June 12, 2024
  • June 12, 2024
Breaking News
June 9, 2024

தண்டுபாளையம் திரைப்பட விமர்சனம்

By 0 237 Views

எம்ஜிஆர் நடித்து பாதியில் நின்ற ஒரு படத்தின் காட்சிகளைக் கையில் எடுத்துக்கொண்டு அதில் தானும் ஒரு கேரக்டராகி ரகசிய போலீஸ் என்ற பெயரில் திரைப்படமாக எடுத்து ஆச்சரியப்படுத்தினார் திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ். 

அதே டெக்னிக்கில் இந்தப் படத்தை எடுத்து வெளியிட்டு இருக்கிறார் தயாரிப்பாளர் – இயக்குனர் – ஹீரோ – டைகர் வெங்கட்.

கர்நாடகாவை கலக்கிய எட்டு பேர் கொண்ட கொலைகார கொள்ளைக் கும்பல் ஒன்றைப் பற்றி 2012 ஆம் வருடம் ‘ தண்டு பால்யா ‘ என்ற பெயரில் ஒரு படம் வந்தது. கொள்ளையர்களைப் போலவே படமும் ஒரு கலக்கு கலக்கியதில் அது நான்கு பாகங்களாக வெளிவந்தது.

அந்தப் படத்தின் பல பகுதிகளைக் கொண்டு இன்னொரு கதையைத் தயார் செய்து அதில் தானும் ஹீரோவாக நடித்ததுடன் சோனியா அகர்வால், வனிதா விஜயகுமார் போன்ற நடிகைகளை உள்ளே புத்திசாலித்தனமாகக் கொண்டு வந்து இந்த தண்டுபாளையத்தை வழங்கி இருக்கிறார் டைகர்.

படம் தொடங்குவது அசிஸ்டன்ட் கமிஷனராக இருக்கும் டைகர் வெங்கட்டின் வீட்டிலிருந்துதான். தண்டுபாளையம் கொள்ளை கூட்டத்தை ஒரு வழியாக பிடித்து அதில் பலரைக் கொன்று குவித்த டைகர் வெங்கட்டின் வீட்டில் சோனியா அகர்வாலும் வனிதா விஜயகுமாரும் ஒரு திட்டத்துடன் நுழைகிறார்கள். 

அங்கே ‘ கட் ‘ ஆகும் கதை பழைய தண்டுபாளையம் கதைக்குப் போகிறது. தண்டுபாளையம் கொள்ளைக் கூட்டத்தின் அட்டகாசங்கள் படம் நெடுக நம்மைக் கதி கலங்க வைக்கின்றன. 

ஒரு வீட்டுக்குள் கொள்ளை அடிக்க இந்த கும்பல் உள்ளே போனால் கண்ணில் படுகிற பெண்களை அங்கேயே பலாத்காரம் செய்துவிட்டு வீட்டில் இருப்பவர்களைக்  கழுத்தை அறுத்துக் கொன்று அங்கு இருக்கும் பொருள்களைக் கொள்ளையடிப்பது மட்டுமல்லாமல் வீட்டில் இருக்கும் உணவையும் சாப்பிட்டு விட்டு கிளம்பி விடுவார்கள்.

மனசாட்சி என்பது கிஞ்சித்தும் இல்லாத இந்தக் கும்பலின் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதற்காக ஒரு மொட்டை தல பாஸ் இருக்கிறார். இவர்கள் மேல் பாயும் வழக்குகளை கவனிப்பதற்கு என்று தனியாக வழக்கறிஞர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கான கட்டணத்தையும் இந்த கும்பலே செலுத்தி விடுகிறது. 

பிரபல கன்னட நடிகர் சாய்குமார் போலீஸ் அதிகாரியாகி இந்த கும்பலை பிடிக்க எடுக்கும் முயற்சிகளின் பலனாக அந்த கும்பல் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆனால் அவரைப் பழி தீர்க்க இன்னொரு கும்பல் கிளம்பி வருகிறது. 

இந்த கும்பலைப் பிடிக்கத்தான் டைகர் வெங்கட் களத்தில் இறங்கி அதை வெற்றிகரமாக முடிக்கிறார். அதற்குப் வழி தீர்க்கவே சோனியா அகர்வாலும், வனிதா விஜயகுமாரும் ஒரு கொடுமையான திட்டத்துடன் அவர் வீட்டுக்குள் நுழைய என்ன ஆகிறது என்பது பரபரப்பான கிளைமாக்ஸ்.

ஆனால், இப்போதும் பட முடியவில்லை. அடுத்த பாகத்தில் சந்திப்போம் என்கிற ரீதியில் படத்தை முடிக்கிறார் டைகர். 

தானே ஹீரோவாக நடிப்பதால் அவருடைய கை கால்கள் எல்லாம் அப்படி அபிநயத்துடன் நடிக்கின்றன. கையையும், காலையும் வீசு வீசு என்று வீசி நடந்து ‘சிங்கத்’தை ஜெயிக்க நினைக்கிறார் இந்த டைகர்.

சோனியா அகர்வால், வனிதா விஜயகுமார், சுமா ரங்கநாத், பூஜாகாந்தி இத்தனை நடிகைகளும் உள்ளே இருக்கிறார்கள். வேறு வேறு பாகங்களில் அவர்கள் நடித்திருந்தாலும் எல்லாவற்றையும் தொகுத்து ஒரே படம் போல் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

பிர்லா போஸ், சூப்பர் குட் சுப்பிரமணி, முமைத்கான் போன்று நாம் நன்கறிந்த முகங்களும் இருப்பது படத்துக்கு பிளஸ்.

ஜித்தின் கே.ரோஷனின் இசையே படம் மொத்தத்தையும் சுமந்து செல்கிறது. பி.இளங்கோவனின் ஒளிப்பதிவும் பதட்டத்தை அதிகப்படுத்துகிறது.

பாலியல், வன்முறைக் காட்சிகள் எல்லாம் படு பயங்கரமாக படமாக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் படத்துக்கு சென்சார் டபுள் ஷிப்ட் வேலை பார்த்திருக்க வேண்டும்.

கொடூர கொலைகளைப் புரியும் இந்த கூட்டத்தை ஒரு கட்டத்தில் தன் கட்டுக்குள் கொண்டு வந்து விடும் டைகர் வெங்கட் அவர்களிடம் “சாதாரண மனிதர்களைக் கொன்று வாழ்கிறீர்களே..? உங்களுக்கு கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லையா..?” என்று கேட்க பதிலுக்கு அவர்கள் “சின்ன விலங்குகளை பிடித்துதானே பெரிய விலங்குகள் சாப்பிட்டு உயிர் வளர்க்கின்றன..?” இன்று லாஜிக்கடன் சொல்வதைக் கேட்டால் நமக்கு திக்கென்று இருக்கிறது. 

இரண்டாவது பாகத்தில் இன்னும் என்ன செய்ய காத்திருக்கிறாரோ இந்த டைகர்..?