April 2, 2025
  • April 2, 2025
Breaking News
March 27, 2025

தி டோர் திரைப்பட விமர்சனம்

By 0 63 Views

ஒரு கதவு – அந்தக் கதவுக்குப் பின்னால் என்ன நடக்கிறது… அல்லது அதைத் திறந்தால் என்ன நடக்கும் என்பது மாதிரியான எதிர்பார்ப்பில் போனீர்களானால் நீங்கள் ஏமாற்றப்படுவீர்கள்.

இன்னும் சொல்லப் போனால் படத்தில் எந்த டோருக்கும்… அதாவது கதவுக்கும் எந்த முக்கியத்துவமும் இல்லை. பிறகு ஏன் இப்படி ஒரு தலைப்பு என்றால் நாம் வாழும் உலகத்திலேயே நம் கண்ணுக்குத் தெரியாத அமானுஷ்யங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அவற்றை நாம் பார்க்க முடியாத அளவில் ஒரு கதவு இருக்கிறது அந்தக் கதவைத் திறந்து உள்ளே போனால் அந்த அமானுஷ்யங்கள் நம் கண்களுக்குத் தெரியும் என்பதுதான் படத்தின் மையக்கரு. 

சோ… இது ஒரு அமானுஷ்யப் படம் என்று அறிக..!

இதைக் கொஞ்சம் பயத்தோடும், கொஞ்சம் பரபரப்போடும் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஜெய்ய்த்தேவ். (ஆங்கிலத்தில் Jeiiddev என்று தன் பெயரை போடுவதால் இப்படித்தானே தமிழிலும் எழுத முடியும்..?

ஆனால் சுருக்கமாக ஜெய்தேவ் என்றே கொள்வோம்..!

அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றை வடிவமைக்கிறார் ஆர்க்கிடெக்ட் ஆக இருக்கும் கதை நாயகி பாவனா. அவரும் நல்லவர்… அவருக்கு வேலை தரும் முதலாளி ஜெயபிரகாஷும் நல்லவர் என்று இருக்க, அந்தக் குடியிருப்பு அமையவிருக்கும் இடத்தில் இருக்கும் ஒரு பாழடைந்த கோயிலை இடிக்கப் போய் வருகிறது பிரச்சனை.

முதலில் பாவனாவின் தந்தை சாலை விபத்தில் கொல்லப்படுகிறார். தொடர்ந்து அந்த குடியிருப்பில் இருக்கும் காவலாளி தற்கொலை செய்து கொள்கிறார். மேஸ்திரியின் தலைமீது பாரம் விழுந்து பழியும் பாவமும் காண்ட்ராக்டர் தலையில் விழுகிறது.

இது ஒரு புறம் நடக்க… பாவனா தங்கி இருக்கும்  வீட்டுக்குள்ளும் ஏதோ அமானுஷ்யங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. 

இன்னும் கேட்டால் பாவனாவின் கண்களுக்கு இரண்டு மாய உருவங்கள் தோன்றி அவ்வப்போது பயமுறுத்தப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் அவற்றைப் பார்த்து எல்லாம் பாவனா பயப்படவில்லை என்பது ஆறுதலான விஷயம். 

அத்துடன் இவற்றுக்குப் பின்னால் இருக்கும் முடிச்சுகளை அவிழ்த்துப் பார்க்க வேண்டும் என்கிற தேடலுடன் புறப்படும் அவருக்கு என்ன விதமான அனுபவங்கள் ஏற்படுகின்றன என்பதுதான் கதை. 

நீ….ண்….ட… காலத்துக்குப் பிறகு நடிக்க வந்திருக்கிறார் பாவனா. அங்கங்கே கொஞ்சம் சதை போட்டு இருந்தாலும் கண்களில் மீதம் இருக்கும் உற்சாகத்தையும், நடிப்பையும் நம்பி அவர் கதையின் நாயகியாக இருப்பது பலம்தாங்ணா.

ஆனால் கண்ணுக்குப் பல உருவங்கள் AI செய்தது தெளிவாகத் தெரிந்தாலும் கூட கொஞ்சம் கூட பதட்டமே இல்லாமல் அடுத்த நாள் வேலைக்கு கிளம்பிக் கொண்டு இருப்பது… அவர் மீதே பயம் கொள்ள வைக்கிறது.

நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் கணேஷ் வெங்கட்ராமனுக்கு சினிமா வழங்கப்படியே சஸ்பென்ஷன் கொடுக்கப்படுகிறது. சஸ்பென்ஷன் வழங்கப்பட்ட போலீஸ் அதிகாரிகள்தான் விஷயங்களை சரியாக துப்பறிவார்கள் என்கிற சினிமா இலக்கணப்படியே அவரும் தன் வேலையை சரியாகச் செய்திருக்கிறார்.

இவர்களுடன் நடித்திருக்கும் ஜெயப்பிரகாஷ், ஸ்ரீரஞ்சனி, நந்தகுமார், கிரிஷ், பாண்டி ரவி, சங்கீதா, சிந்தூரி, பிரியா வெங்கட், ரமேஷ் ஆறுமுகம், கபில், பைரி வினு, ரோஷினி, சித்திக், வினோலியா உள்ளிட்டோர் தங்கள் பாத்திரங்களில் பொருந்தி எடுக்கிறார்கள் என்பதும் பலம்தான்.

அதிலும் ஆவிகளுடன் நேருக்கு நேர் நடத்தும் பைரி வினு ஆவியைப் பார்க்கும் கட்டங்களில்  பேய் முழி முழித்து உண்மையிலேயே பேயைப் பார்த்ததைப் போன்ற பிரமையை ஏற்படுத்தியிருக்கிறார்.

அமானுஷ்யப் படமாக இருந்தாலும் படத்தின் நேர்த்தியில் நம்மைக் கட்டிப்போட்டு விடுகிறார்கள் ஒளிப்பதிவாளர் கெளதம்.ஜியும், இசையமைப்பாளர் வருண் உன்னியும்.

ஆனால் ஒலிப்பதிவாளர்தான் வால்யூம சுவிட்சை முழுதாகத் திருகி விட்டு, அதை ஆஃப் பண்ணாமல் கதவை பூட்டிக் கண்டு வெளியே போய்விட்டார் போலிருக்கிறது. 

அதுவும் டோர் என்று தலைப்பு வந்து விட்டதால் ஆவி உள்ளே வரும் இடங்களில் எல்லாம் கதவை திறக்கும் போது கடமுடா… கடமுடா… என்ற சத்தத்துடனே கதவைத் திறக்க வைக்கிறார்.

பேயை ஒரு சில வினாடிகளுக்கு மேல் பார்த்தால் நமக்கு பயம் போய்விடும். ஆனால் பள்ளி சீருடையில் வரும் சிறுமியின் ஆவி அப்படியே பாவனாவின் கண் முன் சில நிமிடங்கள் நீடித்து உருகும் காட்சியில் மேற்படி சித்தாந்தம் காணாமல் போய் உண்மையிலேயே நம் ரோமக் கால்களை உயர்த்தி சில்லிட வைக்கிறது.

அதேபோல் தேடிக் கொண்டிருக்கும் வில்லனிடமே அவர் யாரென்று தெரியாமல் பாவனா பேசிக் கொண்டிருக்க, அவர்தான் வில்லன் என்று காட்சிகளின் மூலம் நாம் புரிந்து கொள்ள வைப்பது ஒரு ரசிக்கத் தகுந்த சஸ்பென்ஸ்.

மற்றபடி எலக்ட்ரீசியன் வேலை, பிளம்பிங் வேலை இதை எல்லாம் வைத்து பயமுறுத்துவதுடன் ஆவி உலக வழக்கப்படியே பிரச்சனைக்கு வெளியே இருப்பவர்களை எல்லாம் தேவையில்லாமல் போட்டுத் தள்ளி விட்டு வில்லனை மட்டும் ஆற அமர கிளைமாக்ஸில் பழிவாங்குகிறது இந்தப் பட ஆவியும்.

அதே போல், ஆவியால் கொல்லப்படுபவர்கள் எல்லோரும் ஃப்ரீசரில் வைத்தது போல் ஏன் உறைந்து பனிக்கட்டியாகி உடைந்து சாகிறார்கள் என்பதும் புரியவில்லை.

தி டோர் –  ஆவி வரும் டோர்களுக்கு கொஞ்சம் ஆயில் போடுங்கப்பா..!

– வேணுஜி