October 30, 2024
  • October 30, 2024
Breaking News
February 18, 2023

வாத்தி திரைப்பட விமர்சனம்

By 0 533 Views

எல்லோருக்கும் எளிதாகக் கிடைக்க வேண்டிய கல்வி, எப்படி தனியார் முதலாளிகளிடம் சிக்கி பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே என்று ஆகிப்போனது என்பதைச் சொல்லி இருக்கும் படம். 

படத்தின் தொடக்கம் மிக அற்புதமாக இருக்கின்றது. இன்றைய காலகட்டத்தில் பொறியாளராக விரும்பும் ஒரு மாணனின் தந்தை அவன் கல்விச் செலவுக்காக அவர்களுடைய வீடியோ கடையை விற்கப் போக, அங்கு கிடைக்கும் ஒரு வீடியோ கேசட்டின் மூலம் திறமை மிக்க ஒரு கணக்கு வாத்தியாரைப் பற்றி அந்த மாணவனால் தெரிந்து கொள்ள முடிகிறது.

அவரைப் பிடித்தால் தங்கள் கல்விக் கனவு எளிதாக நனவாகும் என்று அவரைத் தேடி கிளம்புகிற மாணவர்கள் தமிழ்நாடு ஆந்திர மாநில எல்லையில் உள்ள ஒரு கலெக்டரை சந்திக்க, அவர் சொல்லும் தங்கள் வாத்தியாரைப் பற்றிய கதைதான் ‘வாத்தி’யாக விரிகிறது.

தனியார் பள்ளிகள் கல்வி மூலம் கணிசமாக லாபம் பார்த்து விட ஆரம்பித்திருந்த 90களின் காலகட்டம். அதைத் தடுப்பதற்காக அரசாங்கம் தனியார் பள்ளிகளுக்கு கட்டண விகிதத்தை முறைப்படுத்த அரசாணை பிறப்பிக்க நினைக்க, அப்படி நடந்து விட்டால் தங்கள் லாபம் பாதிக்கப்படும் என்று பயந்த தனியார் பள்ளி முதலாளிகள் அவசர கூட்டம் போடுகிறார்கள்.

அந்தக் கூட்டமைப்பின் தலைவரான சமுத்திரக்கனி அதைத் தடுக்க ஒரு தந்திரம் செய்கிறார். அதன்படி அரசு பள்ளிகளுக்கு தங்கள் பள்ளிகளில் இருக்கும் திறமை வாய்ந்த ஆசிரியர்களை அனுப்பி அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்துவோம் என்று அறிவிப்பதுதான் அது.

ஆனால், அதன் பின்னணியில் அவருடைய திட்டம், தங்களிடம் உள்ள உதவி ஆசிரியர் மற்றும் பிற வேலை செய்பவர்களை ஆசிரியர்களாக அரசு பள்ளிகளுக்கு அனுப்பி அரசு பள்ளிகளின் தரத்தை தாழ்த்துவதுதான். அதன் மூலம் தனியார் பள்ளிகளில் மட்டுமே தரமான கல்வி கிடைக்கும் என்ற எண்ணத்தை மக்களிடம் உருவாக்க நினைக்கிறார் அவர்.

அப்படி தமிழ்நாட்டின் ஆந்திர மாநில எல்லையில் இருக்கும் அரசுப் பள்ளிக்கு அனுப்பப்படும் உதவி ஆசிரியரான தனுஷ், பள்ளியின் பக்கமே வராத மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க முயற்சி எடுத்து அவர்களை 100% பள்ளி இறுதித் தேர்வில் தேர்ச்சி பெறவும் வைக்கிறார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சமுத்திரக்கனி தனுஷுக்கு கொடுக்கும் தொல்லைகளும் அந்த தொல்லைகளை மீறி தனுஷ் என்ன சாதித்துக் காட்டினார் என்பதுதான் மீதிக்கதை.

முதலாளியின் தந்திரம் புரியாமல் தன்னுடைய திறமையைக் காட்டிப் பதவி உயர்வு பெற்று விட வேண்டும் என்று மாணவர்களுக்கு உற்சாகமூட்டுகிற அப்பாவி வாத்தியாக தனுஷ், அமர்க்களப் படுத்தியிருக்கிறார்.

ஆனால் அவர் நடை, உடை, சேட்டைகள் எதுவுமே ஒரு வாத்தியாருக்கானதாகத் தோன்றவில்லை. ஒரு மாணவன் போலவே இத்தனை நீளமுடி வைத்துக் கொண்டு கைச் சட்டையை எம்.ஜி.ஆர் (அவரும் வாத்தியார் என்பதாலா..?) போல் மடக்கி விட்டுக் கொண்டு வரும் அவரை ஆசிரியராக மாணவர்கள் ஏற்பார்களா என்பது தெரியவில்லை.

ஆனாலும் தனக்கென்று ஒரு மேனரிசம் வைத்துக் கொண்டு தனுஷ் தன் வேலையை சரியாகவே செய்திருக்கிறார். தனக்கு பிரச்சினைகள் வரும்போதெல்லாம் சமயோசிதமாக செயல்பட்டு அந்தப் பிரச்சினையை தீர்ப்பது சிறப்பாக இருக்கிறது.

அதில் ஒரு பகுதியாக ஊருக்குள் வரக்கூடாது என்ற கட்டுப்பாடு இருக்க அதை உடைத்து, நாடகக் கலைஞராக ராவணன், வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார் வேடங்களில் எல்லாம் ஊருக்குள் வந்து போய்க்கொண்டிருப்பது நல்ல கற்பனை.

அதில் பாரதியார் வேஷத்தில் வரும்போது வில்லனின் ஆட்களை ‘மோதி மிதிப்பது’வும் அற்புதம்.

அப்படிப்பட்ட அவரே துவண்டு போகும் நேரத்தில் தூக்கி நிறுத்தி அவருக்கு மோட்டிவேஷன் கொடுக்கும் விஷயத்தில் நாயகியாக வரும் சம்யுக்தாவின் பாத்திரம் சிறப்பு பெறுகிறது.

தனுஷ் – சம்யுக்தாவின் தோற்றங்கள் பன்னிரண்டாம் வகுப்பு மாணவனும் பத்தாம் வகுப்பு மாணவியும் காதலிப்பது போல்தான் தெரிகிறது. ஆனால் நல்ல வேளையாக நெருக்கமான காதல் காட்சிகள் எதுவும் அவர்களுக்கு வைக்கப்படவில்லை.

வழக்கமாக படங்களில் கல்விக்கான கருத்துகளை ‘சாட்டை ‘ அடியாக வெளுத்துக் கொண்டிருக்கும் சமுத்திரகனி, இதில் கல்விக்கு வில்லனாக வருவார் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க முடியாது. ஆனால் வில்லனின் பாய்ச்சலும் அவருக்கு வெல்லமாகி இருக்கிறது- மிரட்டுகிறார் மனிதர்.

தனுஷின் அப்பாவாக ஆடுகளம் நரேன், மாமாவாக ஹரிஷ் பெராடி வருவதெல்லாம் படத்துக்குப் பெரிய அளவில் உதவவில்லை. அதே போல்தான் தனுஷின் சக ஆசிரியர்களாக வரும் தணிகலபரணி உள்ளிட்ட சக ஆசிரியர்களின் பாத்திரங்களும்.

என்னதான் தமிழ்நாடு ஆந்திரா எல்லையில் நடக்கும் கதையாக இருந்தாலும் படத்தில் வரும் பாத்திரங்களும் பெரும்பாலும் தெலுங்கு முகங்களாகவே இருக்க ஒரு தமிழ் படம் பார்க்கும் அனுபவத்தை நாம் கொஞ்சம் இழக்கிறோம்.

காட்சி அமைப்புகளிலும் தெலுங்கு படங்களின் சிந்தனையே மேலோங்கி நிற்கிறது.

எனினும் படத்தில் ஆங்காங்கே வரும் அற்புதக் காட்சிகள் நம்மை படத்தில் ஒன்ற வைக்கின்றன. கல்வி கற்பதால் ஒன்றும் பலனில்லை என்று ஊர்த் தலைவர் சாய் குமார் சொல்லிக் கொண்டிருக்க, கல்வி எப்படி உன்னதமானது என்று அதற்கு தனுஷ் தரும் உதாரணம் காட்சி பளீர் பதில்.

அற்புதமாக நடித்திருக்கும் மாணவ மாணவி களில் கென் கருணாஸின் நடிப்பு அற்புதம். அவர்தான் பின்னால் கதை சொல்லும் கலெக்டராக உயர்ந்திருக்கிறார் என்று தெரிய வருகையில் புல்லரிக்கிறது.

ஜெ. யுவராஜின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம் சேர்க்கிறது. வழக்கமான ஜிவி பிரகாஷின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் இசை இதில் மிஸ்ஸிங். பின்னணி இசையில் அதை நேர்படுத்தி இருக்கிறார் ஜிவி.

பாடமாகக் சொல்ல வேண்டியதைப் படமாக சொல்லி இருப்பதாலோ என்னவோ, கமர்ஷியல் அம்சங்கள் பக்கம் கவனம் சிதறாமலேயே பார்த்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர் வெங்கி அட்லூரி. நல்ல படங்களுக்கு எப்போதும் ரசிகர்கள் ஆதரவு தருவார்கள் என்று அவர் உறுதியாக நம்பி இருக்கலாம்.

வாத்தி – பாடம் செல்லும் படங்களில் சேர்த்தி..!

– வேணுஜி