October 22, 2021
  • October 22, 2021
Breaking News
September 10, 2021

தலைவி திரைப்பட விமர்சனம்

By 0 50 Views

உண்மைக் கதைகளைப் படமாக்குவது கத்தி மீது நடக்கும் விஷயம். அதிலும், சரித்திரம் சொல்லும் தலைவர்களைப் பற்றிய பயோபிக் என்றால் சவரக் கத்தி மீது சாகசம் செய்யும் கதைதான். அப்படி ஒரு சாகசத்தைக் கையில் எடுத்திருக்கிறார் இயக்குநர் விஜய்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு அஜயன் பாலா எழுதிய ‘தலைவி’ கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட கற்பனைக் கதை என்று படத்தை ஆரம்பிக்கிறார் விஜய்.

அதனாலேயே ஜெயலலிதாவை ‘ஜெயா’ என்றும், எம்.ஜி.ஆரை ‘எம்.ஜே.ஆர்’ என்றும், கருணாநிதியை ‘கருணா’ என்றும் ஆர்.எம்.வீயை ‘ஆர்.என்.வீ ‘என்றும், திமுக வை ‘தமக’ என்றும், அதிமுகவை ‘மதமக’ என்றும் கூறுகிறார்கள். ஆனால். இப்படி எழுத்துகளை மாற்றி விடுவதாலேயே இது வேறு கதை என்று ஆகிவிடுமா என்று தெரியவில்லை.

சட்டசபையில் ஜெயா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஆரம்பிக்கும் படம் அப்போது அவர் எடுக்கும் சூளுரை எப்படி அவரை அதே சட்டசபையில் முதல்வராக அமரவைக்கிறது என்பதுடன் நிறைவு பெறுகிறது.

முன்பாதி முழுக்க திரைத்துறையில் ஜெயா அறிமுகமாகி, அவருக்கு எம்ஜிஆருடன் ஏற்படும் தொடர்பு அதன் மூலம் கிடைக்கும் புகழ், பின்பு எம்ஜிஆர் அரசியலுக்கு வர, அவர்களிடம் ஏற்படும் பிரிவு என்று பெரும்பாலும் திரை வாழ்க்கையாகவே நகர்கிறது. இரண்டாவது பாதிப்படமே அவரது அரசியல் வரவைக் காட்டி அவர் மக்கள் தலைவியாவதில் முடிகிறது.

தலைவி ஜெயாவாக கங்கனா ரணாவத். இந்த செய்தி வந்த நாளில் இருந்தே கங்கனாவின் உடல் மொழி எப்படி ஜெயலலிதாவுடன் ஒத்துப்போகும் என்று புரியாத புதிராகவே இருந்தது. ஆனால், அதை மேக்கப் முதலான அம்சங்களில் இட்டு நிரப்பி மேக்கப் செய்திருக்கிறார்கள். எப்படி இருந்தாலும் மிகச்சில வருடங்களுக்கு முன் மறைந்த மூக்கும் முழியுமான ஜெயலலிதா நம் மனத்தில் நிறைந்திருக்க, அவராக கங்கனாவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

என்றாலும் கங்கனாவின் நடிப்பு அசத்தலாக இருக்கிறது. அது எம்ஜிஆராக இருக்கட்டும், யாராக இருக்கட்டும் என் மனதில் மரியாதை வந்தால்தான் மதிப்பேன் என்று பயமறியாத இளமைக் குறும்புடன் இருப்பதாகட்டும், எம்.ஜி.ஆரைப் புரிந்து கொண்டு அவர் மீது அன்பைப் பொழிவதாகட்டும், தன்னை எம்ஜிஆரின் அரவணைப்பிலிருந்து பிரிக்க நினைத்த ஆர்.என்.வீயின் வியூகங்களை தன் மதியூகத்தால் வீழ்த்தும் சாதுர்யத்தில் ஆகட்டும், ‘தலைவரே’ தன்னைடமிருந்து விலகிப்போன நேரத்தில் அவரது எதிர்ப்பாசறைக்குச் சென்று தன்னை வளப்படுத்திக்கொள்ளும் புத்திசாலித்தனத்தில் ஆகட்டும் ‘சொல்லொணா’ நடிப்பில் வியக்க வைக்கிறார் ‘கங்கணா’.

அறிமுகக் காலத்தில் எம்ஜிஆருக்கும், ஒரு நாய்க்கும் ஒரு சேர மரியாதை தரும் குறும்பில் தொடங்கி, கடைசியில் அரியணை ஏறியதும் தன்னைக் கேலி பேசிய ஆடவரிடம் “என்னை அம்மாவாக பாத்தீங்கன்னா நான் அன்பாக இருப்பேன். ஆனா, ஒரு பெண்ணா பாத்தீங்கண்ணா…” என்று எச்சரித்து அவர்கள் உட்கார இடம் கொடுக்காமல் நாற்காலியை அப்புறப்படுத்தும் ஆளுமை வரை அந்தப் பாத்திரப் படைப்பும், அதில் கங்கனா நடிப்பும் அருமை.

எம்ஜேஆர் என்ற எம்ஜிஆராக அரவிந்த்சாமி. அவரது புகைப்படங்கள் வெளியான சமயம் அவர் அந்தப் பாத்திரத்தில் பொருந்தவில்லை என்று அவரை மீம்ஸ் போட்டு ஓட்டினார்கள். ஆனால், படத்தில் அவர் பல காட்சிகளில் எம்ஜிஆராகவே உணர வைத்திருக்கிறார். நிறத்திலும், குணத்திலும் அவர் ஓகே. ஆனால். எம்ஜிஆரிடம் முதுமையிலும் இருந்த துடிப்பு இவரிடம் மிஸ்ஸிங்.

ஆர்என்வீயாக வரும் சமுத்திரக்கனி நிறைவாகச் செய்திருக்கிறார். எம்ஜிஆரைப் போற்றிப் பாதுகாக்க எந்த எல்லை வரையும் செல்லும் அவர் தொடக்கத்தில் ஜெயாவின் வில்லனாகவே வருவதும், தலைவர் மறைவுக்குப் பின் தலைவியாக ஜெயாவை ஏற்றுக் கொள்வதும் சரியாக நிறைவு செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால், உண்மையான ஜெயலலிதாவின் போராட்டம் கருணாநிதியுடன் என்று இருக்க, இதில் ஆர்எம்வீயை சமாளிப்பதே ஜெயாவின் பெரும்பாடாக இருக்கிறது.

அதனால் கருணாவாக வரும் நாசர் அவ்வளவாக எடுபடவில்லை. அதிலும் இது தலைவியின் கதை என்பதால் இதில் கருணாநிதியின் பாத்திரம் முழுக்கவே எதிர்மறையாகச் சித்திரிக்கப் பட்டிருக்கிறது.

ஜெயாவின் வாழ்க்கைக் கதைதான் என்றாலும் படத்தின் யுஎஸ்பி எம்ஜிஆர்தான் என்று புரிந்து கொண்டிருக்கும் இயக்குநர் எம்ஜிஆரை பொன்மனச் செம்மலாகவே அப்பழுக்கில்லாமல் படைத்திருக்கிறார். முன்பாதி முழுவதும் எம்ஜிஆர் படமாகவே செல்கிறது.

உண்மையாக எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் இசைக்கப்பட்ட திரைப்பாடல்கள் வருகையில் தியேட்டர் குதூகலிக்கிறது. அதுவே ஒரிஜினல் ஸ்கோராக ஜி.வி.பிரகாஷ் இசைத்த பாடல்கள் வரும்போது படம் தொய்வடைகிறது. உண்மையான பாடல்களையே ரீமிக்ஸ் செய்திருந்தால் இன்னும் ரசித்திருக்கலாம். அதிலும் ஜெயலலிதாவின் அறிமுகப்படப் பாடலை பிரபல இந்திப் பாடலான ‘ஜுராலியா’ மெட்டில் ஏன் ஜிவி இசைத்தார் என்று புரியவில்லை. இந்தியில் எடுபடும் என்றா..?

விஷால் விட்டல் ஒளிப்பதிவு அற்புதம். கார்க்கியின் உரையாடல்கள் ரசிக்க வைக்கின்றன. அந்த மெதுவடை வசனம் ‘ஏ’ ஒன்.

வி.என்.ஜானகியாக மதுபாலா, ஜெயலலிதாவின் அம்மா சந்தியாவாக பாக்யஸ்ரீ, எம்.ஆர்.ராதாவாக ராதாரவி, வைகோவாக ஜெயக்குமார், வலம்புரிஜான் வேடத்தில் சண்முகராஜன் ஆகியோர் நடித்திருந்தாலும் ராதாரவி தன் அப்பாவை நினவுபடுத்துவதில் தனித்து ரசிக்க வைக்கிறார். இணைப்பாத்திரங்களில் வருபவர்களில் சு.செந்தில்குமரன் கவனிக்க வைக்கிறார்.

சரித்திரக் குறைகளும், உண்மைத்தன்மையில் குறைவும் படம் நெடுக இருந்தாலும், சரித்திரம் தெரியாதவர்களையும் ரசிக்க வைத்திருப்பதில் ‘தலைவி’ முன்னிலை வகிக்கிறார்.