‘வில்லுப்பாட்டு’ என்றதும் நினைவுக்கு வரும் பெயர் சுப்பு ஆறுமுகம். இவர் தனது 93 வது வயதில் மூப்பு காரணமாக இன்று இயற்கை எய்தினார்.
‘வில்லிசை வேந்தர்’ என்று போற்றப்படும் அவர் திருநெல்வேலி மாவட்டம் புதுக்குளம் கிராமத்தில் 1928 ஜூலை 12-ம் தேதி பிறந்தார்.
சென்னை கே.கே.நகர் பாரதிதாசன் காலனியில் மகள் பாரதியுடன் வசித்துவந்த சுப்பு ஆறுமுகம் 1948-ல் தொடங்கி, 70 ஆண்டுகளுக்கும் மேலான கலைப்பயணத்தில் ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.
திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவின் 147-வது ஆண்டு நிகழ்ச்சியில் தியாகப் பிரம்மத்தைப் பற்றி 2 மணி நேரத்துக்கு வில்லுப்பாட்டு கதை நிகழ்த்தினார். ஆன்மிகம், இலக்கியம் மட்டுமின்றி, மருத்துவம், அறிவியல், சமூக விழிப்புணர்வு என பல துறைகளிலும் வில்லிசைக் கச்சேரிகள் நிகழ்த்தக்கூடியவர்.
மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருது, தமிழக அரசின் ‘கலைமாமணி’ உட்பட பல்வேறு விருதுகள், பட்டங்களைப் பெற்றவர். வில்லுப்பாட்டு தொடர்பாக ‘வில்லிசை மகாபாரதம்’, ‘வில்லிசை இராமாயணம்’, ‘நீங்களும் வில்லுப்பாட்டு பாடலாம்’ என 3 நூல்களை எழுதியுள்ளார்.
இவரது மரணம் தொடர்பாக “எனது இனிய நண்பரை இழந்து விட்டேன்…!” என்று கமலஹாசன் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.