January 24, 2026
  • January 24, 2026
Breaking News
August 7, 2019

அறிவுத் திருட்டுக்கு துணை போகலாமா டி.ராஜேந்தர்?

By 0 1135 Views

அறிமுக இயக்குனர் சதீஷ் கர்ணா என்பவரது இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்க உருவாகியுள்ள படம் ‘டைம் இல்ல’. இந்தப் படத்தை தயாரித்து அதில் ஹீரோவாகவும் நடித்தவர் மனோ பார்தீபன். சதீஷ் கர்ணாவும் படத்தில் நடித்திருக்கிறார்.

இந்தப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து சென்சார் ஆன பிறகு இப்படத்தை இயக்கிய சதீஷ் கர்ணாவை இப்படத்தில் இருந்து தூக்கிவிட்டு, தயாரிப்பாளர் மனோ பார்த்திபன் தானே இயக்குனர் என்றும் பெயர் போட்டுக் கொண்டதாகத் தெரிகிறது.

மேலும், இப்படத்தில் சதீஷ் கர்ணா நடித்த காட்சிகளையும் நீக்கி விட்டு அதில் மொட்டை ராஜேந்திரனை நடிக்க வைத்து மீண்டும் சென்சார் செல்லவிருக்கிறதாம் தயாரிப்பு தரப்பு.

Time Illa Movie

Time Illa Movie

“இது என்ன மாதிரியான திருட்டு வேலை..?” என்று புலம்புகிறார் இயக்குனர். “ஒரு படத்தை இயக்குவதைத் தனது வாழ்நாள் லட்சியமாக எடுத்துக்கொண்ட ஒரு இயக்குனருக்கு கிடைக்கும் இப்படிப்பட்ட அவமரியாதையை யார் வந்து கேட்பது..?” என்கிறார் அவர். தயாரிப்பாளரிடம்தான் கேட்க வேண்டும் இல்லையா..?

அப்படி தயாரிப்பாளரிடம் இயக்குனர் விளக்கம் கேட்டதற்கு, “இயக்குனர் பாலாவையே அவர் ரீமேக் பண்ண படத்துல இருந்து தூக்கி போடலியா..?” என்றாராம் அவர்.

“பாலாவைத் தூக்கிய அப்படக்கம்பெனி அவர் இயக்கிய ஒரு காட்சியைக் கூட பயன்படுத்தவில்லை என்பது தயாரிப்பாளர் மனோ பார்த்திபனுக்கு தெரியுமா… தெரியாதா..? ஒரு இயக்குனரை அந்தப் படத்திலிருந்து தூக்க வேண்டும் என்றால், நீங்கள் படம் முழுவதையும் வேறு ஒரு கதை கொண்டு அல்லவா எடுக்க வேண்டும்?” என்று இயக்குநர் கேட்டது தயாரிப்பாளரின் காதில் விழவில்லை.

இந்தப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை பிரபல இயக்குனர் நடிகர் டி.ராஜேந்தர் ஆதரவு கொடுத்து வெளியிட்டிருக்கிறார். அவருக்கு இந்த அறிவுத்திருட்டு பற்றித் தெரியுமோ, தெரியாதோ..?

“டி.ராஜேந்திரன் உயிருள்ள வரை உஷா இயக்கி முடித்த போது அவருக்கும் இதே போல சிக்கல் வந்தது. பல போராட்டத்துக்கு பின் தான் இயக்குனர் அடையாளமே அவருக்கு கிடைத்தது. அப்படி இருக்கும் போது ஒரு படைப்பாளியின் உணர்வை புரியாதவரா டி.ஆர்…?” என்று கேட்கும் இயக்குநர் சதீஷ் கர்ணா, தயாரிப்பாளர் நடிகர் மனோ பார்த்திபன் எந்த சமரசத்திற்கும் வராததால் வேறு வழியின்றி தனது அடையாளத்தை காப்பாற்றி கொள்ள முறைப்படி,சென்சார் போர்டு, கில்டு சங்கம், காவல்துறை என அனைத்து இடங்களிலும் புகார் கொடுத்திருக்கிறார்.

அங்கேயாவது அவருக்கு நீதி கிடைக்கட்டும்..!