சில சமயங்களில் சினிமாக் கதைகளைவிட அந்த சினிமா தயாரான பின்னணிக் கதை சுவையானதாக இருக்கும். அப்படித்தான் அமைந்திருக்கிறது உஷா சினி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ராமநாதன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வி.பி.நாகேஸ்வரன் இயக்கியிருக்கும் ‘தொட்டு விடும் தூரம்’ படம்.
படம் என்னவோ காதல் கதையைச் சொன்னாலும் இந்தப்படம் ஆரம்பித்த புள்ளி நட்பிலானது. தயாரிப்பாளர் ராமநாதனும், இயக்குநர் நாகேஸ்வரனும் பள்ளிக்கால நண்பர்கள். இன்னும் சொல்லப்போனால் ராமநாதன் வீட்டில்தான் நாகேஸ்வரன் வளர்ந்தார் எனும் அளவுக்கு இருவரும் நண்பர்கள். காலப்போக்கில் இருவரும் வெவ்வேறு துறைகளுக்குப் போனதில் நாகேஸ்வரன் சினிமாவுக்கு வந்து இந்தப்படத்தை ஆரம்பித்திருக்கிறார்.
ஆனால், தயாரிப்பில் சில சிக்கல்கள் வந்து நிற்க நண்பனும், நல்லாசிரியனுமான ராமநாதன் உள்ளே வந்து தானே தன் நண்பனுக்காக முழுப்படத்தையும் தயாரித்திருக்கிறார். இவர்கள் இருவரின் நல்லெண்ணத்தைப் புரிந்துகொண்டு படத்தைப் பற்ரியும் தெரிந்து கொண்ட ‘புலி’ பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் இந்தப்படம் வெளியாக சகல விதங்களிலும் உதவி புரிந்திருக்கிறார். அவருடன் இன்னொரு நண்பரான ஆர்.சுரேஷும் ஒத்துழைத்து தயாரிப்பில் பங்கெடுத்திருக்கிறார்.
சரி… படம் என்ன சொல்கிறது..?
கிராமத்தில் இருந்து காதலியை தேடி வரும் காதலனின் ஒரு காதல் பயணம்தான் கதை. அத்துடன் இப்படத்தில் காதலோடு, அம்மா, மகன் செண்டிமெண்டை அழகாகவும், அழுத்தமாகவும் சொல்லியிருக்கிறார்களாம். அத்துடன் கடைசியில் சமுதாயத்துக்கு ஒரு நல்ல கருத்தையும் முன்வைத்திருக்கிறார்கள்.
இப்படத்தில் விவேக் ராஜ் ஹீரோவாக நடிக்க, மோனிகா சின்னகொட்லா ஹீரோயினாக நடித்திருக்கிறார். இவர்களுடன் சீதா, சிங்கம் புலி, பாலசரவணன், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பல அனுபவம் வாய்ந்த முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
“ஹீரோ, ஹீரோயினுக்கான சந்திப்பு, அவர்களது காதல் பயணம் போன்ற விஷயங்கள் நிச்சயம் ரசிகர்களின் இதயங்களைத் தொட்டு விடும், அதே சமயம் படத்தில் சொல்லப்பட்டிருக்கும் மெசஜ் மற்றும் அதை சார்ந்து சொல்லப்பட்டிருக்கும் செண்டிமெண்ட், யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக இருக்கும்.!’ என்றார் இயக்குநர் வி.பி.நாகேஸ்வரன்.
நோவா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கே.ராம்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கே.ராம்பாதி பாடல்கள் எழுத, வீரசெந்தில் ராஜ் படத்தொகுப்பு செய்திருக்கிறார். ராதிகா நடனம் அமைக்க, இளங்கோ சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். ஆர்.சுரேஷ் இணை தயாரிப்பை மேற்கொண்டிருக்கிறார்.
2020 ஆம் ஆண்டில் முதல் வெள்ளிக்கிழமை ஜனவரி 3-ல் வெளியாகும் ஏழு படங்களில் ஒன்றான ‘தொட்டு விடும் தூரம்’ படத்துடன் எத்தனைப் படங்கள் வெளியானாலும் ரசிகர்களிடம் வரவேற்பு பெறும் படமாக இருக்கும் என்று தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
‘தென்மேற்கு பருவக்காற்று’ உள்ளிட்ட பல சிறு முதலீட்டு படங்களின் ரிலீஸுக்கு பக்கபலமாக இருந்த தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார், இப்படத்தின் மீது நம்பிக்கை வைத்து பட வெளியீட்டுக்கு உதவி செய்திருப்பது கோலிவுட்டில் முக்கிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
நண்பர்கள் கைகோர்த்திருக்கும் இந்தபடத்தின் வெற்றி அவர்கள் தொட்டு விடும் தூரத்தில்தான் இருக்கிறது என்று நம்பிக்கை வைக்கலாம் போல்தான் இருக்கிறது..!