April 25, 2024
  • April 25, 2024
Breaking News
July 14, 2019

தமிழிசைக்கு அடுத்து தமிழக பாஜக தலைவர் யார்?

By 0 808 Views

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் பதவிக்கு விரைவில் தேர்தல் வர இருக்கிறது. தற்போது தலைவராக இருக்கும் தமிழிசையின் பதவி காலம் சில மாதங்களில் முடிய இருப்பதால் தமிழக பாஜகவின் புதிய தலைவர் யார் என்று அக்கட்சி உள்ளேயும் அரசியல் வட்டாரத்திலும் பரவலாக விவாதிக்க பட்டு வருகிறது.

உலகிலேயே மிக கடினமான பதவி என்றால் அது தமிழக பாஜகவின் தலைவர் பதவி தான். நடை,உடை,பேச்சு, என அவர்களின் அத்தனை நடவடிக்கையும் கேலிக்குள்ளாக்கப்படும். தமிழகத்தில், அத்தனையும் மீறி வெறுப்புகளை புறம் தள்ளி மக்கள் மனங்களில் தாமரையை மலர செய்வது என்பது தான் தமிழக பாஜகவின் புதிய தலைவருக்கு முன் உள்ள சவால்கள் என்ற நிலையில் அடுத்து யார் யாருக்கு வாய்ப்புகள் உள்ளன என்று பார்ப்போம்.

இதற்கிடையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலை அடுத்து தேசிய அளவிலும் தமிழகத்திலும் அரசியல் கட்சிகள் கட்சியின் உட்கட்டமைப்பில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளது.

எடுத்துக் காட்டாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல் விலகியது, திமுகவில் உதயநிதிக்கு புதிய பதவி, அதிமுகவில் ஒற்றை தலைமை, அமமுக முக்கிய நிர்வாகிகள் மாற்றம், என அரசியல் கட்சிகள் அனைத்துமே புதிய மாற்றத்தை சந்தித்து வருகின்றன. இந்த மாற்றத்திற்கான பட்டியலில் தமிழகத்தில் அதிக விமர்சனத்திற்கு உள்ளாகும் கட்சியான பாஜக இணைய உள்ளது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மற்ற மாநிலங்களில் பாஜக மிக பெரிய வெற்றியை பெற்று இருந்தாலும் தமிழகத்தில் அக்கட்சி ஒரு இடம் கூட வெற்றி பெற முடியாமல் தோல்வியை சந்தித்தது. கடந்த ஐந்தரை வருடங்களாக தமிழக பாஜகவின் தலைவராக இருந்து வருபவர் தமிழிசை சௌந்தரராஜன் என்ற நிலையில் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்த மத்திய பாஜக தமிழகத்தில் கட்சியை வளர்ப்பதற்கான திட்டங்களை வகுத்துள்ளது. அதன் அடிப்படையில் கட்சியின் உள்கட்டமைப்பை வலுபடுத்தும் முதல் நடவடிக்கையை மாநில தலைவர் பதவியில் இருந்து துவங்க உள்ளது.

இது குறித்து தமிழக பாஜக நிலவரங்களை நன்கு அறிந்த கட்சி நிர்வாகி ஒருவர் கூறியதிலிருந்து…

“தமிழக பாஜக தலைவர் பதவி என்பது ஒரு முள்கிரீடம் போன்றது என்பதை மத்திய பாஜக தெளிவாகப் புரிந்து வைத்திருக்கிறது.

மக்களவை தேர்தல் தோல்வியால் தொண்டர்கள் மத்தியில் உற்சாகம் இல்லாமல் காணப்படுகிறது. கட்சியை மீட்டு கொண்டு வருவதுடன், தொண்டர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தி கட்சிக்கு புது ரத்தம் புகுத்த வேண்டிய அவசியம் உள்ளதால் ஒரு நல்ல தலைமையை தமிழகத்துக்கு அமைத்து கொடுக்க வேண்டுமென மத்திய பாஜக விரும்புகிறது.

தமிழக பாஜக மூத்த தலைவர்கள் யாரும் மக்களைக் கவரும் முகமா இல்லை. அதுமட்டும் இல்லாமல் கட்சிக்குள்ளேயே அனைவரையும் அனுசரித்து செல்பவராகவும், தமிழகத்தில் பாஜகாவுக்கு என்று ஒரு முகம் வேண்டுமென்று சிலரை மத்திய தலைமையே தயார் செய்தும் வைத்து இருக்கிறது. யாருமே எதிர்பார்க்காத ஒருவரை தலைவராக அறிவிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

TN BJP Next President Election

TN BJP Next President Election

மாநில தலைவருக்கான இந்த பட்டியலில் சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன், கே.டி.ராகவன். ஏ.பி.முருகானந்தம், மதுரை ஸ்ரீனிவாசன் என்ற ஐந்து பேர் இருக்கிறார்கள்.

சி.பி.ராதாகிருஷ்ணனைப் பொறுத்த வரை ஏற்கனவே ஒரு முறை தலைவராக இருந்திருக்கிறார். இது மட்டும் இல்லாமல் பல வருடங்களாக கட்சியில் இருந்தாலும் மக்கள் செல்வாக்கு மிக்க தலைவராக அவர் மாறவில்லை. மக்களவை தேர்தலில் தனக்கு கட்டாயமாக சீட் வேண்டுமென்று சண்டை போட்டு வாங்கியவரால் ஜெயிக்க முடியவில்லை. தேர்தல் காலங்களில் மட்டுமே முகம் காட்டுபவர் என்ற குற்றசாட்டும் இருக்கிறது. அதனால் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கான வாய்ப்புகள் குறைவுதான்.

அடுத்ததாக வானதி ஸ்ரீனிவாசனைப் பொறுத்த வரையில் இந்தத் தேர்தலில் போட்டியிடக் கூட அவரால் சீட் வாங்க முடியாத நிலையில் தான் இருக்கிறார். அது மட்டுமில்லாமல் ஏற்கனவே பெண் ஒருத்தர் தலைவரா இருப்பதால் மீண்டும் பெண் தலைவருக்கு வாய்ப்பு இல்லை.

கே.டி.ராகவன் தொலைக்காட்சி மூலமாக ஓரளவு தெரிந்த முகமாக இருந்தாலும், கட்சி தொண்டர்களுடன் அவருக்கு எந்தத் தொடர்பும் கிடையாது. அதைவிட அவருக்குப் பெரிய பலவீனம் ஜாதி. ஏற்கனவே பாஜகவிற்கு ஒரு உயர்சாதி பிம்பம் இருப்பதால் அந்த ஜாதியை சார்ந்தவரை தலைவராக்கினால் தேவையில்லாத சர்ச்சை ஏற்படும்

அடுத்ததாக ஏ.பி.முருகானந்தம். கட்சியின் புதுமுகம். இளையவர். மோடி, அமித்ஷா நேரடி பார்வையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தேர்தல் பணியாற்றியவர். பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களின் போரட்டக் குழு தலைவராக செயல்பட்டவர். முக்கியமாக மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்களில் போரட்டங்களை வெற்றிகரமா நடத்தி காட்டி தலைமையின் பாராட்டைப் பெற்றவர்.

தமிழகத்தில் கட்சியில் உழைப்பவர்களுக்கு பொறுப்பு வழங்க வேண்டுமென்று இங்குள்ள சில மூத்த தலைவர்களிடம் கொஞ்சம் கடினமாகவே கோரிக்கை வைத்தவர். அதனால் சிலர் இவருக்கு முட்டுகட்டை போடலாம். ஆனால் இளைஞரான புதியவர் ஒருவரை தலைவராகக் கொண்டுவர வேண்டும் என்று மத்திய தலைமை முடிவு எடுத்தால் அடுத்த தமிழக பாஜக மாநில தலைவராவதற்கு ஏ.பி.முருகானந்ததிற்கு வாய்ப்புகள் அதிகம்

இதில் கடைசியில் இருப்பவர் ஸ்ரீனிவாசன். கட்சி விதியின்படி தலைவர் பதவிக்கு போட்டியிட வேண்டுமென்றால் கட்சி உறுப்பினர் ஆகி ஆறு’வருஷம் முடிந்து இருக்க வேண்டும். மதுரையைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் கட்சிக்குள் வந்ததே 2016ல் தான்.

புதிய மாநில தலைவர் தேர்வுக்கு அப்புறம் கட்சிக்குள் பல்வேறு அதிரடி மற்றங்கள் இருக்கும். இனிமேல் தமிழகத்தில் பாஜக புதிய பாதையில் பயணிக்கும்..!”