அனுபவ நடிகர் விஜயகுமார் தன்மகன் அருண் விஜய்க்காக தயாரித்திருக்கும் படம் இது. அப்பாவைப் போலவே சினிமா துறையில் நல்ல பெயர் எடுத்த அருண் விஜய் திறமையிலும் அவருக்கு குறைந்தவர் இல்லை என்று இந்த படம் மூலம் நிரூபித்திருக்கிறார்.
ஏற்கனவே அழகியலோடு அருமையான படங்களைத் தந்த ஜிஎன்ஆர் குமரவேலன் இயக்கி இருக்கும் படம் இது என்பதால் படம் வெளியாவதற்கு முன்பே ஒரு எதிர்பார்ப்பு இருந்தது நிஜம்.
அந்த எதிர்பார்ப்புக்கு சற்றும் குறை வைக்காமல் முதல் காட்சியில் இருந்து பரபரப்பின் பக்கம் நம்மை இழுத்துச் செல்கிறார் ஜிஎன்ஆர் குமரவேலன்.
ஒரு போலீஸ் அதிகாரி எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நேர்மையாகவும் மிடுக்காகவும் நடந்து கொள்கிறார் அருண் விஜய். அந்தந்த காட்சிகளுக்கு ஏற்ற உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தி நடிப்பிலும் முத்திரை பதிக்கிறார் அவர்.
நாயகி பாலக் லால்வாணியுடன் காதல் அரும்பும்போதும், ஆகாத மாப்பிள்ளையாக மாமனாரிடம் ஆனாலும், மரியாதையை குறைத்து விடாத பண்பிலும் மிளிரும் அருண் விஜய், பணியிலிருந்து விடுவிக்கப்படும் நேரம் தன் மாண்பைக் காப்பாற்றிக் கொள்வதிலும் தன் தனித்தன்மையை நிரூபித்திருக்கிறார்.
பாலக் லால்வாணியும் காதலிக்கத் தகுந்த மனைவியாக வந்து கொள்ளை கொள்கிறார். அவருக்கு நேரும் சோகம் நமக்கு அதிர்ச்சி தருகிறது.
அருண் விஜய்யின் நம்பிக்கைக்கு உரிய தலைமைக்காவலராக நடித்திருக்கும் காளிவெங்கட்டின் நடிப்பும் அருமை. போலீஸ் கமிஷனராக வரும் ஆர்.என்.ஆர்.மனோகர் அருண் விஜய் மீது வைக்கும் நம்பிக்கை வியக்க வைக்கிறது.
நீண்ட காலம் கழித்து மறுமலர்ச்சி பாரதி நடித்திருப்பது நன்று.
ஷபீர் இசையில் பாடல்கள் கவனிக்க வைக்கின்றன. பின்னணி இசை தேவைக்கு இதமாக இருக்கிறது.
கோபிநாத் ஒளிப்பதிவு படத்தின் நேர்த்திக்கு உதவி இருக்கிறது.
படத்தின் கிளைமாக்ஸ் நீதிக்கு எதிரானதாக இருந்தாலும் தனி மனித தர்மத்தை உறுதி செய்கிறது. ஆனால், இதன் மூலம் அவர் மனைவி மீது ஏற்பட்ட களங்கம் உண்மை என்றல்லவா ஆகி விடும்..?
அதேபோல் முன்பாதிக் கதை எந்த விதத்திலும் பின் பாதிக்கு உதவவே இல்லை.
இருந்தாலும் இதை எல்லாம் கவனிக்க வைக்காமல் பறக்கிறது திரைக்கதை.
சினம் – தப்பும் தண்டனையும்..!