இந்த வருட தீபாவளிக்கு ரசிகர்களை மகிழ்விக்க மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸில் (MCU) இருந்து வெளியாகியிருக்கும் 33 ஆவது சூப்பர் ஹீரோ திரைப்படம் ‘தி மார்வெல்ஸ் (2023)’.
இந்தப்படம், 2019 இல் வெளிவந்த ‘கேப்டன் மார்வெல்’ எனும் படத்தின் தொடர்ச்சியாகும். ப்ரீ லார்சன் நடிப்பில் வெளியான அந்தப் படத்தின் மூலம், MCU இன் முதல் பெண் சூப்பர் ஹீரோ கேப்டன் மார்வெலை உளகளாவிய பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்தது.
கேப்டன் மார்வெலின் சக்தியைக் கண்ட பிறகே நிக் ப்யூரிக்கு அவெஞ்சர்ஸ் அணியை உருவாக்கும் உத்வேகம் பிறந்து, கெரோல் போன்ற சூப்பர் ஹீரோக்களைக் கண்டுபிடித்து, உலகைக் கண்காணிக்கும் பொறுப்பினை அவெஞ்சர்ஸ்க்கு வழங்கத் தூண்டியது.
‘தி மார்வெல்ஸ்’ படத்தில், கொடுங்கோல் க்ரீக்களிடம் இருந்து தனது அடையாளத்தை மீட்டெடுக்கிறார்.
இப்படம், கேப்டன் மார்வெல், மோனிகா ரேம்போ, மிஸ் மார்வெல் முதலிய மார்வெல் காமிக்ஸ் கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டது.
இதில், கெரோல் டான்வெர்ஸ் எனும் கேப்டன் மார்வெலாக ப்ரீ லார்சனும், ஃபோட்டான் எனும் மோனிகா ராம்போவாக டியோனா பாரிஸும், கமலா கான் எனும் மிஸ் மார்வெலாக இமான் வெல்லானியும் நடித்துள்ளனர்.
கதை இதுதான்…
பெரும் அழிவுசக்திகளை உருவாக்கி வில்லனால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நட்சத்திரக் கூட்டத்தைக் (Galaxy) காக்க மூன்று சக்திவாய்ந்த சூப்பர் ஹீரோக்கள் ஒன்றிணைகின்றனர்.
ஆனால், எதிர்பாராத விளைவுகளால் நிலைகுலையின் பிரபஞ்சத்தின் சமநிலையைக் காக்கும் பொறுப்பு கேப்டன் மார்வெலுக்கு ஏற்படுகிறது.
அவரது கடமைகள் அவரை ஒரு க்ரீ புரட்சியாளருடன் இணைக்கப்பட்ட ஓர் இயல்பிற்கு முரணானதொரு வார்ம் ஹோலுக்குள் அனுப்பும்போது, அவரது சக்திகள் ஜெர்சி நகரத்தின் சூப்பர் ரசிகையான கமலாகான் எனும் மிஸ். மார்வெலிடமும், கெரோலை விட்டுப் பிரிந்த மருமகள் கேப்டன் மோனிகா ரேம்போவிடமும் சிக்கிக் கொள்கின்றன.
இந்த மூவர் கூட்டணி ஒன்றிணைந்து, பிரபஞ்சத்தைக் காப்பாற்றும் வேலையில் தங்களை ‘தி மார்வெல்ஸ்’ ஆகப் பணியாற்றக் கற்றுக் கொள்வதுதான் இந்தப்படத்தில் சொல்லப் பட்டிருக்கிறது.
வழக்கம்போல் கிராபிக்ஸ் காட்சிகள் அசத்தும் இந்தப்படத்தில், பல நூறு பேர் பயணிக்கும் விண்கலம் பழுதாகி தப்பிக்கும் கலத்தில் ஒரு சிலரே பயணிக்க முடியும் என்ற நிலையில் பூனைகள் எல்லா பயணர்களையும் விழுங்கி தப்பிக்கும் காட்சி குழந்தைகளைக் கவரும்.
முப்பரிமாண திரையிடல் இந்தப்படத்தின் சிறப்பம்பம்.
சாமுவேல் எல்.ஜாக்சன், மோஹன் கபூர், சாகர் ஷேக் முக்கிய பாத்திரங்களை ஏற்கும் படத்தை நியா டா கோஸ்டா இயக்கி இருக்கிறார்.
ஷான் பாபிட் ஒளிப்பதிவு செய்திருக்க, லாரா கார்ப்மேன் இசையமைத்திருக்கிறார்.
ஆங்கிலப் படமாக இருந்தாலும் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி இருப்பதால் அனைத்து மொழியினரும் இந்த தீபாவளி விடுமுறையில் இந்தப் படத்தைக் கண்டு களிக்கலாம்.