April 28, 2024
  • April 28, 2024
Breaking News
February 16, 2024

சைரன் திரைப்பட விமர்சனம்

By 0 195 Views

நம் சாலைகளில் இரண்டு சைரன்களின் ஒலிதான் அடிக்கடி நம் காதுகளில் கேட்கும். ஒன்று போலீஸ் வாகனத்தின் சைரன் ஒலி. இன்னொன்று ஆம்புலன்ஸின் சைரன் ஒலி.

இந்த இரண்டு சைரன்களுக்கும் உரசல் வந்தால் என்ன ஆகும்..? அது எப்படி வந்தது..? என்று யோசித்து முழுமையான சென்டிமென்ட் கலந்த ஒரு கமர்ஷியல் படத்தைத் தந்திருக்கிறார் அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்கியராஜ்.

நாயகன், “ஜெயம் ரவியா அது..?” என்று கேட்கும் விதத்தில் இதுவரை இல்லாத கெட்டப்பாக ‘சால்ட் அண்ட் பெப்பர்’ லுக்கில் வந்து அசத்துகிறார். சற்றே வயது முதிர்ந்த ஒரு டீன் ஏஜ் மகளின் அப்பாவின் பாத்திரத்தில் படம் முழுவதும் அவர் வந்திருப்பது ஆகப்பெரிய விஷயம்.

ஆயுள் தண்டனைக் கைதியாக சிறையில் அறிமுகமாகும் அவர் பல ஆண்டுகள் கழிந்து 15 நாள் பரோலில் தன் குடும்பத்தைப் பார்க்க வெளியே வருகிறார். அதன் முக்கிய நோக்கம் கைக்குழந்தையாக விட்டுச் சென்ற தன் மகள்  இத்தனை வருடங்களில் எப்படி மாறியிருப்பாள் என்று பார்க்கும் ஆவல்தான்.

ஆனால் தன் அப்பா ஒரு கொலைகாரர்- அதுவும் தாயைக் கொன்றவர் என்பதை தெரிந்து வைத்திருக்கும் மகள் அவர் முகத்தைக் கூட பார்க்க பிரியப்படவில்லை என்பது நெகிழ்ச்சியான விஷயம்.

இன்னொரு பக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கும் நாயகி கீர்த்தி சுரேஷ் மீதும் ஒரு கொலைப் பழி இருக்க அந்த இமேஜுடனேயே தன் பணியை செய்து வருகிறார்.

ஆனால், எல்லா கொடுமைகளுக்கும் காரணம் வில்லன்தான் என்று தெரிந்தும் அவர் உயிரைக் காக்க முனையும் கடமை உணர்ச்சி புல்லரிக்க வைக்கிறது.

பரோலில் வந்திருக்கும் ஜெயம் ரவி, கீர்த்தியின் ஸ்டேஷனில்தான் வந்து கையெழுத்து போட வேண்டும் என்கிற நிலையில் அவர் வெளியே இருக்கும் நாள்களில் இரண்டு முக்கியஸ்தர்கள் கொலை செய்யப்படுகிறார்கள்.

அந்தக் கொலைகளுக்கும் ஜெயம் ரவிக்கும் தொடர்பு உள்ளதென்று சந்தேகம் எழ… எனில் அவர் பரோலில் இருப்பது சரியா..? இந்த கொலைகளின் பின்னணியை இன்ஸ்பெக்டர் கீர்த்தி சுரேஷால் கண்டுபிடிக்க முடிந்ததா என்ற கேள்விகளுக்கு எல்லாம் மீதிக் கதை பதில் சொல்கிறது.

ஜெயம் ரவியின் நடிப்புப் பயணத்தில் பொன்னியின் செல்வனுக்குப் பிறகு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரமாக இதில் அவர் ஏற்கும் கேரக்டர் அமைந்திருக்கிறது. ஆம்புலன்ஸ் டிரைவராக வரும் அவர் வில்லனால் மிரட்டப்படும் போது “எமனை தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு அலையும் என்னையே பயமுறுத்த நினைக்கிறாயா..?” என்று கேட்பது அவர் கேரக்டரை மிகத் துல்லியமாகச் சொல்லி விடுகிறது.

இன்ஸ்பெக்டர் நந்தினி கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் அட்டகாசமாக நடித்துள்ளார். இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக இல்லை என்பது ஒரு ஆச்சரியமான விஷயம்.

டிஎஸ்பியாக வரும் சமுத்திரக்கனிக்கும் அவர் இதுவரை ஏற்காத பாத்திரம். 

காமெடியன் யோகி பாபு படம் முழுக்க வருகிறார். சமீப காலங்களில் அவர் நகைச்சுவை பெரிதாக ஈடுபடாத நிலையில் இந்தப் படம் அந்தக் குறையை சரி செய்கிறது.

அழகம் பெருமாள், அஜய், துளசி, சாந்தினி இன்னும் பலர் நடித்துள்ளனர்.

அனுபமா பரமேஸ்வரனுக்கு சிறிய வேடம் தான் என்றாலும் மின்னல் போல் மின்னி மறைகிறார்.

ஜீவி பிரகாஷின் இசையில் நீண்ட நாள் கழித்து மெலடி தூக்கலாக இருக்கிறது. செல்வகுமாரின் ஒளிப்பதிவு இந்த படத்தின் பிரம்மாண்டத்தைக் கூட்டி இருக்கிறது அதிலும் அந்த ஆம்புலன்ஸ் சேசிங் அட்டகாசம்.

ஒலியால் ஒரு மனிதனைக் கொல்ல முடியும் என்று படத்தில் ஒரு கொலை நடக்கிறது. அந்தக் காட்சியை இயக்குனர் எழுதும்போதே பக்கத்தில் சிவப்பு மையில் இதற்கு சாம் சி எஸ் சால் மட்டுமே இசையமைக்க முடியும் என்பதை எழுதி வைத்திருக்க வாய்ப்புள்ளது.

படத்தின் பின்னணி இசையை அமைத்திருக்கும் சாம் சி.எஸ் அந்த வேலையைக் கச்சிதமாக செய்திருக்கிறார். ரூபனின் படத்தொகுப்பும் அபாரம்.

குடும்பங்களுடன் பார்க்க முடிகிற… குறிப்பாக உணர முடிகிற படைப்பு.

சைரன் – தந்தை மகளுக்கு ஆற்றும் உதவி..!

– வேணுஜி