இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பில் பல்வேறு பண்பாட்டு நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வருகிறார். அவற்றுள் மிக முக்கியமான ஒன்று “மார்கழியில் மக்களிசை” ஆகும்.
ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் சென்னையில் நடைபெற்று வந்த இந்நிகழ்வு, இந்த ஆண்டு கோவை, மதுரை, சென்னை ஆகிய பெருநகரங்களில் நடைபெற்றது. கோவை மற்றும் மதுரையில் ஒரு நாளும், சென்னையில் 8 நாட்களும் மிகவும் கோலாகலமான எளிய உழைக்கும் மக்களின் இசைத்திருவிழாவாக இது நடைபெற்று முடிந்திருக்கிறது.
முத்தாய்ப்பாக கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விசிக தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் MP, திமுக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், மாநிலங்களவை உறுப்பினர் டிகேஎஸ் இளங்கோவன், சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பேசிய கனிமொழி MP, “இந்த மேடையில் இசைக்கப்படும் இசை அடக்கமறு என்பதை பறைசாற்றும் வகையில் இருக்கிறது. இரஞ்சித் மற்றும் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்” என்றார்.
ஆம்ஸ்ட்ராங் பேசும்பொழுது, “இரஞ்சித் ரீல் இல்லை ரியல்” என்று வாழ்த்தினார்.
நிறைவாக பேசிய தொல். திருமாவளவன் MP,
“சகோதரன் பா.இரஞ்சித் பண்பாட்டுதளத்தில் மிக நுட்பமாக தனது செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறார் . நீலம் பண்பாட்டு மையம் நிகழ்த்திவரும் இசைவடிவம் எதிர்ப்பின் இசைவடிவமல்ல இதுவே ஆதி இசைவடிவம் , இதுவே இந்த மண்ணின் இசை. எங்கோ ஓர் பெயர் தெரியாத ஊர்களில் பாடிக்கொண்டு அறியப்படாத கலைஞர்களாக வாழ்ந்து வந்தவர்களை அழைத்து வந்து இப்படிப்பட்ட ஒரு மேடையை அமைத்து அவர்களுக்கான அங்கீகாரத்தையும், நலிந்த கலைஞர்களுக்கு பொருளுதவியையும் அளித்துவரும் இயக்குனர் இரஞ்சித்தை பாராட்டுகிறேன்.
இயக்குனர் பா. இரஞ்சித் பண்பாட்டு தளத்தில் முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை நிற்க்கும்” என்று பேசினார்.