July 22, 2025
  • July 22, 2025
Breaking News
June 1, 2025

THE VERDICT திரைப்பட விமர்சனம்

By 0 108 Views

தலைப்பு தொடங்கி முழுப் படமுமே ஒரு ஆங்கிலப் பட அனுபவத்தைத் தருகிறது. போதாக்குறைக்கு முழுப் படமும் நடப்பது அமெரிக்காவில் என்று இருக்க ஒரு ஹாலிவுட் கோர்ட் டிராமா படமாகவே இதை உணர முடிகிறது.

வயதான பெண்மணி ஒருவர் இறந்த கேசில் நாயகி சுருதி ஹரிஹரன் கொலையாளியாக குற்றம் சாட்டப்படுகிறார். அவருக்காக வரலட்சுமி சரத்குமார் வாதாட, படம் முழுக்க ஒரு நீதிமன்ற வாதாடல்களிலேயே சென்று என்ன தீர்ப்பு வருகிறது என்பதைச்  சொல்கிறது கதை.

நம் தமிழ்ப் படங்களில் காட்டப்படும் இந்திய நீதிமன்றங்கள் ஒவ்வொரு படத்தில் ஒவ்வொரு மாதிரி இருக்கும். ஆனால் ஹாலிவுட் படங்களில் நாம் அறிந்தவரையில் அமெரிக்க நீதிமன்றங்கள் எப்படி இருக்கின்றனவோ அதன் அடிப்படையிலேயே இந்த படத்தின் நீதிமன்றமும் இயல்பாக அமைந்துள்ளது. 

ஒரு வழக்கின் அன்றாட நகர்வுகளை ஜூரிகள் அடங்கிய ஒரு பென்ச் முடிவு செய்து அதன் அடிப்படையில் நீதிபதி தீர்ப்பை வழங்குவது என்பது அமெரிக்க நடைமுறை. அதை அப்படியே படமாகத் நடித்திருப்பது படத்தின் நம்பகத்தன்மையை கூட்டுகிறது. 

(இறந்து போன) வயதான பெண்மணியாக வருகிறார் சுகாசினி மணிரத்னம். அவரையும் வரலட்சுமியையும் பார்த்தால் மட்டுமே நாம் ஒரு தமிழ்ப் படம் பார்க்கிறோம் என்கிற எண்ணமே ஏற்படுகிறது. 

சுகாசினி நடிப்பு பற்றி சொல்லவே வேண்டியதில்லை. அதிலும் வயதான பெண்மணி என்பதால் அந்த உடல் மொழியுடனேயே நடித்து அசத்தியிருக்கிறார். தனிமையில் வாழ்வதால் சுருதி ஹரிஹரனின் அன்பு கிடைத்ததும் அவரைத் தன் சொந்த மகளாகவே பாவித்து ஒரு தாய்ப் பாசத்துடன் பழகுவது நெகிழ வைக்கிறது. 

ஸ்ருதியும் அப்படியே…. அமெரிக்கா வந்து மேம்பட்ட பணக்கார வாழ்க்கை வாழ வேண்டும் என்கிற கனவுகளுடன் வரும் சாமானிய பெண்ணாக அறிமுகமாக சுகாசினி உடனான நட்பு கிடைத்ததும் அதைத் தொடர்ந்து தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளும் பக்குவத்தை ‘தம்’ கட்டி நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார். 

அவருடைய வழக்கறிஞராக வரும் வரலட்சுமி சரத்குமார்தான் படத்தைத் தூக்கிச் செல்லும் காரணியாக வருகிறார். ஸ்ருதியின் மொத்த நம்பிக்கையும் அவராக இருக்க, இவர் ஜெயித்து விட வேண்டுமே என்று நமக்கு கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க பதை பதைப்பாக இருக்கிறது. 

நீதிமன்ற தீர்ப்பு நல்ல விதமாக வந்த பின்னாலும் வரலட்சுமியின் நடவடிக்கைகள் நமக்கு சந்தேகமாக இருக்க, அதன் முடிவு ஆச்சரியத்தைத் தருகிறது.

யோகி பாபு இல்லாத குறைக்கு பெண்களின் தரப்பில் வித்யுலேகா ராமன் வருகிறார். ஆனால் அப்படியெல்லாம் காமெடியாக இல்லாமல் கொஞ்சம் சீரியஸ் ஆகவே வருகிற பாத்திரம்.

இத்தனை பெண்களுக்கு மத்தியில் தனி ஒரு ஆணாக வருகிறார் பிரகாஷ் மோகன்தாஸ். முகத்தில் எந்தச் சலனமும் காட்டாமல் நடித்திருப்பது ஆரம்பத்தில் இவருக்கு நடிக்க தெரியவில்லையோ  என்று நினைக்க வைத்தாலும் போகப்போக அதன் ஆழம் புரிகிறது. 

இவரைத் தவிர படத்துக்குள் வரும் இன்னொரு ஆண் பாத்திரம் சுகாசினி வீட்டில் வேலை செய்யும் பட்லர். சுருதிக்கு ஈடாக சுகாசனியின் மரணத்தில் இவரும் ஒரு சந்தேகக் கேசாக இருக்க அதன் பின்புலமும் சஸ்பென்ஸ் ஆக இருக்கிறது. 

நீதிமன்றம் ஒரு தீர்ப்பைத் தந்தாலும்.. அது நியாயமாக இருந்தாலும்… அதற்குப் பின்னால் ஒரு இறுதித் தீர்ப்பை தருவது படத்தின் தலைப்புக்கு பொருத்தமாக அமைகிறது. 

அந்த வகையில் ஒரு புதுமையான அனுபவத்தை நமக்குத் தந்திருக்கிறார் இயக்குனர் கிருஷ்ணா சங்கர். 

படத்தில் வரும் பாத்திரங்கள் தமிழ் பேசும்போது ஆங்கிலத்தில் சப்டைட்டில் வருவதும் ஆங்கிலத்தில் பேசும்போது தமிழில் சப்டைட்டில் வருவதுமாக அதிலும் கூட ஒரு புதுமையான அனுபவத்தைத் தந்திருக்கிறார் இயக்குனர். 

படத்தின் ஒளிப்பதிவும், கோணங்களும் பாத்திரங்களின் சின்னச் சின்ன உணர்வுகளும் ஒரு ஆங்கிலபப் பட அனுபவத்தையே ஏற்படுத்தி இருக்கிறது.

எனவே, முழுக்க ஆங்கிலத்திலேயே பேச விட்டு ஆங்கிலப் படமாக ஹாலிவுட்டிலேயே வெளியிட்டு இருந்தாலும் பெருமையாகத்தான் இருந்திருக்கும். அதற்குரிய தரம் படைப்பில் இருக்கிறது. 

ஆதித்யா ராவின் இசை மட்டும் அங்கங்கே இது ஒரு இந்திய படம் என்பதை நினைவுபடுத்தும் விதமாக அமைந்திருக்கிறது. 

தி வெர்டிக்ட் – பெண்மை போற்றுதும்..!

– வேணுஜி