வாழ்க்கையில் வெற்றி காண வெறும் கனவு மட்டும் போதாது – அதற்கேற்ற தன்னம்பிக்கையும் உழைப்பும் இருந்தால் உன்னாலும் என்னாலும் வெற்றி காண இயலும் என்பதுதான் இந்தப் படத்தின் கரு.
ஜெகா , ஏ.ஆர்.ஜெயகிருஷ்ணா, உமேஷ் ஆகிய புது முகங்கள்தான் இந்தப் படத்தின் நாயகர்கள். மூவருக்கும் வெவ்வேறு வகையில் பணப் பிரச்சினைகள். அந்தப் பணத்தை சம்பாதித்து கொண்டு வருவதுதான் வாழ்க்கையின் லட்சியம் என்று தனித்தனியாக சென்னை வந்த மூவரும் ஒரு கட்டத்தில் ஒன்று சேர்ந்து பணத்தை தேட ஆரம்பிக்க, அவர்களால் சாதிக்க முடிந்ததா என்பதுதான் கதை.
மூன்று நாயகர்களுக்கும் முதல் படம் என்பதால் பெயர் வாங்கி விட வேண்டும் என்ற வேகத்தில் நடிப்பு நடனம் என போட்டி போட்டு இருக்கிறார்கள்.
நாயகர்களில் ஒருவரான ஏஆர். ஜெயகிருஷ்ணாவே படத்தின் இயக்குனர். ஆனால் அவர் திறமை மற்ற இரண்டு நாயகர்களை விடக் குறைவாகத்தான் இருக்கிறது. கொஞ்சம் விஜய்யின் சாயலும், நடிப்பு மற்றும் நடனத் திறனும் கொண்ட உமேஷ் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்தால் முன்னுக்கு வர முடியும்.
இவர்களின் ஜோடிகளாக சஹானா, நிஹாரிகா, லுப்னா அமீர் நடித்திருக்கிறார்கள். மூன்று பேருமே சிறப்பாக நடனம் ஆடியிருக்கிறார்கள்.
எல்லோரும் புதுமுகங்களாக இருக்கவே பார்வையாளர்களை உள்ளே கொண்டு வரவும் மற்றும் வியாபார யுக்திகளுக்காகவும் சோனியா அகர்வால், டெல்லி கணேஷ், ராஜேஷ், ஆர். சுந்தர்ராஜன், ரவிமரியா, நெல்லை சிவா போன்ற அனுபவக் கலைஞர்களும் இணைந்து இருக்கிறார்கள்.
சோனியா அகர்வாலுக்கு வில்லி வேடம். டெல்லி கணேஷ் வழக்கம் போலவே நல்லவராகவும் அப்பாவியாகவும் நகைச்சுவை என்ற பெயரில் ஏதோ செய்து கொண்டிருக்கிறார்.
விபத்தில் ஒரு காலை இழந்தவராக வரும் ராஜேஷுக்கு சிகிச்சை செய்து தங்கள் அறையில் தங்க புகலிடம் கொடுக்கும் மூன்று நாயகர்களுக்கும் அவரே ஞான குருவாக இருந்து தன்னம்பிக்கையை வளர்க்க உதவுகிறார். அதை சரியாகவும், அழுத்தமாகவும் சொல்லாமல் விட்டது இயக்குனரின் குறை.
வில்லி சோனியா அகர்வாலின் கையாளாகவும், காதலராகவும் வரும் ரவி மரியா காரை ஓட்டுவதும், சோடா குடிப்பதுமாக, தாங்கித் தாங்கி நடப்பதோடு (அது ஸ்டைலாம்…) சரி..!
ஆர் சுந்தர்ராஜனும் நெல்லை சிவாவும் வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
படத்தின் ஆறுதல் ஒளிப்பதிவும் இசையும்தான். அனுபவமுள்ள கிச்சாஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். அவர்தான் படத்தைத் தேற்றி உள்ளார். பட்ஜெட் உதவி இருந்தால் இன்னும் பிரமாதப்படுத்தி இருப்பார்.
இசையமைப்பாளர் ரிஸ்வான் ஒரு பெரிய படத்திற்கான உழைப்பைப் போட்டுள்ளார். பாடல்களே படத்தின் ஆறுதல்.
மூன்று நாயகர்களும் என்ன காரணத்தால் கஷ்டப்படுகிறார்கள் என்பதை முதல் காட்சியிலேயே சொல்லிவிடும் இயக்குனர அதையே இடைவேளை வரை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருப்பது அலுப்பைத் தருகிறது.
விக்ரமன் படங்களில் இரண்டு மூன்று பார்த்து, காட்சிகளை அமைத்து இருந்தால் கூட படத்தைத் தேற்றியிருக்கலாம்.
ஆடி காரில் வரும் நாயகிகளில் ஒருவரது பின்புலம் மட்டும் சஸ்பென்ஸ் கலந்த ஆச்சரியமாக இருக்கிறது.
உன்னால் என்னால் – முதிராத முயற்சி..!