May 2, 2024
  • May 2, 2024
Breaking News
September 10, 2023

அங்காரகன் திரைப்பட விமர்சனம்

By 0 444 Views

நவ கோள்களில் செவ்வாய் கிரகத்துக்கு பெயர்தான் அங்காரகன். ஆனால் படத்தில் அந்த செவ்வாய் கோளுக்கும், கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வாழ்ந்து மறைந்த ஒரு மனிதன்தான் அங்காரகன்.

அவன் பேயாக மாறி மக்களை அபேஸ் செய்கிறான் என்கிற நம்பிக்கைதான் லைன்.

குறிஞ்சி மலையில் அமைந்த ஒரு இயற்கை எழில் வாழ்ந்த தங்குமிடம். அங்கே பல பேர் வந்து தங்கிச் செல்லும் சூழலில் ஒரு பெண் மாயமாவது தெரிய வருகிறது. 

அதை விசாரிக்க வருகிறார் காவல் அதிகாரியான சத்தியராஜ். விசாரிக்கும் போது இன்னொரு பெண்ணும் மாயமாகிறார். சத்யராஜுடன் வரும் எஸ்.ஐயும் அவரும் அந்தக் கேசை எப்படி துப்பறிந்தார்கள் – மாயமான பெண்கள் கிடைத்தனரா அல்லது அந்தப் பெண்கள் பற்றிய துப்பு கிடைத்ததா என்பதுதான் முழுக் கதை.

அங்காரகனுக்கும் ஒரு கதை சொல்லப் படுகிறது. வெள்ளையர்கள் ஆட்சிக் காலத்தில் அந்த மலையில் ராணி ஒருவர் தங்கி இருக்க, மலை வளங்கள் வெள்ளையர் பக்கம் போகாமலிருக்க, அதைத் தடுக்கும் கிராமங்கள் அங்காரகன் தலைமையில் இயங்குகின்றன. இதன் காரணமாக அவர் கொல்லப்பட, ராணியும் பின்னர் இறக்க, இருவரும் பேயாகி இப்படி ஆள்களைத் தூக்குகிறார்கள் என்ற நம்பிக்கையும் உலவுகிறது.

ஒரு ரிசார்ட்டில் நடக்கும் கதை என்பதால் முழுக்க முழுக்க அந்த ரிசார்ட்டிலேயே சுற்றிச் சுற்றி வந்து படமாக்கி இருக்கிறார்கள். பகலில் சொர்க்க லோகமாகவும் இரவில் மயானம் போலவும் காட்சியளிக்கும் அந்த ரிசார்ட் மகிழ்ச்சிக்கு பயத்தையும், பயத்துக்கு மகிழ்ச்சியையும் தருகிறது.

திரைக்கதை அமைப்பிலும் உதவியிருக்கும் ஸ்ரீபதிதான் இந்த படத்தின் நாயகனாக நடித்திருக்கிறார். சதா தண்ணி வண்டியாக வரும் அவர் என்னென்ன லீலைகள் புரிகிறார் என்பதுதான் திரைக்கதை. அவருக்கும் அங்காரகனுக்கும் என்ன தொடர்பு என்பது ஒரு சஸ்பென்ஸ்.

சத்யராஜ் நடிப்பு பற்றி புதிதாக சொல்ல வேண்டியதில்லை. இந்தப் படத்துக்காக முழு மொட்டையுடன் தோன்றியிருக்கிறார் அவர். ரிசார்ட்டில் தங்கியிருக்கும் ஒவ்வொருவரைப் பற்றியும் அவரது பாணியிலேயே விசாரிப்பது லந்து. கடைசியில் அவர் வைக்கும் டிவிஸ்ட் சற்றே சுவாரசியம்.

அவருடன் எஸ்.ஐயாக வரும் நபரும் அங்கங்கே கலகலப்பை ஏற்படுத்தி இருக்கிறார். சத்யராஜ் டென்ஷன் ஆகும் போதெல்லாம் “ஒரு அஞ்சு நிமிஷம் கொடுங்க சார்… நான் விசாரிக்கிறேன்..” என்று கேட்டு டைம் வாங்குவது லக லக.

மலையாள நடிகை நியா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

மேலும் அங்காடித்தெரு மகேஷ் (அடையாளமே தெரியலை…), ரெய்னா காரத், ரோஷன், அப்புக்குட்டி, தியா, நேகா ரோஸ், குரு சந்திரன், கேசிபி பிரபாத் உள்ளிட்டோரும் அவரவர் பங்கைத் தந்து நடித்திருக்கிறார்கள்.

பிரபல பாலிவுட் இயக்குநர் ராம்கோபால் வர்மாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மோகன் டச்சு ஒளிப்பதிவும் செய்து இப்படத்தை இயக்கியுள்ளார்.

ஆனால் அழகழகான மூன்று பெண்கள் கிடைத்திருக்க, இதே ராம் கோபால் வர்மாவாக இருந்தால் அவர்களை முழுக்க உரித்து, கேமராவை இண்டு இடுக்கில் எல்லாம் வைத்து ஏகப்பட்ட போஸ்களில் சுட்டுத் தள்ளி இருப்பார்.

அவரிடம் பணியாற்றிய மோகன் டச்சுவுக்கு ஏன் அந்த ‘டச்’ கை வரவில்லை என்று தெரியவில்லை. 

கிளைமாக்ஸை மட்டுமே நம்பி இந்தப் படத்தை இயக்கி முடித்திருக்கிறார் அவர். கிளைமாக்சில் இருக்கிறது ஒரு எதிர்பாராத திருப்பம்.

கு.கார்த்திக்கின் பாடல்கள் மற்றும் இசை ஆச்சரியப்படுத்துகின்றன.

முன்பாதிப் படத்திலும் சற்றே சுவாரசியமான திரைக்கதை வைத்திருந்து படத்தை நகர்த்தி இருந்தால் இந்த வாரத்துப் படங்களில் முதன்மை பெற்ற படமாக இருந்திருக்கும்.

அங்காரகன் – கோள் சொல்லாதவன்..!