August 5, 2025
  • August 5, 2025
Breaking News
July 31, 2025

உசுரே திரைப்பட விமர்சனம்

By 0 147 Views

தமிழ்நாடு ஆந்திர எல்லைப் பகுதியான சித்தூர் பக்கம் நடக்கும் காதல் கதை. 

அது எப்படிப்பட்ட காதல், அதன் முடிவு என்ன என்பதை, புதிதாக காதல் திருமணம் செய்த நவகீதன் தன் காதல் மனைவிக்கு அதைக் கதையாக சொல்லிக்கொண்டே மலை ஏறுகிறார். ஏன் மலை ஏற வேண்டும்..? அதவும் அந்தக் காதல் காரணமாகத்தான்..!

அந்தக் கதை இதுதான்…

அந்த ஊர் குவாரியில் வேலை பார்க்கும் நாயகன் டீஜே அருணாச்சலம் தன் எதிர்வீட்டில் குடி வந்த நாயகி ஜனனியை பெரும் முயற்சி செய்து காதலிக்கிறார். இது ஜனனியின் அம்மா மந்த்ராவுக்குப் பிடிக்கவில்லை.

அதனால், டீஜேவை செருப்படி (!) உள்பட பல விதங்களில் அவமானப்படுத்துவதுடன் மகளை இரவோடு இரவாக வெளியூருக்கு அனுப்பி விடுகிறார். 

அருணாச்சலம் காதலியைத் தேடிப் பிடித்தாரா அவர்கள் காதல் கை கூடியதா என்பதைச்  சொல்கிறது மீதிக் கதை.

தலைப்பை உன்னிப்பாக கவனிப்பவர்களுக்கு இந்தக் காதல் எப்படி முடியும் என்பதைக் கண்டுபிடித்துவிட முடியும். ஆனால், அது எப்படி என்பது கொஞ்சம் திரில்லான சஸ்பென்ஸ்.

காதலுக்காக எதையும் செய்யத் துணியும் வேடத்துக்கு டீஜே அருணாச்சலம் பொருத்தமாக இருக்கிறார். 

ஆனால், காதலிக்காக அன்பான பெற்றோருக்கு கூடத் தெரியாமல் வீட்டுப் பத்திரத்தை வைத்துப் பணம் பெற்று மந்த்ரா விடம் தருவது அபத்தம்.

ஜனனி இன்னும் நடிக்கக் கற்றுக் கொள்ளலாம். ஆனாலும் அந்தக் குழந்தைத் தனமான நடிப்பையும் ரசிக்கலாம்.

ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவில் வந்து இம்சை தந்த மந்த்ரா, இதில் பலே வில்லியாக வந்து மகா இம்சை செய்கிறார்.

டீஜேவின் அன்பான பெற்றோராக வரும் கிரேன் மனோகர், செந்தி தம்பதி நிறைவாகச் செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவும், இசையும் நியாயமாக இருக்கின்றன

காதலுக்கு இதுவரை எப்படியெல்லாமோ பிரச்சினைகள் வந்திருக்கின்றன. இதில் வந்த பிரச்சினை வித்தியாசமானது. அந்த வகையில் இயக்குனர் நவீன் டி .கோபால் காதலுக்கு எதிரான வித்தியாசமான விஷயத்தைப் பிடித்திருக்கிறார்.

உசுரே – காதல் ஜாக்கிரதை..!

– வேணுஜி