December 2, 2024
  • December 2, 2024
Breaking News
November 13, 2023

நம் கருத்துக்கு வராத போதை உலகில் இளைஞர்கள் சீரழிகிறார்கள் – QG இயக்குனர்

By 0 286 Views

தமிழில் அவ்வப்போது நம் புருவத்தை உயர்த்த வைக்கும் முயற்சிகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அடுத்து அந்த வரிசையில் வரவிருப்பது QG என்ற தமிழ் திரைப்படம்.

அதென்ன QG என்கிறீர்களா..? ‘கொட்டேஷன் கேங்’ என்ற தலைப்பின் சுருக்க வடிவம்தான் இது. கொட்டேஷன் கேங் என்பது நம் கண்ணுக்கு தெரியாமல் நம் சமுதாயத்துக்குள்ளே இயங்கிக் கொண்டிருக்கும் நிழல் உலக தாதாக்கள் குழுதான்.

வெளியான இந்த படத்தின் டிரைலரில் “இவர்களா இப்படி..?” என்கிற அளவில் பிரியாமணியும், சாராவும் நடித்திருக்கிறார்கள். இவர்களைத் தவிர படத்தில் ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராப்  மற்றும் சன்னி லியோன் ஆகியோர் முக்கிய வேடமேற்கிறார்கள்.

காயத்ரி சுரேஷ், விவேக் கண்ணனுடன் இணைந்து பிலிமினாட்டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்ரீ குருஜோதி பிலிம்சுக்காக தயாரித்திருக்கும் ‘கொட்டேஷன் கேங்’ படம் விரைவில் வெளியாக இருக்க, இந்தப் படம் பற்றி உரையாடினார் படத்தின் இயக்குனரான விவேக் கே.கண்ணன்.

கொட்டேஷன் கேங்’  கேரளத்தில் அறியப்படும் ஒரு பெயர். அது தமிழகத்திலும் இருக்கிறதா..?” என்ற கேள்விக்கு அவரது பதில்…”இல்லை. ஆனால், இந்தப் பெயரோடு இல்லாமல் வேறு சில தவறுகள் இங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன முக்கியமாக போதை வஸ்துகள் இங்கே கணிசமாகப் புழங்குகின்றன

நம் கருத்துக்கு வராத அந்த போதை உலகத்தில் நம் இளைஞர்கள் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. பத்திரிகைகளில் வந்த இந்த போதை சாம்ராஜ்யம் பற்றி அறிந்து, எனக்குத் தெரிந்த சில இளைஞர்கள் வாழ்க்கையை வைத்து இந்தப் படத்தை இயக்கியிருக்கிறேன்..!”

இருந்தாலும் நமக்கு தெரியாத உலகத்தை இப்படி படத்தில் காட்டுவது சரியா… குறிப்பாக இந்தப் படத்தில் நடித்திருக்கும் சாரா, போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர் போல் தெரிகிறது. இது போதைப் பழக்கத்தை இளைஞர்களிடம் ஊக்குவிக்காதா..?”

“எதனால் இளைஞர்கள் அந்த போதைப் பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள் என்பதை சொன்னால்தான் அதிலிருந்து எப்படி மீள முடியும் என்பதையும் மீண்டவர்களின் கதை என்ன என்பது பற்றியும் புரிந்து கொள்ள முடியும்.

இது போதைக்கு அடிமையானால் எத்தனை இன்பம் வரும் என்றெல்லாம் ஊக்குவிக்கும் படமாக நிச்சயமாக இருக்காது. கடைசியில் அதில் சிக்குண்ட சாரா எப்படி மீள்கிறார் என்பது பற்றியும் தன் வாழ்க்கை இதனால் எவ்வளவு கெட்டுப் போனது என்பது பற்றியும் புரிந்து கொள்வதாக வருவதால் இது இளைஞர்களுக்கான விழிப்புணர்வு படமாகவும் எச்சரிக்கை படமாகவும் தான் இருக்கும். தந்தைக்கும் மகளுக்குமான பாசமும் இந்த படத்துக்குள் இருக்கிறது.

சாராவின் பருவத்தில் இருக்கும் பெண்தான் இதற்குப் பொருத்தமானவராக இருப்பார் என்று அவரது தந்தை அர்ஜுனிடம் பேசிய போது அவர் மகள் இப்படி நடிப்பதற்கு ஒத்துக் கொள்ளவில்லை – மறுக்கவே செய்தார். ஆனால், படத்தின் தன்மைகளை அவருக்குத் தெளிவாக எடுத்துரைத்து இதனால் எந்த பாதிப்பும் வராது என்று புரிய வைத்தே அவரை ஒத்துக்கொள்ள வைத்தேன்.

சின்னப் பெண் சாராவும் நான் சொல்வதைப் புரிந்து கொண்டு மிக அழகாக நடித்திருக்கிறார்.அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லாதவாறு நான் மிகவும் பொறுப்புடன் இந்தப் படத்தை எடுத்திருப்பதாக நினைக்கிறேன்.

இதே போல் தான் இந்த படத்துக்குள் ஜாக்கி ஷெராப், சன்னி லியோன், பிரியாமணி, விகாஸ் வாரியர் முதலானவர்களும் வந்திருக்கிறார்கள். அவர்கள் ஏற்று இருக்கும் பாத்திரங்களும் கூட இதுவரை நாம் அதிகம் அறிந்திடாத நிழல் உலகத்தைப் பற்றியே இருக்கும்.

இந்தப் படத்துக்கு வித்தியாசமான இசை வேண்டி டிரம்ஸ் சிவமணியை ஒப்பந்தம் செய்தேன். அவரும் தன்னுடைய அதிகபட்சத திறமையை வைத்து இந்தப் படத்தின் பாடல்களையும், பின்னணி இசையையும் அற்புதமாக அமைத்திருக்கிறார்.

அதைப்போல் அருண் பத்மநாபனின் ஒளிப்பதிவும். இந்தப் படத்துக்கு புதிய நிறத்தை தந்திருக்கிறது..!”

படத்தின் டிரைலரைப் பார்க்கும்போது தண்டுபாளையம் நினைவுக்கு வருகிறது அதைப் போன்று இந்தப் படம் இருக்குமா..?

“நான் இந்தக் கதையை யோசிக்கும் போதே இது தண்டுபாளையம் போல் வந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். வெறும் வன்முறையும் தீய பழக்கங்களை பற்றி மட்டுமே சொல்லும் படமாக இல்லாமல் இந்தப் படம் நிச்சயமாக ஒரு விழிப்புணர்வுப் படமாக இருக்கும்.

இதனால் இந்தப் படத்தை இளைஞர்கள் மட்டுமல்லாது அவர்களுடைய பெற்றோரும் கண்டிப்பாக பார்க்க வேண்டும். ஏனென்றால் இன்றைய பெற்றோருக்குத் தங்கள் குழந்தைகள் தன் கண்ணுக்கு தெரியாமல் என்னென்ன செய்கிறார்கள்… எப்படி வளர்கிறார்கள் என்பது தெரியாமலேயே இருக்கிறது.

போதைப் பழக்கத்தில் சிக்கிக்கொண்ட பல இளைஞர்களின் குடும்பங்களில் இருக்கும் பெற்றோரின் நிலையும் இதுதான். அதனால் அவர்களை எப்படி வளர்க்க வேண்டும் என்று பெற்றோருக்கு அறிவுறுத்தும் படமாகவும் இந்த ‘கொட்டேஷன் கேங்’ இருக்கும்..!”

நல்ல விஷயத்தைச் சொன்னால் நல்ல விஷயம்தான்..!