May 3, 2024
  • May 3, 2024
Breaking News
September 10, 2023

ரெட் சாண்டல் திரைப்பட விமர்சனம்

By 0 283 Views

கடின வேலைகளைச் செய்பவர்கள் “உயிரைக் கொடுத்து வேலை செய்கிறேன்..!” என்பார்கள். ஆனால், உண்மையிலேயே உயிரைக் கொடுத்து செய்யும் வேலைகள் சில இருக்கின்றன. அதில் ஒன்றுதான் செம்மரக் கடத்தல். 

திருப்பதிக் காடுகளில் செம்மரங்கள் அதிக அளவில் வளர்ந்திருக்க அவற்றை கள்ளத்தனமாகக் கடத்த விரும்புபவர்கள், மரங்களை வெட்ட தமிழ்நாட்டில் இருந்து வறுமையில் உள்ளவர்களைப் பயன்படுத்துவதும் போலீஸ் வேட்டையில் அந்த அப்பாவிகள் இறப்பதும் தொடர்கதையாகி வருகிறது. இந்தக் கதையை கண்ணீரும், ரத்தமுமாகச் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் குரு ராமானுஜம்.

வட சென்னையில் குத்துச்சண்டை வீரராக இருக்கும் வெற்றி, தன்னுடைய நண்பன் காபாலி விஸ்வநாத் ஆந்திராவில் இருப்பதை அறிந்து அவரைத் தேடிச் செல்கிறார். காரணம் விஸ்வநாத்தின் தந்தை உயிருக்கு போராடிக் கொண்டிருக்க அவர், மகன் முகத்தை பார்க்க  ஆசைப்படுவதுதான்.

திருப்பதியில் சென்று விஸ்வநாத்தை அவர் தேட முயற்சிக்கிறார் என்று தகவல் பரவியதும் வெற்றி மீதான தாக்குதல்கள் தொடங்குகின்றன. ஆக விஸ்வநாத் ஏதோ ஒரு ஆபத்தில் சிக்கி இருப்பது புரிகிறது. அதைத் தொடர்ந்த நகர்வில் நண்பனைக் கண்டுபிடித்து மீட்கும் வேளையில் செம்மரக் கடத்தல் மீதான போலீஸ் வேட்டையில் இருவரும் சிக்குகின்றனர்.

அங்கிருந்து அவர்களால் மீள முடிந்ததா என்பது மீதிக் கதை.

நடிப்பது தெரியாமல் இயல்பாக நடிக்க வெற்றியால் முடிகிறது. கதை நாயகனாக அவர் இருந்தாலும் ஒரு சில சண்டைக் காட்சிகள் தவிர அவர் எந்த ஹீரோயிசத்தையும் காண்பிக்கவில்லை.

சண்டைக் காட்சிகளில் அவர் பல பேரை அடித்தாலும் அடிப்படையில் அவர் ஒரு குத்துச்சண்டை வீரர் என்பதால் அதையும் இயல்பாக எடுத்துக் கொள்ள முடிகிறது. 

வெற்றி தேடிச் செல்லும் நண்பனாக வரும் கபாலி விஸ்வநாத் அந்தப் பாத்திரமாகவே மாறி இருக்கிறார். வறுமையில் உழலும் ஒரு மனிதன் எப்படி இருப்பானோ அதைத் தோற்றத்திலும் உடல் மொழியிலும் வெளிப்படுத்தி நெகிழ வைக்கிறார்.

சிறப்புத் தேடுதல் படை காவல் அதிகாரியாக வரும் கணேஷ் வெங்கட்ராமன் ஆரம்பத்தில் வில்லன் போல் தோன்றினாலும் ஒரு கட்டத்துக்கு மேல் நிலைமைகளைப் புரிந்து கொள்ளும் மனிதாபிமானியாக மாறுகிறார். அந்த வேடத்தில் கணேஷ் மிகப் பொருத்தமாக இருப்பதுடன் சிறப்பாக நடித்தும் இருக்கிறார்.

முக்கிய வில்லனாக வரும் கேஜிஎப் ராம் தோற்றத்தில் மட்டுமல்லாது நடவடிக்கைகளிலும் பயமுறுத்துகிறார். 

அவர் எப்படி அத்தனை பெரிய கடத்தல் மன்னனாகிறார் என்பதற்கான சாத்தியங்கள் மட்டும் சறுக்கல்களாக இருக்கின்றன. வழக்கமான வில்லன் போல பெண்ணுடன் அவர் சரசமாடிக் கொண்டிருப்பதும் உறுத்தல்.

படத்தின் மையப் புள்ளியாக இயக்குனர் நினைத்து வைத்திருக்கும் விஷயம், சி ஐ ஆர் என்று சொல்லப்படும் ‘சிவில் இன்ஃபர்மேஷன் ரிப்போர்ட் ‘ தான். வேலைக்காக மாநிலம் கடந்து செல்பவர்கள் இந்த சிஐஆரைக் கையில் வைத்திருந்தால் எந்த விதமான சட்ட சிக்கல்களில் இருந்தும் தப்பிக்க முடியும் என்கிற விஷயம் செய்தியாக சொல்லப்பட்டிருப்பது சிறப்பு.

ஆனால் முதல் முதலில் வெற்றி பிடிபடும் போது இந்த சிஐஆர் பற்றி போலீசில் வாய் திறக்காமல் தேவையில்லாமல் அடிவாங்கிக் கொண்டிருக்கிறார்.

வெற்றியுடன் போலீசில் பிடிபடும் குழுவில் வரும் வயோதிகர் எம்எஸ் பாஸ்கர் ரொம்பவே மனதைக் கலங்கடிக்கிறார். அவர் சொல்லும் ஃப்ளாஷ்பேக் அதைவிட இதயத்தை நொறுக்குவதாக இருக்கிறது.

நல்ல கதைக் களமும் மகிழ்ச்சியான காட்சிகள் எல்லாம் இருந்தும் சிற்சில லாஜிக் விஷயங்களில் கவனம் செலுத்தாமல் விட்டிருக்கிறார் இயக்குனர். அத்துடன் இந்த செம்மர கடத்தல் சதிக்கு ஆந்திர அமைச்சர் மற்றும் முதலமைச்சர், காவல் அதிகாரிகள் எல்லோருமே உடந்தையாக இருக்கிறார்கள் என்பது போன்ற புனைவு சரியானதா என்று தெரியவில்லை.

“ஆமாம்… அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது…” என்று அவர் சொல்வாரேயானால் அந்த தைரியத்தைப் பாராட்டலாம்.

சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவுக்கு அதிகபட்ச மதிப்பெண்கள் கொடுக்கலாம். இருளில் படம் பிடிப்பது அத்தனை சுலபமானது அல்ல. அத்துடன் படத்தின் மூடுக்கு ஏற்றவாறு கலரிங் கொடுத்திருப்பதும் நன்று.

சாம் சி.எஸ்சின் இசை உணர்வு பூர்வமாக இருக்கிறது. ரசூல் பூக்குட்டியின் ஒலி அமைப்பு படத்துக்கு பலம்.

ரெட் சாண்டல் – ஆந்திர செம்மரக்காட்டில் தமிழன் செங்குருதி..!