July 18, 2024
  • July 18, 2024
Breaking News
February 16, 2024

எப்போதும் ராஜா திரைப்பட விமர்சனம்

By 0 171 Views

சினிமா வானம் சூப்பர் ஸ்டார், சுப்ரீம் ஸ்டார், மெகா ஸ்டார்களால் மட்டும் முடிவடைவதில்லை. இவர்களுடன் பவர் ஸ்டார், பப்ளிக் ஸ்டார், பவுடர் ஸ்டார்களும் அவ்வப்போது வந்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த வரிசையில் வந்திருக்கிறார் ‘விண் ஸ்டார்’. அவர்பெயரையும் சேர்த்துக் கொண்டால் ‘விண் ஸ்டார் விஜய்’.

தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் காக்கிச்சட்டை போட்ட கதைகள் தோற்றதில்லை என்ற உண்மையைப் புரிந்து கொண்டு தானும் ஒரு காக்கி சட்டைக்கு ஆர்டர் கொடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியிருக்கிறார் விண் ஸ்டார்.

அத்துடன் அவரது நடிப்பு ஆசை தீரவில்லை… அவருக்கு ஒரு தம்பி கேரக்டர் வைத்து, அந்த வேடத்திலும் அவரே நடித்து விட்டார். அண்ணன் தேசிங்கு ராஜா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆக இருக்க, தம்பி நாடறிந்த (!) ‘வாலிபால் ராஜா’வாக இருக்கிறார்.

வழியில் பார்க்கிற பெண்கள் எல்லாம் இந்த வாலிபால் ராஜாவிடம் வழிகிறார்கள். “நான் உங்க ரசிகை…” என்று அவரை எடக்கு, முடக்காக மடக்க இவர் அவர்களிடம் எஸ்கேப் ஆகிக்கொண்டே போகிறார். இவரை நம்பி தான் தமிழ்நாடு வாலிபால் டீமே இருக்க இந்திய அளவில் நடைபெறும் மேட்ச்சில் இவர் இடம் பெற இருக்க… என்ன ஆகிறது என்பது கதை.

அண்ணன் இன்ஸ்பெக்டர் ராஜாவோ ஒரு பெண் ஜர்னலிஸ்ட் கடத்தப்பட்ட சம்பவத்தில், கடத்தியவர்களை சுளுக்கெடுத்து உள்ளே தள்ளுவதில் அவரை முதல்வர் ஸ்டாலின், சன் டிவி கலாநிதி மாறன், தயாநிதி மாறன் எல்லோரும் பாராட்டுகிறார்கள். ( அட… ஆமாங்க… ஆமா..!)

அதேபோல் மேற்படி வாலிபால் ராஜாவை கிளைமாக்சில் பிரதமர் மோடி தன் x தளத்தில் பாராட்டுகிறார். ( இந்த விஷயமெல்லாம் அவங்களுக்குத் தெரியுமா..?)

இவர்கள் இருவருக்கும் முறையே டேப்லினா, பிரியா என்று ஜோடிகள். இருவருக்கும் டூயட் பாடல்களும் உண்டு.

எம்.ஜி.ஆர், ரஜினி போல் இவர்களை மக்கள் வாழ்த்திப் பாடும் பாடல்களும் உண்டு. வசனங்களும் அவர்களை மனத்தில் வைத்தே எழுதப்பட்டிருக்கின்றன.

அதில் ஓரிடத்தில் இன்ஸ்பெக்டர் ராஜாவுக்கு மணமுடிக்க அவரது அம்மா அவரிடம் “எப்படிப்பட்ட பெண் வேண்டும்..?” என்று கேட்க, பதிலுக்கு ராஜா, “ஒரு விதவையோ, வாழ்விழந்த பெண்ணோ, மாற்றுத் திறனாளியாகவோ இருந்தால் ஓகே…” என்கிறார். ( முடியல… ராஜா… முடியல…)

அதன்படியே பாலியல் தொழிலில் தள்ளப்படவிருந்த ஒரு பெண்ணைக் காப்பாற்றி மணமுடித்துக் கொள்கிறார்… இதெல்லாம் சாம்பிள்தான்..!

படத்தின் பட்ஜெட் குறைவு என்பதால்… தமிழ்நாட்டுக்காக இந்திய அளவில் ஆடும் வாலிபால் ராஜா தன் வீட்டு மொட்டை மாடியிலும், மாடி படிக்கட் கைப்பிடிச்சுவர்களிலும் பந்தைப் போட்டு போட்டு பிராக்டிஸ் செய்து கொள்கிறார்.

இரண்டு ராஜாக்களும் முழுப்படத்தை ஆக்கிரமிக்க, நமச்சிவாயம், சோமசுந்தரம், லயன் குமார், ஜெயவேல், செல்வகுமார், ஜோ மல்லூரி எல்லாம் இண்டு, இடுக்கை நிரப்புகிறார்கள். எல்லோருக்கும் சிங்கிள் டேக்கே ஓகே போல…

வில்லி கேரக்டரில் வரும் கும்தாஜ், இறுதிப் போட்டிக்கு வாலிபால் ராஜா போகாமல் தடுக்க, அவரை சல்லாபத்துக்கு அழைக்கிறார். பதிலுக்கு ராஜா, “மண்ணு தின்னப் போற உடம்பு, பொண்ணு தின்னா என்ன..?” என்று கேட்கிறார் பாருங்கள்… 

பெட்ரூம் மேட்சை சப்ஜாடாக முடித்த கையோடு வாலிபால் மேட்சிலும் வென்று இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீரராகவும் ஆகிறார்.

அடுத்த பார்ட்டும் வருகிறது என்று கடைசியில் போடுகிறார்கள் –

விண் ஸ்டார்… உன் கான்பிடன்சுக்கு அளவே இல்லையா..!?