தி.மு.க. பொருளாளரும், எம்.பி.யுமான டி.ஆர்.பாலு, தன்னுடைய வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளை தொகுத்து ‘பாதை மாறாப் பயணம்’ என்ற தலைப்பில் சுயசரிதை எழுதி உள்ளார். இந்த புத்தகம் 2 பாகங்களை கொண்டது. முதல் பாகத்தில் கருணாநிதியுடன் இருப்பது போன்றும், 2-ம் பாகத்தில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் உடன் இருப்பது போன்றும் நூலின் முகப்பு படம் உள்ளது.
‘பாதை மாறாப் பயணம்’ நூல் வெளியீட்டு விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. வரவேற்று பேசினார். இதையடுத்து, ‘பாதை மாறாப் பயணம்’ நூலை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன் முதல் பாகத்தை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியும், 2-ம் பாகத்தை கவிஞர் வைரமுத்துவும் பெற்றுக்கொண்டனர்.
விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதிலிருந்து…
“திராவிட இயக்க தலைவர்களின் வரலாறு முழுமையாக கிடைத்திருந்தால், பல அரிய தகவல்கள் மக்களுக்கு கிடைத்திருக்கும். இந்த கட்சியில் உழைக்காமல் யாரும் எந்த பொறுப்புக்கும் வந்துவிட முடியாது. டி.ஆர்.பாலு போல, கட்சியின் முன்னோடிகள், நிர்வாகிகள் உங்களது போராட்டத்தை, உங்கள் தியாகத்தை தொகுத்து நூலாக பதிவு செய்திட வேண்டும். இந்த 60 ஆண்டு காலத்தில் கட்சி அடைந்த உயரமும் அதிகம், சந்தித்த சரிவுகளும் அதிகம்.
டி.ஆர்.பாலுவுக்கும், எனக்கும் 10 வயது வித்தியாசம். இப்போது வாங்க… போங்க… என்று பேசுகிறோம். ஆனால், ‘யோவ்… வாயா… வாடா… போடா…’ என்று பேசிய காலமெல்லாம் உண்டு. வீட்டில் இருந்த நேரத்தை விட டி.ஆர்.பாலு அலுவலகத்தில்தான் அதிக நேரம் நான் செலவிட்டு இருக்கிறேன்.
மிசாவில் நான் கைதாகும்போது டி.ஆர்.பாலு போன்றவர்கள் அந்த போலீஸ் வேனை வழிமறித்து தடுத்தனர். மிசா சட்டத்தில் கைதாகும்போது கருணாநிதிக்கு கார் ஓட்டியவர்கள் கைதானார்கள். அப்போது கருணாநிதிக்கு கார் ஓட்டியவர் டி.ஆர்.பாலு. அவரும் கைது செய்யப்பட்டார்.
சிறையில் அடிபட்டு, மிதிபட்டு, ரத்தம் சிந்திய நேரத்தில் டி.ஆர்.பாலுவும் கைதாகி சிறைக்கு வந்தார். அப்போது இலைகளை பறித்து மாலையாக கோர்த்து டி.ஆர்.பாலுவை வரவேற்ற காட்சி நினைவுக்கு வருகிறது.
அப்போது அலுமினிய தட்டில்தான் சாப்பாடு கிடைக்கும். ஆனால் டி.ஆர்.பாலு அதை விரும்பவில்லை. ஆனால் பசி தாங்காமல் சாப்பிட்டார். சிறையிலேயே அண்ணா, கருணாநிதி பிறந்தநாளை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி கொண்டாடினோம். நான் கூட்டங்களில் கலந்துகொள்ள செல்லும்போது, வழிச்செலவுக்கு கிடைக்கும் பணத்தில் பாதியை டி.ஆர்.பாலுவுக்கு கொடுப்பேன். எங்கள் நட்புறவு என்றைக்கும் மாறாது.
சேது சமுத்திர திட்டத்தை டி.ஆர்.பாலு முன்னெடுத்தார். ஆனால் அதனை பா.ஜ.க.தான் தடுத்து நிறுத்தியது. சேதுசமுத்திர பகுதியில் பாலம் இருந்ததற்கான ஆதாரமே இல்லை என்று ஒன்றிய அரசில் இருக்கும் மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத் இப்போது சொல்லி இருக்கிறார். இந்த திட்டத்தை எப்படியும் செயல்படுத்த கருணாநிதி முனைந்தபோது, அப்போதைய மத்திய அரசும் இணைந்தது. இதற்கு காரணம் டி.ஆர்.பாலுதான்.
ஆனால் இந்த திட்டம் தடுக்கப்பட்டது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு இருந்தால் எத்தனையோ பயன்களை தமிழகம் அடைந்திருக்கும். இந்தியாவுக்கு பெருமை கிடைத்திருக்கும். தமிழ்நாட்டின் தொழில்வளம் பெருகியிருக்கும். கடல்சார் வணிகம் மேம்பட்டு, மீனவர்களின் வாழ்வாதாரம் மெருகேறியிருக்கும். ஆனால் சேது சமுத்திர திட்டத்தை பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் இணைந்து அன்றைக்கு தடுத்தது.
இதனை மீண்டும் டி.ஆர்.பாலு கையில் எடுக்கவேண்டும். இது அண்ணாவின், கருணாநிதியின் கனவு திட்டம். எனவே இந்த திட்டத்தை மீண்டும் நிறைவேற்றிடும் கடமை டி.ஆர்.பாலுவுக்கு இருக்கிறது. கருணாநிதி டெல்லிக்கு அனுப்பிய ஆயுதம் டி.ஆர்.பாலு.
கருணாநிதியிடமே கணையாழி பெற்றவர், டி.ஆர்.பாலு. ஒரு மாவட்ட செயலாளராக எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு அடையாளம் டி.ஆர்.பாலு..!”