November 22, 2024
  • November 22, 2024
Breaking News
June 23, 2018

டிராஃபிக் ராமசாமி விமர்சனம்

By 0 1366 Views

அப்போதெல்லாம் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரனைச் சொல்லும்போது ‘சட்டத்தைக் கையில் எடுத்து வைத்து விளையாடுபவர்’ என்பார்கள். அப்படித்தான் அவர் படங்களில் சட்டத்தைத் தன் கையில் எடுத்துக்கொண்டு குறுக்கும் நெடுக்குமாகப் போட்டு விளையாடுவார்.

அப்படிப்பட்ட அவரையே ஒரு கையிலும், சட்டத்தை இன்னொரு கையிலுமாக எடுத்து ‘ஜக்ளிங்’ விளையாட்டு விளையாடித் தள்ளியிருக்கிறார் அவரிடமே சினிமா பயின்ற விக்கி.

வாழும் உதாரணமாக இருக்கக் கூடிய சமூகப் போராளி ‘டிராஃபிக் ராமசாமி’யின் வாழ்க்கையை ஆவணப் படுத்த வேண்டுமென்றால் எவ்வளவு பொறுப்புடனும், கவனமாகவும் அந்த முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும்..? இப்படி அவர் வாழ்க்கையைப் படமாக்குகிறார்கள் என்று கேள்விப்பட்டதும் எப்படி மகிழ்ச்சியடைந்தோம்..?

ஆனால், அதில் துளி கூட அக்கறை செலுத்தாமல் எண்பதுகளில் ஒரு கமர்ஷியல் ஹீரோவுக்கு எழுதப்பட்ட கதை, திரைக்கதை போல் அவரது வாழ்க்கைக் கதையைத் திரையில் பதிவு செய்திருப்பது மிகவும் வேதனைக்குரியது.

போலீஸாரிடம் மற்றும் சமூக விரோதிகளிடம் அடி உதை பட்டுத்தான் சட்டரீதியாக டிராபிக் ராமசாமி நம் சமூகத்துக்குப் பல நன்மைகள் செய்திருக்கிறார் என்பதை மறுப்பதற்கில்லை. அதற்காக எண்பது கடந்த முதியவரான அவரைக் ‘காதலன்’ படத்தில் பிரபுதேவாவைத் தலைகீழாக அடித்துத் துவைப்பார்களே… அப்படியா நாள் கணக்காக வைத்து அடிப்பார்கள்..? என்ன அடித்தாலும் தாங்குவதற்கு அவர் என்ன எந்திரனா இல்லை வடிவேலுவா..?

ஆனால், நம்மைக் கண்கலங்க வைக்க வேண்டும் என்பதற்காக அப்படி அடிப்பதாகக் காட்டியும் நமக்குக் ‘கொட்டாவி’ தவிர வேறேதும் வரவில்லையென்பதுதான் ‘இம்பாக்ட்’.

நியாயத்தைச் சொன்னால் நக்கலடிக்கும் நீதிபதி, டான்ஸ் ஆடிக்கொண்டே சீட்டுக்கு வந்து டவாலியிடம் பரோட்டா ஆர்டர் பண்ணும் நீதிபதி… இன்னொரு நீதிபதி போலீஸுக்கே அல்வா கொடுத்த எஸ்.வி.சேகர்…(அவர் போலீஸ் அதிகாரியைப் பார்த்துக் கேட்கும் கேள்வி என்ன தெரியுமா… “ஒருத்தரை அரெஸ்ட் பண்ணினா அவரை 24 மணிநேரத்துல கோர்ட்ல புரட்யூஸ் பண்ணனும்னு உங்களுக்குத் தெரியாது..?” என்பதுதான்…) எஸ்.வி.சேகர் ‘சட்டத்துக்குக் கொடுக்கும் மரியாதை’ புரிந்த பார்வையாளர்கள் தியேட்டரில் கைகொட்டிச் சிரிக்கிறார்கள்.

இந்தப் படத்துக்குள் ‘எதெல்லாம் உண்மை, எதெல்லாம் உடான்ஸ்…’ என்று போட்டியே வைக்கலாம். ஒரு காட்சியில் டிராபிக் ராமசாமியாக வரும் எஸ்.ஏ.சியை சிலர் அடிக்க, குறுக்கே வரும் (விஜய் ஆண்டனியாகவே வரும்) விஜய் ஆண்டனி, “இவரை எனக்கு நல்லா தெரியும்…(எஸ்.ஏ.சியா தானே..?) விட்டுடுங்க..!” என்று அவர்களை அடித்துப் போட்டுவிட்டு அவரை மீட்கிறார்.

இந்தக் கதையை (?) விகடன் பிரசுரம் அச்சிட்டு (!), சீமானும், குஷ்புவும் அதை வெளியிட்டு (!!) அதை விஜய் சேதுபதி படிப்பதாகக் (!!!) காட்டுகிறார்கள்.

சரி… படித்து முடித்துவிட்டு விஜய் சேதுபதி ஏதோ செய்யப் போகிறார் அல்லது சொல்லப்போகிறார் என்று பார்த்தால் அவர் படித்து முடிக்க படமே முடிந்து விடுகிறது.

இப்படி ஆளாளுக்கு சட்டத்தை ஆணி வைத்து அடித்ததற்கும், நீதியரசர்களை கேலியாக சித்திரித்ததற்காகவும், ஒரு சமூகப் போராளியின் வாழ்க்கையை நையப்புடைத்து இனி யாருமே அவர் கதையைத் தொட முடியாத அளவுக்கு ஆக்கியதற்காகவும் யாரேனும் நினைத்தால் ஒரு பொதுநல வழக்குப் போடலாம்.

அதில் எஸ்.ஏ.சி என்கிற வயோதிகரை ஓட விட்டு, தலைகீழாகத் தொங்க விட்டு, சேற்றில் புரட்டி (விஜய் பார்த்தால் கண்ணீர் விட்டு விடுவார்..!) எடுத்ததற்காக முதியவர்கள் வன்கொடுமை குற்றத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.

டிராஃபிக் ராமசாமி – அவர் பட்ட துன்பங்களில் இந்தப் படமாக்கலும் சேர்ந்து கொள்ளும்..!

– வேணுஜி