவறாகப் புரிந்துகொண்டு நாம் எதைச் செய்தாலும் கொண்டாடி விடுவார்கள் என்று அடிக்கடி தப்புக் கணக்குப் போட்டுக்கொண்டிருப்பதுதான் வேதனை.

அப்படி அவரது அரசியல் பிரவேசம், பிக்பாஸ் தொடர்ச்சியாக வந்திருக்கும் இன்னொரு முயற்சிதான் இந்த ‘விஸ்வருபம் 2’. சினிமா தவிர மற்ற விஷயங்கள் இதற்குத் தொடர்பில்லாதவை என்றும் ஒதுக்கிவிட முடியாது. படத்துக்கு முன் ‘மக்கள் நீதி மய்யம்’ புரமோஷனையும் வைத்திருக்கிறார் அவர்.

ஒரு கலைஞனுக்கு தான் யோசித்த எதையும் தூரத் தூக்கிப் போட மனசே வராது. அது ஒரு திறமையான வியாபாரிக்குதான் வரும். இந்த வகையில் கமல் ஒரு கலைஞனாக நின்று விஸ்வரூபம் முதல் பாகத்தில் மிஞ்சிப் போன சரக்கையெல்லாம் இங்கே நம் பார்வைக்கு வைத்திருப்பதுடன் அதை இன்னொருவரிடம் நல்ல விலைக்கு விற்ற வியாபாரியாகவும் வென்றிருக்கிறார். சபாஷ் நாயுடு..?!

முதல் பகுதியில் அமெரிக்காவோடு கைகோர்த்து ஆப்கன் தீவிரவாதத்தை அழிக்கப்போன இந்திய உளவுப்படை அதிகாரியான விஸாம் அஹமது காஷ்மீரி என்கிற கமல் இதில் லண்டனுக்குப் போய் அங்கே லண்டனே அழியவிருக்கும் ஒரு ஆபத்தை எதிர்கொண்டு ஒற்றை ஆளாக லண்டனை மீட்கிறார். அதன் பின்னணியில் மீண்டும் உமர் முளைக்க என்ன ஆனது என்பது இந்தக் கதை.

Vishwaroopam-2

Vishwaroopam-2

களத்தூர் கண்ணம்மாவிலிருந்தே நன்றாக நடித்து வரும் கமலின் நடிப்பு குறித்து நாம் விமர்சிக்க எதுவுமில்லை. மாறாக அவரே அவருக்காக எழுதிக்கொண்டிருக்கும் அவரது கேரக்டரைசேஷன்தான் ஹாலிவுட் ஸ்கிரீன்ரைட்டர்களுக்கே சவால்.

அய்யங்கார் என்றாலும் பிரச்சினை… அய்யர் என்றாலும் ஒத்துக்கொள்ள முடியாது… முற்றிலும் முஸ்லிமாகவும் மாறிவிட முடியாது… உலகளாவிய இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்த்தாகவும் வேண்டும் ஆனால், இந்திய முஸ்லீமாக தேசப்பற்றுடன் இருக்கவும் வேண்டும் – இந்தியாவை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இந்துத்துவத்துக்கு எதிர்க்குரலும் கொடுத்தாக வேண்டும். அத்துடன் ஆயிற்றா..? ஒரு பக்கம் ஜேம்ஸ்பாண்டாக சாகசம் செய்யவும், ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களால் காதலிக்கப்படவும் வேண்டும்… அதே நேரத்தில் சிவாஜிகணேசன் வாரிசாக அம்மா பாசத்தைக் கொட்டி நடித்தாகவும் வேண்டும் என்றால் ‘ஒரு கமல்’ என்னதான் செய்வார். அவை எல்லாம் கலந்து செய்த கலவையாக அவர் ஏற்றிருக்கும் ‘விஸாம்’ பாத்திரம் விஷப்பரீட்சைக்கு உள்ளாகிறது.

காதல் இமேஜையும் காப்பாற்றிக்கொள்ள தொழில் தோழியான ஆன்ட் ரியாவால் காதலிக்கப்படவும் வேண்டும். ஆனால், மனைவியான பூஜா குமாரையும் ஒதுக்கிவைக்கவும் முடியாது என்று ஒரு திண்டட்டாமும். ஒரு கட்டத்தில் பூஜா குமாரே கமல் மீது சந்தேகம் வந்து நாலு பொண்டாட்டி வச்சுப்பீங்களோ..? என்கிறார். (கமலின் கணக்குப்படி சரிதானே என்கிறோம் நாம். அவரே எழுதிக்கொண்டதுதான். நாமொன்றும் சொல்லவில்லை..!)

கூட்டிக் கழித்துப் பார்த்தால் ராணுவப் பயிற்சிகள், அன்டர்வாட்டர் பகுதிகள், காட்டுக்குள்ளான கார் விபத்து உள்ளிட்ட சில காட்சிகளை மட்டுமே வெங்காயமாகப் பொடித்து விஸ்வரூபம் முதல்பகுதியான புளித்த மாவில் கலந்திருக்கிறார் கமல். அதிலும் சில லண்டன் அவுட்டோர் காட்சிகளைத் தவிர மற்றதெல்லாம் இங்கே இன்டோரிலேயே வசதிப்பட எடுத்தவைதான்.

மொத்தமாக எடுத்ததில் ஆக்‌ஷன் உள்ளிட்டு பரபரப்பாக இருந்த பகுதிகளை எல்லாம் முன்பகுதியில் காட்டிவிட்டதால் அதில் மிஞ்சிய இந்தப்படக் காட்சிகளில் அத்தனை ஆக்‌ஷன்களோ, பரபரப்புகளோ இல்லை என்பதால் எங்கே கமலுக்கே போரடிக்கிறதோ அங்கே முன்பகுதி பிளேஷ்பேக்கைப் போட்டு நிரப்பிவிடுகிறார். அதனாலேயே கமல் பல கெட்டப்புகளில் வருவது போன்ற மாயை அல்லது குழப்பம் ஏற்படுகிறது.

மற்றபடி பழசோ, புதுசோ எடுத்த காட்சிகள் எடுத்த விதத்திலும் அதற்கான ஜிப்ரானின் பின்னணி இசை, மிக்ஸிங் சமாச்சாரங்கள் எல்லாம் மேற்கத்திய பாணியில் வியக்கவைக்கின்றன என்பது உண்மை. குறிப்பாக இந்த இரண்டாம் பாகத்தைப் பொறுத்தவரை காட்டுக்குள் கமல் அன் கோ பயணிக்கும் கார் தாக்குதலுக்குள்ளாகும் காட்சி ‘வாவ்..!’ அதேபோல் கடலுக்குள்ளான அன்டர்வாட்டர் காட்சிகளும் ‘ஆஸம்..!’

ஹாலிவுட் திரைக்கதையாக்க உத்தியிலேயே நிறை…ய வசனக் காட்சிகள் இருந்தாலும் யோசிக்கவும், யோசித்து சிரிக்க வைப்பதும் பலம். அந்த ‘மைக்’ வசனம் ஒரு ‘கார்ன்பிளேக்’ பதம்.

Kamal, Andrea

Kamal, Andrea

ஜீனியஸ் வசனகர்த்தா கமலின் தமிழ் வசனங்களே கூட ஆங்கில வசனங்கள் போல் நம்மைக் கொஞ்சம் யோசிக்கவிட்டு ரசிக்க வைப்பதாலும் இதை ஆங்கிலப்படத்துக்கு ஒப்பான தமிழ்ப்படம் என்று சொல்ல முடியும்.

அதேபோல் ஹாலிவுட் பட பாணியில் டாய்லட்டுக்குள் ஒரு சீனை வழக்கமாக கமல் வைப்பார். இதில் இரண்டுமூன்று டாய்லட் காட்சிகள் (கமல் ஒண்ணுக்கு விடும் சீன் உள்பட) வருகின்றன.

உமராக முதல் பகுதியிலேயே வரும் ராகுல் போஸ், கமலின் உயர் அதிகாரியாக வரும் சேகர் கபூர், உடனிருந்தே கொல்லத்துணியும் ஆனந்த் மகாதேவன், கமலின் அம்மாவாக வரும் வஹீதா ரஹ்மான் என்று நடிப்பில் கரைகண்ட ‘ஸ்டார் காஸ்ட்’ அமைந்து விடுவதால் அந்த ஏரியாவும் நேர்த்தியாக நிமிர்ந்து நிற்கிறது.

இதெல்லாம் நிறைகள் என்றால் குறைகளுக்கும் குறைவில்லை. பாடல்களுக்கான இசையும் அதில் சேர்த்தி. வைரமுத்து, கமலின் பாடல்வரிகள் நேர்த்தி.

கண்ணுக்கு நேராக கமலின் துரோகத்தைப் பார்த்த கொடூரனான ராகுல் போஸ் ‘பொட்’டென்று அவரைப் போட்டுத்தள்ளாமல் வசனமாகப் பேசிக்கொண்டிருப்பது கமல் தப்பிக்க வாய்ப்பாகப் போவதும், அணு ஆயுதங்களைக் கையாளும் ஹைடெக்கான கதையில் பயங்கரவாதிகள் புர்கா போட்டுக்கொண்டு லேடீஸ் டாய்லெட்டுக்குள் வந்து பூஜா குமார், ஆன்ட்ரியாவைக் கடத்துவதும் (இதற்கும் வாசலில் ஒரு பாதுகாப்பாளர் ‘மெஷின் கன்’னோடு நிற்கிறார்…) அணு விஞ்ஞானியான பூஜா குமாரை, உளவுப்பிரிவு ஆண்ட்ரியா ‘சக்களத்தி சண்டை’ போல வம்பிழுத்துக் கொண்டிருப்பதும் சோற்றுக்கு வாலாட்டும் கடைக்கோடி சினிமா ரசனைக்கான மணியடித்தலின்றி வேறில்லை.

எப்படியோ படைப்பாளியாகவும், வியாபாரியாகவும் பிசிறின்றி கமல் தப்பித்துவிட்டார். ஆனால், இந்த விஸ்வரூபத்தை வைத்து மக்கள் நீதி மய்யத்தை புரமோட் செய்வதோ, ‘மநீம’ யை வைத்துக் கொண்டு படத்தை புரமோட் செய்வதோ அவருக்கு பலன் தராது. இரண்டுமே வெகுஜன ரசனை மற்றும் எதிர்பார்ப்புகளிலிருந்து விலகியே நிற்கின்றன.

விஸ்வரூபம் 2 – விஸ்வரூபம் 1 டெலிட்டட் சீன்ஸ்..!

– வேணுஜி