December 12, 2024
  • December 12, 2024
Breaking News
June 2, 2023

வீரன் திரைப்பட விமர்சனம்

By 0 450 Views

சென்ற தலைமுறையில் யாரையாவது திட்ட வேண்டும் என்றால் “உன் தலையில் இடி விழ…” என்பார்கள். அதையே கொஞ்சம் சயின்ஸ் பிக்சன் ஆக யோசித்து இருப்பார் போலிருக்கிறது இயக்குனர் ஏ.ஆர்.கே.ஷரவன்.

அப்படி சிறிய வயதில் ஹிப் ஹாப் ஆதியை மின்னல் ஒன்று தாக்க, அதிலிருந்து அவர் உடலில் இருந்து மின்சார சக்தி வெளிப்படுகிறது. அதனால் அவர் மிகவும் பியூஸ் போனவராக மாற, சந்தர்ப்பவாசத்தால் வெளிநாடு சென்று விடுகிறார்.

மீண்டும் சொந்த ஊரான கோயம்புத்தூர் வந்த நேரத்தில் அவர்கள் கிராமத்து வழியாக லேசர் மூலம் மின்சார சக்தியை உருவாக்கும் தனியார் நிறுவன கேபிள் பதிக்கும் வேலைகள் நடைபெற, அதனால் ஏற்படவிருக்கும் ஆபத்துக்கள் ஹிப் ஹாப் ஆதியின் கனவில் வருகின்றன.

எனவே அந்தத் திட்டத்தைத் தடுத்து நிறுத்த ஏற்கனவே போராடிக் கொண்டிருக்கும் உள்ளூர் இளைஞர்களுடன் சேர்ந்து தன் சக்தியையும் சேர்த்துப் போராட நினைத்த ஆதி வெற்றி கண்டாரா என்பது மீதிக்கதை.

நம்ம ஊர் ஹீரோக்களே சூப்பர் ஹீரோக்கள் ரேஞ்சுக்கு பறந்து பறந்து அடிப்பதும் இவர்கள் அடித்தால் அடி வாங்குபவர்கள் பறந்து போவதுமாக இருக்க நமக்கு ஒன்றும் இப்படியான சூப்பர் ஹீரோ கதை புதிது இல்லை என்றே தோன்றுகிறது. ஆனாலும் ஆதி போன்றவர்கள் அடித்தால் ஒருவர் பறப்பாரா என்ற கேள்வி நமக்குள் எழும் என்பது தெரிந்தே இதை சூப்பர் ஹீரோ கதை என்கிறார்கள் போலிருக்கிறது.

தன் வழக்கப்படியே வெள்ளந்தியாக சிரித்துக் கொண்டிருக்கும்  ஆதி இந்த படத்துக்காக குதிரை ஓட்டவும் கொஞ்சம் ஆக்சன் காட்சிகளில் நடிக்கவும் பயிற்சி எடுத்திருக்கிறார். அவர் போடும் ஒவ்வொரு சொடக்குக்கும் மின்சாரம் பாய்கிறது.

நாயகி என்று பெரிதாக கேரக்டரைசேஷனில் மெனக்கெடாமல் ஒரு இயல்பான கொங்கு நாட்டுப் பெண் எப்படி இருப்பாளோ அப்படியே தோன்றுகிறார் ஆதிரா ராஜ். ஆதியை காதலிப்பதைத் தவிர வேறு எந்த வேலையும் அவருக்கு இல்லை.

ஆதிக்கு ஆதிரா பேர் ராசி உத்தமம் என்று பிடித்திருப்பார்கள் போலிருக்கிறது.

விஞ்ஞானி வில்லனாக வினய் ராய். வினை விதைத்த ராய் என்றும் சொல்லலாம். இவர் கண்டுபிடிக்கும் ஒரு ஊசி மருந்தை மனிதனுக்குள் செலுத்தினால் கொஞ்ச நேரத்தில் அவன் கொழகொழப்பான திரவமாக மாறி கரைந்து விடுவான். எதற்கு அப்படி ஒரு மருந்து கண்டு பிடிக்கிறார் என்பதே தெரியவில்லை.

அவரது கண்டுபிடிப்புதான் லேசர் கதிர்கள் மூலம் மின்சாரம் உருவாக்கும் திட்டம். அப்பாவி ஊர் மக்கள் அந்தத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க கேபிள் போகும் வழியே இருக்கும் ‘வீரன் ‘ கோவில் பூசாரி மட்டும் அந்த வழியே கேபிள் போவதை ஆட்சேபிக்கிறார்.

கோயிலை அப்புறப்படுத்த ஆட்கள் வரும்போது எல்லாம் ‘(உண்மையாக நம்பும்) வீரன் வந்து காப்பாற்றுவான்’ என்று பூசாரி முழுமையாக நம்ப, அந்த நம்பிக்கையை வைத்தே அந்த சக்தி படைத்த வீரனாக சூப்பர் திறன் வாய்ந்த ஆதியே வந்து கோவிலைக் காக்கிறார். அதன் மூலம் லேசர் மின்சார திட்டத்தை தடுத்து விடலாம் என்பது அவர் எண்ணம்.

கதையைக் கேட்டால் சீரியசாக இருந்தாலும் அதை முழுக்க முழுக்க நகைச்சுவையாலேயே சொல்லி இருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள். 

குறிப்பாக முன்பாதியில் ஊராட்சித் தலைவராக இருக்கும் சின்னி ஜெயந்தை தன் மின்சார சக்தி மூலம் ஆதி ஆட்டி வைப்பதும் அவர் வெங்காய சாம்பார் வைக்க ஆயத்தமாவதும் சிரிப்புகள் வெடித்து சிதறும் இடம்.

அதேபோன்று ஒரு வெடிச்சிரிப்பு பின் பாதியில் ஆதிராவை திருமணம் செய்து கொள்ள வரும் மாப்பிள்ளை இடம்பெறும் காட்சிகள். ஒரு சுந்தர் சி படத்தில் எவ்வளவு சிரிப்போமோ அந்த அளவுக்கு சிரித்து வைக்கிறோம்.

வினய் ராயின் வில்லன் தம்பி கோவிலை இடிக்கவரும் போதெல்லாம் ஆதி தலையிட்டு அவனை சாமியாடச் செய்யும் இடங்களும் கலகலப்பானவை.

வீரன் கோவில் இருக்கும் இடத்தில் ஒரு கோவில் புதைந்து கிடப்பதாக சும்மா ஆதி கதை எடுத்துவிட அந்த கோவிலின் சரித்திரமே அப்படித்தான் என்பதெல்லாம் ஆன்மிக நம்பிக்கை கொண்டவர்களுக்கு பிடிக்கும் இடங்கள்.

போதாக்குறைக்கு முனிஷ் காந்த் ராமதாசும், காளி வெங்கட்டும் அடிக்கும் லூட்டிகள் தியேட்டரை அதிர வைக்கின்றன.

தன் ரேஞ்சுக்கு எப்படி வேண்டுமோ அப்படி இசையை ஆட்டுவித்துக் கொள்ளும் ஹிப் ஹாப் தமிழாவின் இசை இதிலும் வொர்க் அவுட் ஆகியிருக்கிறது.

தீபக் டி.மேனனின் ஒளிப்பதிவுக்கு திருஷ்டி சுற்றி போட வேண்டும் அவ்வளவு துல்லியம் – அவ்வளவு அழகு. கூடவே கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் இத்யாதிகளும் சேர்ந்து மின்சாரம் பாயும் இடங்களில் எல்லாம் ஒளி பாய்கிறது.

கிளைமாக்சில் வைத்து ஆதியை கார்னர் பண்ண நினைக்கும் வினய் ராய் அவருக்கு அந்த மேற்படி ஊசி மருந்தை செலுத்தும் நேரத்தில் வெளியில் டிரான்ஸ்பார்மர் பழுதாகி அந்தத் திட்டம் செயல்படாமல் போகிறது. அவ்வளவு பெரிய விஞ்ஞானி மின்சாரத்துக்கு பவர் பேக்கப் எல்லாம் வைத்துக் கொள்ளாமலா இருப்பார் என்பது போன்ற லாஜிக் சமாச்சாரங்களை யோசிக்காமல் இந்த படத்தைப் பார்த்தால் குழந்தையாகி ரசிக்கலாம்.

குழந்தை குட்டிகளைக் கூட்டிப் போனால் இன்னும் கூட ரசிப்பார்கள்.

வீரன் – மின்சார ஆதிண்ணா..!