சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் இன்று (மே 10) காலை திருநெல்வேலியில் காலமானார். ‘ஒரு கடலோரக் கிராமத்தின் கதை’, ‘சாய்வு நாற்காலி’ போன்ற படைப்புகளை தமிழுக்கு அளித்த பெருமைக்குரியவர் அவர்.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டத்தில் உள்ள தேங்காப்பட்டினம் எனும் கிராமத்தில் செப்டம்பர் 26, 1944ஆம் ஆண்டில் தோப்பில் முகமது மீரான் பிறந்தார். இவருக்கு ஜலீலா மீரான் என்ற மனைவியும், ஷமீம் அகமது, மிர்சாத் அகமது என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.
மலையாள எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீரின் எழுத்தால் உந்தப்பட்டு எழுத தொடங்கிய இவர், புதினங்கள், சிறுகதைத் தொகுப்புகள், மொழிபெயர்ப்புகள் உட்பட 22 படைப்புகளுக்கும் மேல் எழுதியுள்ளார்.
கடலோர கிராமத்தின் அழகியலையும், அறியப்படாத கடலோர இஸ்லாம் சமூகத்தின் வாழ்வியலையும் தனது படைப்புகளில் தந்தவர் மீரான். முழுமையான மலையாளமும் இல்லாமல், தமிழும் இல்லாமல் இருக்கும் கேரள தமிழக எல்லையான கன்னியாகுமரியின் தனித்துவமான வட்டார வழக்கை தனது எழுத்தில் பதிவு செய்தவர்.
முதலாளி வர்க்க மனோபாவத்தின் மீதான எதிர்ப்பை தனது அரசியலாகக் கொண்டவர். எழுத்தாளர்கள் சுந்தர ராமசாமி, கி. ராஜநாராயணன், இந்திரா பார்த்தசாரதி, தி.க. சிவசங்கரன், ஆ. மாதவன், வாஸந்தி ஆகியோருடன் நெருக்கமான நட்புறவை கொண்டிருந்தார்.
‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’ , ‘சாய்வு நாற்காலி’, ‘கூனன் தோப்பு’, ‘துறைமுகம்’ ஆகியன இவரது கவனிக்கத்தக்க படைப்புகள். இதில் ‘சாய்வு நாற்காலி’ என்ற நாவல் 1977ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருதைப் பெற்றது. மேலும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருது, இலக்கியச் சிந்தனை விருது, தமிழக அரசு விருது என முக்கியமான விருதுகளையும் தனது படைப்புகளுக்காக பெற்றுள்ளார். மீரானின் கடைசி நாவலாக ‘குடியேற்றம்’, 2017ஆம் ஆண்டு வெளியானது.
இந்நிலையில், 74 வயதான தோப்பில் முகமது மீரான் உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டு திருநெல்வேலியில் உள்ள பேட்டை என்ற இடத்தில் இன்று காலை காலமானார். வீரபாகு நகரில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள இவரது உடல், இன்று மாலை பேட்டையிலுள்ள பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்படவுள்ளது.
தோப்பில் முகமது மீரான் மறைவுக்கு அனைத்து தரப்பிலுள்ள பெருமக்களும், வாசகர்களும் நேரிலும், சமூக வலைதளங்களிலும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.