குழந்தைகளின் உலகம் அலாதியானது. அவர்களின் மனதைப் புரிந்து கொண்டு அவர்களுக்காக ஒரு படம் எடுப்பதும் அரிதான ஒன்று.
எப்போதுமே பெற்றவர்கள்தான் குழந்தைகளுக்கு புத்திமதி சொல்வார்கள் என்பதை மாற்றி இந்த படத்தின் இயக்குனர் குழந்தைகளின் மூலம் பெற்றோருக்கு புத்திமதி சொல்லி இருக்கிறார்.
ஒரு பணக்கார பள்ளியில் படிக்கும் அஜய், ரகு இரண்டு மாணவர்களைச் சுற்றியே கதை நடக்கிறது.
அஜய் வசதியான வீட்டுப் பையன். ஆனால் ரகுவின் குடும்பம் அவ்வளவு வசதியான குடும்பம் அல்ல. பள்ளியில் நடக்கும் ஓட்டப்பந்தய போட்டி ஒன்றில் அஜய்யும், ரகுவும் தங்கள் திறமையைக் காட்டி ஓடி வர யார் வெல்வார் என்கிற கடைசி நிமிடத்தில் ரகு முந்தி விடுகிறான்.
இதனால் மனமுடைந்து போகும் அஜய்யின் பெற்றோர் அவனை அடுத்த பந்தயத்தில் முதலாவதாக வரும்படி வற்புறுத்துகிறார்கள் அத்துடன் படிப்பிலும் இரண்டாவது ரேங்க் எடுக்கும் அவனை முதல் ரேங்க் எடுக்க சொல்லி சத்தியமே வாங்கிக் கொள்கிறார்கள்.
அஜய்யின் ஆசை என்ன என்று தெரியாமலேயே அவனை விண்வெளி வீரனாக அவனது தந்தை திட்டமிடுகிறார். அதற்காக விலை உயர்ந்த தொலைநோக்கியை எல்லாம் வாங்கி கொடுக்கிறார். ஆனால் அதில் எல்லாம் அஜய்க்கு துளி கூட விருப்பமில்லை. அது அவனுக்கு மிகுந்த அழுத்தத்தை தருகிறது.
அங்கே ரகுவின் நிலை இன்னும் மோசம். ரகுவின் தந்தை ஒரு முன்னாள் ஓட்டப்பந்தய வீரர். இந்தியாவுக்கு நான்கு தங்கப் பதக்கங்கள் பெற்றுத் தந்த அவருக்கு ஒலிம்பிக்கில் ஜெயிக்க வேண்டும் என்கிற கனவு மட்டும் பலிக்கவில்லை.
ஓட முடியாதவாறு அவரது கால் ஊனப்பட தனது அழுத்தத்தை மகன் ரகு மேல் திணித்து அவனை ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீரனாக மாற்ற முடிவு எடுக்கிறார். ஆனால் அவனுக்கு அதில் விருப்பமில்லை. வசதியில் குறைந்த குடும்பமும் ஆனதால் ரகுவின் அழுத்தம் ரொம்பவும் அதிகமாகி அவனை நோய்வாய்ப்பட்டவனாக மாற்றுகிறது.
ஒரு பக்கம் சுயநலமிக்க பள்ளியின் தாளாளர் பெற்றவர்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்த, பெற்றவர்களோ அதை தங்கள் குழந்தைகள் மீது ஏற்ற என்னதான் ஆனது என்பது மீதிக் கதை.
நாட்டில் நடக்கும் அவலத்தை அப்படியே படத்தில் எடுத்துக் காட்டி இருக்கிறார் இயக்குனர் சுனில் பிரேம் வியாஸ்.
சிறுவர்கள் அஜய்யாக நடித்திருக்கும் யாஷ் கனேகரும், ரகுவாக நடித்திருக்கும் பிரசாத் ரெட்டியும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள். ஜெயிக்க வேண்டும் என்ற வெறியில் யாஷ் கனேகர் செய்யும் ஒரு தவறு பிரசாத் ரெட்டியை எந்த அளவு பாதிக்கிறது என்பதை அற்புதமான காட்சி அமைப்பில் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
அந்த சம்பவத்தின் பிறகு இருவரும் சிறந்த நண்பர்களாக மாறுவதும் கிளைமாக்சில் ரகுவுக்காக அஜய் செய்யும் தியாகமும் எழுந்து நின்று கைதட்ட வைக்கின்றது.
சிறுவர்களின் பெற்றோர், தாத்தா, பாட்டி, உடன் பயிலும் மாணவர்கள், பள்ளியின் தாளாளர் வேடங்களில் நடித்துள்ள விக்ரம் கோகலே, ராஜ் ஜுட்ஷி, சுப்ரியா கார்னிக், ஜாய் சென்குப்தா, தீபன்னிதா சர்மா, யாஷ் கனேகர், பிரசாத் ரெட்டி, சுல்பா ஆர்யா மற்றும் அனங் தேசாய். என்று ஒவ்வொருவரும் தங்கள் பாத்திரத்தை உணர்ந்து நடிக்காமல் வாழ்ந்தே இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவும் இசையும் கைகோர்த்து நம் உணர்வுகளைத் தூண்டி விடுகின்றன.
படத்தின் குறை என்று ஒன்றை சொல்ல வேண்டுமென்றால் அது தமிழ் டப்பிங்தான்.
தர்மேஷ் பண்டிட் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை ஹன்சா பிக்சர்ஸ் வெளியிடுகிறது.
இன்றைய சமுதாயத்துக்கு சொல்லப்பட வேண்டிய செய்தியைத் தாங்கி வந்திருக்கும் இந்தப் படத்தை பெற்றோர் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும்.
இந்த வருடத்தின் சிறந்த படங்களில் ஒன்றான இதற்கு நிச்சயம் விருதுகளை எதிர்பார்க்கலாம்.
டேக் இட் ஈஸி – சீரியஸ் தாட்..!
– வேணுஜி