நாம் நம்மை ஒத்த மனிதர்களின் மகிழ்ச்சி; துயரத்தை மட்டுமே கவனத்தில் வைத்துக் கொள்கிறோம். ஆனால் நாம் கடந்து செல்லும் சமுதாயத்தில் நாம் அதிகம் கவனிக்காத மனிதர்களின் வாழ்க்கை நம்மில் இருந்து சற்று வித்தியாசப்பட்டேதான் இருக்கிறது.
அப்படியான மனிதர்களின் வாழ்க்கையை அப்பட்டமாகத் தருவதுதான் இயக்குனர் பாலாவின் பாணி அல்லது பணி. இந்தப் படத்திலும் அது தவறவில்லை.
பாலா பார்க்கும் மனிதர்களும் சரி, அவர்களது வாழ்க்கைச் சிக்கல்களும் சரி… சற்றே வித்தியாசமானவைதான். அப்படித்தான் இருக்கிறான் அவர் படைத்த வணங்கானும்.
தமிழகத்தின் தென்கோடியில் இருக்கும் கன்னியாகுமரியில் கடைக்கோடி மனிதர்களில் ஒருவராக இருக்கிறார் நாயகன் அருண் விஜய்.
எந்தத் தொழிலும் செய்யத் தயங்காத, தவறுகளை ( நாலு சாத்து சாத்தி) தட்டிக் கேட்க யோசிக்காத, யாருக்கும் தலை வணங்காத அவருக்கு அன்பே உருவான பதின்வயதுத் தங்கை ஒருத்தியும் இருக்க… அவள் மீது மட்டும் அன்பைப் பொழியும் பாசக்காரனாக இருக்கிறார்.
இன்னொரு பக்கம்… அனைத்து மொழிகளும் அன்றாடப் பாட்டுக்காகக் கற்ற சுற்றுலா பயணிகளின் வழிகாட்டியாக இருக்கிறார் நாயகி ரோஷினி. அசைந்து கொடுக்காத அருண்குமார் மீது அசைக்க முடியாத காதல் கொண்டிருக்கும் ரோஷினி தன் சுவாசக் காற்றான காதலைத் தெரிவிக்கும் போதெல்லாம் அருண்குமாரிடமிருந்து ‘கெட்ட காற்றே’ வருகிறது.
முக்கடலும் சங்கமிக்கிற இடத்தில் மூன்று மதங்களும் சங்கமிக்கும் முகமாக இந்து, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் எந்தப் பிணக்கும் இன்றி இணக்கமாக வாழ்கிறார்கள். அந்தப் பகுதியில் எந்த பிரச்சினையாக இருந்தாலும் முன்னால் நிற்பவர்கள் இந்து வழக்கறிஞர், கிறிஸ்துவப் பாதிரியார், இஸ்லாமியத் தொழிலதிபர் – இவர்கள் மூவரும்தான். அவர்களுக்கு வரும் எல்லா பிரச்சனையும் அருண்விஜய்யின் அடிதடியைச் சுற்றியேதான் இருப்பது வேறு விஷயம்.
அதிலிருந்து விலக்கி, அவரை நல்வழிப்படுத்த சிறப்பு பார்வைத்திறன் கொண்ட பெண்களைப் பாதுகாக்கும் விடுதியின் காப்பாளராக அவருக்கு வேலை வாங்கித் தருகிறார் பாதிரியார்.
அங்கு நேரும் ஒரு அவலம் அருண்விஜய்யை மீண்டும் மூர்க்கமாக்க, அதன் விளைவுகள் என்ன என்பதுதான் மீதிக் கதை.
உச்ச மனிதமும், உக்கிர மிருகமும் கலந்து அமையப்பெற்ற ஹீரோக்கள்தான் பெரும்பாலும் பாலாவின் படைப்புகளில் வருகிறார்கள். இதில் அப்படி ஒரு வேடம் ஏற்றிருக்கிறார் அருண்விஜய்.
பார்வையில் சலனம் இல்லாமல் நடிப்பது ஒரு வித உத்தி. அந்த உத்தியை அருண் விஜய் புத்தியில் ஏற்றி சரியாக வேலை வாங்கி இருக்கிறார் பாலா.
அருண் விஜயும் சளைக்காமல் அந்தப் பாத்திரத்துக்குள் தன்னை இம்மி அளவு பிசகாமல் இணைத்துக் கொண்டிருக்கிறார். அறமற்றவர்கள் கண்ணில் படும் நேரத்தில் தீர்ப்பு மட்டும் அல்லாமல் தண்டனையும் அக்கணமே வழங்குகிற அருண் விஜய்யின் நடிப்புப் பயணத்தில் இது ஒரு முக்கிய அடையாளப் படமாக அமைந்துள்ளது.
அவரிடம் அடி வாங்கிய சதிகாரர்கள் அலறிப் புடைத்துக் கொண்டு காவல் நிலையத்துக்குள் தஞ்சம் புக, அது என்ன இடம் என்று கூட உணராமல் தடுக்க வரும் காவலர்களையும் சேர்த்துப் போட்டு உதைக்கும் அருண் விஜயின் உக்கிரமும், உள்ளே வந்த இன்ஸ்பெக்டர் பெயரைக் கேட்கும் போது அதைக் கண்டும் காணாமல், கேட்டும் கேளாமல் இருக்கும் மெத்தனமும் அவரிடம் நிறைய எதிர்பார்க்க வைக்கிறது.
தான் செய்தது எத்தனைப் பெரிய தவறு என்றெல்லாம் உணராமல் யார் இதைச் செய்தது என்றால், “நான்தான்..!” என்று நிற்கிற நேர்மையும், எதற்காக அதைச் செய்தாய் என்றால் அதை சொல்வதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் மேலும் பாதிக்கப்படுவார்கள் என்பதை உணர்ந்து காக்கும் மௌனமும் அசத்தல்.
படத்தில் அவர் பேசுவதில்லை. ஆனால் அவர் நடிப்பு நம்மால் வெகு காலத்துக்குப் பேசப்படும்
ரோஷினியை இதற்கு முன் வெகு சில படங்களில் பார்த்திருக்கிறோம் ஆனால் இத்தனை வனப்பு அவரிடம் எங்கிருந்தது என்பது புரியவில்லை. அந்த ஏரியாவுக்குள் எப்படி எல்லாம் தேவதையாக்க முடியும் என்று அத்தனை வழிகளிலும் அவரை ஆக்க முயற்சித்து இருக்கிறார் பாலா.
அருண் விஜயின் அன்புத் தங்கையாக வரும் சிறுமியும் அற்புதமாக நடித்திருக்கிறார். அண்ணன் இல்லாத வாழ்வை நினைத்து அவர் அஞ்சுவது நெகிழ்ச்சி.
இரண்டு மூன்று காட்சிகள்தான் என்றாலும் நீதிபதியாக வரும் மிஷ்கினின் பார்வையும் நடிப்பும் அபாரம். அவர் வரும் காட்சிகள் மட்டும் ஏதோ ஆங்கிலப் படம் பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகின்றன.
அருண் விஜய்யே வந்து சரணடைந்ததை இன்ஸ்பெக்டர் சொல்லும் போது, “யோவ் ஆய்வாளரே, நீ ஆயவே இல்லையா அப்போ..?” என்று அவர் கேட்கும்போது வெடித்துச் சிரிக்கிறது அரங்கம்.
அதேபோன்ற சின்னப் பாத்திரத்தில் வந்தாலும் சீரியஸாக முகம் காட்டுகிறார் சமுத்திரக்கனி.
எங்கே பிடித்தார்கள் அந்த ‘வெள்ளை ரோஜா ‘ சிவாஜி சாயல் கொண்ட அந்த பாதிரியாரை..?
பாதிரியார் என்றெல்லாம் பாரபட்சம் பார்க்காமல் அவரையும் பாலா தன் ஸ்டைலில் ஓட்டும் போது “பிதாவே இந்த பாலாவை மன்னியும்..!” என்று மன்றாடிக் கொண்டு அடக்க மாட்டாமல் சிரிக்கிறோம்.
முக்கிய வில்லன்கள் மூன்று பேர். ஆனால் மூன்று பேரையும் நமக்கு அறிமுகம் இல்லாத ஆட்களாகப் போட்டிருப்பதால் அவர்களை மன்னிக்கவே தோன்றவில்லை.
ஆனால், அவர்கள் செய்யும் தவற்றை பார்வையாளர்களாகிய நாமும் செய்யும் விதமாக அந்தச் செயல்களை அப்பட்டமாக நமக்கும் காட்சிப்படுத்தியிருப்பது அறமா பாலா..? அப்படி என்றால் நாமும்தானே தவறிழைத்தவர்கள் ஆகிறோம்..?
அதைத் தாண்டி,
பாலாவின் நாடியைப் பக்குவமாகப் பிடித்து நம் உணர்வுகளை உசுப்பி விடக் கூடிய இசைஞானி இந்தப் படத்தில் இல்லாதது ஒரு குறைதான் என்றாலும், அதை இரு வேறு ஆளுமைகளைக் கொண்டு சரி செய்ய முயற்சித்திருக்கிறார் பாலா.
அதில் பாடல்கள் அளவில் ஜிவி பிரகாஷும், பின்னணி இசை அளவில் சாம் சிஎஸ்சும் சமன் செய்ய முயற்சித்திருக்கிறார்கள்.
வழக்கமாக அழகோவியம் படைக்கும் ஆர்பி குருதேவ், இந்தப் படத்தின் தன்மை புரிந்து கொஞ்சம் வெம்மையாகவே ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.
சில்வாவின் சண்டைக் காட்சிகள் நம் செல்களைப் புடைக்க வைக்கின்றன.
மாமிகளை ஓட்டுவது, போலீசைப் புலம்ப விடுவது, காதலிக்கும் பெண்ணைக் கதற விடுவது, ஊர் முழுக்க ஓடித் துரத்துவது, சீரியஸாகப் போனாலும் நடுநடுவே நம்மைச் சிரிக்க வைப்பது என்று பாலாவின் குறியீடுகள் படம் நெடுக இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை – இதெல்லாம் இல்லாவிட்டால்தான் ஆச்சரியம்.
நினைத்ததை எல்லாம் எடுத்துவிட்டு இதை வெட்டினால் வேகமாக இருக்கும் – அதை நறுக்கினால் நன்றாக இருக்கும் என்றெல்லாம் மேல் வேலைக்கு வைக்காமல் நறுக்குத் தெறித்த மாதிரி ஒரு கதையை சுருக்கென்று நம் நெஞ்சுக்குள் தைத்து விட்டுப் போயிருக்கிறார் பாலா.
அது உண்மைக் (கு நெருக்கமான) கதை என்பதும் நிஜத்தில் சுடுகிறது.
வணங்கான் – மோதி மிதித்து விடு..!
– வேணுஜி