“பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை…
தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை…” என்று வாலி எழுதிய வைர வரிகள் இவ்வுலகத்திற்கு எப்போதும் பொருந்தும்.
அப்படி பணம் இருந்தால் மட்டுமே தங்களால் வாழ்க்கையைத் தொடர முடியும் என்ற பரிதவிப்பில் இருக்கும் நால்வர் ஒரு கட்டத்தில் ஒன்று சேர அவர்கள் பணத்துக்காக மேற்கொள்ளும் முயற்சிதான் இந்த படம்.
நெடுஞ்சாலை ஒன்றில் புலரும் பொழுதில் காருக்குள் உறங்கும் நால்வரில் கண்விழித்து எழும் கண்ணன் மாதவன் உடன் உறங்கிக் கொண்டிருக்கும் அங்காடி தெரு மகேஷ், சரவனேஷ் குமார், சதீஷ் மூவரையும் அவசர அவசரமாக எழுப்பி ஒரு பதட்டத்துடன் அவர்களைத் தயார் செய்யும் போதே ஏதோ அதற்கு பின்னால் ஒரு விபரீத திட்டம் இருப்பது தெரிய வருகிறது.
அவர் சொற்படியே நால்வரும் தனித்தனியே பிரிந்து அவர்களில் பார்வையற்றவராக இருக்கும் அங்காடித்தெரு மகேஷ் நெடுஞ்சாலையில் வரும் அமைச்சருக்கு சொந்தமான ஒரு காருக்கு குறுக்கே செல்ல அவர்கள் தடுமாறி பிரேக் போடுகிரார்கள். அங்கே வரும் கண்ணன் மாதவன் காரை பழுதாக்கிவிட அந்த நேரம் பார்த்து சதீஷ் ஒரு மெக்கானிக்காக அங்கே பிரவேசிக்க இவர்கள் பழுது பார்க்கும் நேரத்தில் காரில் வரும் சரவனேஷ் குமார் வந்தவர்களின் காரில் இருக்கும் வட்டகராவைக் களவாட, நால்வரும் தப்பிக்கின்றனர்.
அமைச்சருக்கு சொந்தமான அந்த வட்டகரா காமெடியன் பெஞ்சமின் பொறுப்பில் இடம் மாறும் வேளையில் இந்தக் கொள்ளை நடைபெற அமைச்சர் மீண்டும் வட்டகராவைக் கைப்பற்றினாரா, அதைக் கொள்ளையிட்டவர்களின் நோக்கம் நிறைவேறியதா என்பது மீதிக் கதை.
தயாரிப்பாளரான சதீஷ் முதன்மைக் கதாபாத்திரம் ஏற்றதாலோ என்னவோ அவரே படத்தில் ஹீரோ போல் வருகிறார். அவருக்கு இரண்டு ஆக்ஷன் பிளாக்குகளும் ஒரு பேதாஸ் பாடலும் இருக்கிறது. ஆனால் சும்மா சொல்லக்கூடாது. அனுபவ நடிகர் போலவே நடித்திருக்கிறார் சதீஷ்.
சண்டைக் காட்சிகளில் ஆக்ரோஷமாக நடித்திருப்பவர் சென்டிமென்ட் காட்சிகளிலும் நல்ல உணர்ச்சிகளைக் காட்டி நடித்திருக்கிறார். அவர் தாராளமாக தனி ஹீரோவாகவே பயணிக்கலாம்.
அங்காடி தெரு மகேஷ் ஏற்கனவே ஹீரோ என்பதால் அவரை வைத்து கதை முடிவதாக வருகிறது. அவர் கரியரில் பார்வையற்றவராக வரும் இந்த வேடம் புதிது.
சரவனேஷ் குமார், கண்ணன் மாதவன் இருவரும் என்ன வேண்டுமோ அதை செய்திருக்கிறார்கள்.
ஒரு எபிசோடில் வரும் அலீஷா ஜார்ஜும் கதாநாயகி இல்லாத குறையை நிவர்த்தி செய்து நடித்திருக்கிறார்.
முக்கிய பொறுப்பு பெஞ்சமின் கையில் போய்விட, சீரியஸுக்காக அவரது சகோதரராக வரும் சம்பத் ராம் கிட்டத்தட்ட படத்தின் வில்லனாக வந்து சண்டை போடுகிறார்.
சிறிய பாத்திரத்தில் வந்தாலும் தன்னுடைய அனுபவ நடிப்பால் விவசாயத்தின் மேன்மையை உயர்த்திப் பிடித்து இருக்கிறார்
ஆர்.எஸ்.சிவாஜி.
ஒரு கொள்ளைக் கதை என்று ஒரே வரியில் கதை சுவாரஸ்யம் இல்லாமல் நின்று போய் விடக்கூடாது என்பதற்காக நால்வருக்கும் ஒவ்வொரு பிளாஷ் பேக் வைத்து காதல், துரோகம், நெகழ்ச்சி, விவசாயத்தின் மேன்மை என்று அனைத்து வாழ்வியல் நடப்புகளையும் உள்ளே வைத்து கமர்ஷயலாக கதை பின்னி இருக்கிறார் இயக்குனர் கே.பாரதி கண்ணன்.
இந்தக் கொள்ளை அதை நடத்தியவர்களுக்கும் உதவி செய்து, இழந்தவருக்கும் வலி இல்லாமல் போவது ஆச்சரியம்.
அது சரி வட்டகரா என்றால் என்ன என்று தானே கேட்கிறீர்கள்..? அதுதான் படத்தின் சஸ்பென்ஸ். அதைப் படத்தில்யே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். (தலைப்பு வைக்கும் போது மட்டும் நம் தமிழ் இயக்குனர்களுக்கு எப்படித்தான் இவ்வளவு தமிழ் உணர்வு பொங்கி வழிகிறதோ தெரியவில்லை)
ஜேசன் வில்லியம்சின் ஒளிப்பதிவு பட்ஜெட்டில் பயணத்திருக்கிறது என்றால் தாஜ் நூரின் இசை பட்ஜெட்டை மீறியும் ஒலிக்கிறது. தந்தைக்காக சதீஷ் நினைவில் ஒலிக்கும் அந்தப் பாடல் தந்தையர்களுக்கு சமர்ப்பணம்.
கொஞ்சம் பெரிய பட்ஜெட்டும், பெரிய நடிகர்களும் கிடைத்திருந்தால் நிச்சயமாக கவனிக்கத்தக்க ஒரு படமாக இருந்திருக்கும்.
இருந்தும் பழுது இல்லாமல் பயணிக்கிறது இந்த பட்ஜெட் வட்டகரா.
Related