May 6, 2024
  • May 6, 2024
Breaking News
September 10, 2023

ஸ்ட்ரைக்கர் திரைப்பட விமர்சனம்

By 0 1126 Views

இந்த வாரத்துக்காக ஆவி வந்த படம் இது. 

இன்னொரு ஆவிப் படமா என்று நாம் அலுத்துக் கொண்டு உட்காரும்போது ஆவி உலகம் என்பது புனைவு அல்ல – இயற்கையுடன் சம்பந்தப்பட்டதுதான் என்று ஒரு மகா விளக்கம் கொடுத்துப் படத்தை ஆரம்பிக்கிறார் இயக்குனர் எஸ்.ஏ.பிரபு.

அடடே… பரவாயில்லையே, ஆவி கதையில் ஒரு அறிவியல் விளக்கம் சொல்லப் போகிறார் போலிருக்கிறது என்று நிமிர்ந்து உட்கார்ந்தால் ஓஜா போர்டைக் கையில் வைத்துக்கொண்டு கதாநாயகன் ஜஸ்டின் விஜய் ஆவிகளுடன் பேச ஆரம்பித்து விடுகிறார்.

முன்னாள் கார் மெக்கானிக்காக இருக்கும் இவர் ஆவிகள் உலகில் ஆர்வம் கொண்டு ஆவிகள் உலகத்துக்கு வகுப்பு எடுக்கும் (ஆமாம்… டுடோரியல் காலேஜ் போல் நிறைய மாணவர்கள் படிக்கிறார்கள்) கஸ்தூரியிடம் பயின்று ஓஜா போர்டை வைத்துக் கொண்டு ஆவிகளுடன் பேச ஆரம்பிக்கிறார்.

நாயகி வித்யா பிரதீப், யூட்யூப் சேனல் ஒன்றை நடத்திக் கொண்டிருக்கிறார். அதில் இந்த ஆவிகளைப் பற்றிய ஒரு நிகழ்ச்சிக்காக ஜஸ்டின் விஜய்யை அணுகி ஆவியுடன் பேச முற்படுகிறார். ஆனால் ஆவி அவருடன் பேசத் தயாராக இல்லை.

அதுமட்டுமில்லாமல் முதல் பாதி வரை அவருடன் பேச எந்த ஆவியும் தயாராக இருக்கவில்லை. ஏதாவது ஒரு ஆவியைக் கண்ணில் (!) காட்டி விட மாட்டாரா என்று நமக்கு ஏக்கம்தான் மிச்சமாகிறது.

ஆவிக்கே இன்ட்ரஸ்ட் இல்லாத கதையில் நமக்கு எப்படி இன்டரெஸ்ட் வரும்..?

ஆனாலும் ஒரு காட்சியில் கஸ்தூரியைக் குளோசப்பில் பார்த்த திருப்தியோடு, ‘ஆவி பறக்கும்’ ஒரு டீயைக் குடித்துவிட்டு இரண்டாவது பாதிக்கு வருகிறோம்.

அதில் ஜஸ்டினுக்கு ஒரு அசைன்மென்ட் வருகிறது. ஆட்கள் யாரும் இல்லாத ஒரு வீட்டில் அமானுஷ்ய குரல் கேட்பதாகவும் அதற்குள் ஆவி இருக்கிறதா என்று கண்டுபிடிப்பதற்காகவும் அந்த அசைன்மெண்டை ஒத்துக் கொள்கிறார் அவர். அதில் வேண்டாத விருந்தாளியாக வித்யா பிரதீப்பும் இணைந்து கொள்ள அவர்கள் இருவருக்கும் நேரும் அனுபவங்கள்தான் மீதிப் படம்.

இரண்டு மணி நேரம் நமது நேரத்தை வீணடித்து விட்டார்களே என்று நொந்து கொள்ளாத அளவுக்குக் கிளைமாக்ஸில் ஒரு ட்விஸ்ட் வைத்திருக்கிறார் இயக்குனர் பிரபு.

அந்த ட்விஸ்டில் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டும் இணைந்து கொள்ள ‘ அடடே…!’ என்று சொல்ல வைக்கிறது கிளைமாக்ஸ். அந்த கிளைமாக்ஸ்  மீது ஆயிரம் கேள்விகள் இருந்தாலும் இந்த ட்விஸ்ட்டுக்காகதான் இதை ஒரு படமாகவே  கொள்ளலாம்.

ஜோசப் விஜய் சாயலில் ஜஸ்டின் விஜய் என்று இருக்கட்டும் என்று பெயர் வைத்துக் கொண்டிருக்கிறார் போல் இருக்கிறது இந்தப் படத்தின் ஹீரோ. நடிப்பதற்கு சுமாராக வந்தாலும் நன்றாக நடனம் ஆடுகிறார்.

படத்தில் நடிக்கத்தான் வாய்ப்பு இருக்கிறதே தவிர நடனம் ஆடுவதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால் நடிப்பில் கவனம் செலுத்தாமல் படம் முடிந்தவுடன் ஆடும் ‘டைட்டில் கவர் ‘ பாடலுக்கு அருமையாக நடனம் ஆடுகிறார் அவர்.

வித்யா பிரதீப் இளைத்து படு இளமையாகத் தெரிகிறார் ஆவியை நம்பாதவராக வரும் அவர் கடைசியில் ஆவியை நம்பியாக வேண்டிய கட்டாயத்தில் அகலவிழிகளை இன்னும் அகலமாகிக்கொள்வதோடு நம்முடைய விழிகளையும் அகலமாக்கி விடுகிறார்.

கிளைமாக்சில் ராபர்ட் மாஸ்டருக்கு ஒரு காட்சிதான் வருகிறது என்பதற்காக ஒரு சின்ன பிளாஷ்பேக் ஓட்டி ஒரு சில காட்சிகளில் அவர் நடிக்க வாய்ப்பும் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

ஒளிப்பதிவாளர் மனீஷ் மூர்த்தியும், இசையமைப்பாளர் விஜய் சித்தார்த்தும் தங்கள் பங்குக்கு ஆஜர் போட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள்.

ஸ்ட்ரைக்கர் – ஆவியுடன் சேர்ந்து  அப்பாவியைப் பயன்படுத்திக் கொண்ட பாவி..!