தமிழ்ப்படவுலகின் பெருமைமிக்க இயக்குநர்களில் ஒருவரான சேரன் திரைப்படங்களை லாபகரமாக வெளியிடும் சி2எச் என்ற திட்டத்தைச் செயல்படுத்துவதில் மும்முரமாக இறங்கியிருந்தார். அந்த திட்டத்தால் அவர் இயக்குநராகச் செயல்படமுடியாமல் இருந்தது.
அதன் காரணமாகவே அவர் கடைசியாக இயக்கிய ‘ஜேகே’ படம் மிகத் தாமதமாக வெளிவந்ததிலும் அவர் மீண்டும் படம் இயக்குவது தாமதப்பட்டது. அந்தச் சிக்கல்கள் எல்லாவற்றிலும் இருந்து மீண்டு ‘திருமணம் (சில திருத்தங்களுடன்)’ என்ற படத்தை செய்து முடித்து மீண்டும் திரையுலகில் இயக்குநராகப் பிரவேசிக்கிறார்.
படத்தில் அவரே நடிக்க அவருடன் சுகன்யா நடிக்கிறார். இவர்களுடன் தம்பி ராமையா, அவர் மகன் உமாபதி ராமையா, காவ்யா சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்கும் ‘திருமணம்’ படத்தின் தலைப்பை நேற்று விஜய் சேதுபதி வெளியிட்டார். நிகழ்வில் நெகிழ்ந்த சேரன் பேசியதிலிருந்து…
“இடையில் சி2எச் திட்டத்தால் நான்கு வருடம் சின்ன தேக்கம் ஏற்பட்டது. தேக்கம் என்பதைவிட அதை அனுபவம் என்பேன். அதிலிருந்து மீண்டு நான் படமெடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டிய இந்தப்படத்தில் தயாரிப்பாளர்களை என் குடும்பம் நன்றியுடன் நினைவுகூரும். அவர்களின் அறிமுகம் என் மகளால் ஏற்பட்டது. அவள்தான் வெள்ளையப்பன் சாரை அறிமுகப்படுத்தினாள். அவர் பிரேம்நாத் சாரை அறிமுகப்படுத்தினார். இருவரையும் என் தெய்வங்கள் என்பேன்.
திருமணம் என்றதும் நம் வாழ்வில் பார்த்த, பார்க்கப்போகிற திருமணங்கள் நினைவுக்கு வரும். இந்தப்படத்தின் கதை ஒரு திருமணத்துக்கான ஏற்பாடுதான். திருமணம் நடந்ததும் படம் முடிந்துவிடும். திருமணத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற செய்திதான் படத்தில் இருக்கிறது. அதைத்தான் வழக்கமாக செய்வதைத் திருத்திச் செய்யச் சொல்லியிருக்கிறேன். இதை சிரிக்கச் சிரிக்கச் சொல்லியிருக்கிறேன்.
சுகன்யாவுக்கும், எனக்குமான போட்டி படத்தில் இருக்கும். தான் செய்வதுதான் சரி என்ற இறுமாப்புடன் கூடிய அவர்கள் கேரக்டர் படையப்பா நீலாம்பரியைப் போன்றது. நாயகி காவ்யாவை யதேச்சையாகச் சந்தித்தேன். இன்றைக்கு விஜய் சேதுபதி வருவதைக் கேட்டு ஆர்வத்தில் இரவெல்லாம் தூங்காமல் காலையில் லேட்டாக இங்கு வந்திருக்கிறார்.
விஜய் சேதுபதியை “சார்” என்றுதான் அழைப்பேன். நான் நார்வேயில் அவர் நடித்த ஒரு குறும்படத்தைப் பார்த்து எல்லா விருதுகளையும் அந்தப்படத்துக்கே கொடுத்தேன். அவர் நடித்து மணிகண்டன் இயக்கிய படம். நடிப்பதற்கு உடன் நடிகர்களே இல்லாத படத்தில் அவர் ஒவ்வொரு ஷாட்டையும் உணர்ந்து நடித்திருந்தார். எனக்கு இடையில் ஊக்கசக்தியாக இருந்தவர் அவர். எப்போது பேசினாலும் என்னைப் பார்க்க அவரே வந்துவிடுவார். அவர் கேட்டபடி அவருக்காக ஒரு கதை தயாராக இருக்கிறது… (விஜய் சேதுபதியைப் பார்த்து…) சார்… நீங்க டேட்ஸ் கொடுத்தீங்கன்னா எப்ப வேண்டும்னாலும் அந்தப்படத்தை ஆரம்பித்து விடலாம்..!
என் எல்லா நிலையிலும் என்னைப் பற்றிய ஒரு தவறான செய்தி கூட வராமல் பார்த்துக் கொண்டவர்கள் பத்திரிகையாளர்கள்தான். என் எல்லாப் படங்களையும் கொண்டாடியவர்கள் நீங்கள். பின்னணி இசை சேர்ப்பு முடிந்ததும் படம் வெளியீட்டுக்குத் தயாராகி விடும்..!”
வாங்க சேரன்… மகிழ்ச்சி..!