காலம்தோறும் காமுகர்களுக்குக் குறைவில்லை. அதுவும் நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்ய நேரும் ஐடி துறை பெண்களுக்கு இருக்கும் சவால்கள் பெரிதானவை.
அப்படி ஐடி துறையில் பணியாற்றும் பெண்கள் கடத்தி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட, அந்த வழக்கை சிபிஐ அதிகாரி கிருஷ்ணா விசாரித்துக் கொண்டிருக்கிறார்.
இன்னொரு பக்கம் நாயகன் கார்த்திக் தாஸ் நாயகி சப்னா தாஸ் உள்ளிட்ட ஐடி துறை இளைஞர்கள் அந்தத் துறையில்புது வகையிலான மென்பொருள்களை உருவாக்கி வருகிறார்கள்.
இந்நிலையில் காமுகனால் கதாநாயகியும் கடத்தப்பட, அவரை காப்பாற்றும் முயற்சியில் இறங்கும் நாயகன் கார்த்திக் தாஸ், குற்றவாளியை பிடித்து எப்படி தண்டித்தார் என்பது கதை.
படத்தை இயக்கி இருப்பதுடன் நாயகனாக நடித்திருக்கும் கார்த்திக் தாஸ், பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். காதல் காட்சிகளில் மட்டுமல்லாமல் ஆக்ஷன் காட்சிகளிலும் அளவோடு நடித்து அடுத்த படத்தை குறி வைக்கிறார்.
ரொமான்ஸ் காட்சிகள் அதிகமாக இருந்தாலும் அறிமுக நாயகியாக நடித்திருக்கும் சப்னா தாஸ், அசால்ட்டாக நடித்து கடந்திருக்கிறார்.
சிபிஐ அதிகாரியாக நடித்திருக்கும் கிருஷ்ணா மற்றும் அவரது டீம் மேடை நாடக நடிகர்களைப் போல் வந்து போகிறார்கள்.
கார்த்திக்கின் அம்மாவாக வரும் அனுபமா குமார் அப்படியா மகனையும், அவன் காதலியையும் வீட்டுக்குள்ளேயே ரொமான்ஸ் பண்ண அனுமதிப்பார்..? அவர்கள் பேசாமல் இருந்தாலும் என்ன ரெண்டு பேரும் தனித்தனியா நிற்கிறீர்கள் என்று உசுப்பேத்தியும் விடுகிறார்.
படத்தில் வில்லனாக வரும் காமுகனுக்கு வீட்டிலேயே முறைப்பெண் ஒருத்தி அவருடன் உறவுகொள்ள அலைந்து கொண்டிருக்க, அவளை ஏறெடுத்தும் பார்க்காமல் வெளியில் மற்ற பெண்களை கற்பழித்து கொலை செய்வதும் நம்பும்படியாக இல்லை.
வில்லனிடம் நாயகி மாட்டிக்கொள்ளும் போது அவனுடன் போனில் பேசும் நாயகன் அவளை பாலியல் பலாத்காரம் செய்தாலும் பரவாயில்லை உயிரோடு திருப்பி கொடுத்துவிடு என்கிறார். அதேபோல் நாயகியும் என்னை அனுபவித்துக் கொள். ஆனால் உயிரோடு விட்டு விடு என்கிறார். இன்றைய இளைஞர்கள் இப்படித்தான் இருக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது.
என் உயிரே போனாலும் என்னை நீ அடைய முடியாது என்று தமிழ் பெண்கள் சூளுரைத்த படங்கள் எல்லாம் நம் நினைவில் வந்து போகின்றன.
ஒளிப்பதிவாளர் மிதுன் மோகனின் கேமராவும், நந்தாவின் இசையும் பட்ஜெட்டை நினைவுபடுத்தி நகர்ந்து உள்ளன.
சாதாரணமாக பயனாளியின் செல்போனை வைத்தே அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று கண்டுபிடித்துவிடும் இன்றைய காலகட்டத்தில் நாயகியின் செல்போனில் அவள் இருக்கும் இடத்தை தெரிவிக்கும் மென்பொருள் இருந்தும் அவள் எங்கே இருக்கிறாள் என்று கண்டுபிடிக்க முடியாமல் நாயகன் தேடிக் கொண்டிருப்பது அபத்தமான காட்சி.
நண்பன் வந்து அந்த விஷயத்தை ஞாபகப்படுத்திய உடன் தான் இவருக்கு ஞானோதயம் வந்து நாயகியை தேடி போகிறார். அதற்குள் வில்லன் மேட்டரை முடித்து விடுகிறார்.
புதிய கலைஞர்கள் புதிய முயற்சி என்ற அளவில் பாராட்டப்படவேண்டிய படமாக இது இருந்தாலும் பயிற்சியுடன் களம் இறங்கினால் மட்டுமே வெற்றியை இவர்கள் பெற முடியும்.
சொன்ன விஷயத்தை ஜவ்வரிசி ஆக இழுத்தாலும், நல்ல விஷயத்தை சொன்னதில் இந்த வரிசியைப் பாராட்டலாம்.