April 27, 2024
  • April 27, 2024
Breaking News
September 17, 2022

வெந்து தணிந்தது காடு திரைப்பட விமர்சனம்

By 0 539 Views

இலக்கியத்தில் பெயர் வாங்கியவர்கள் சினிமாவுக்குள் வரும்போது அது வெற்றி பெறாது என்றொரு எண்ணம் ஒரு காலத்தில் இருந்தது. அந்த எண்ணத்தை மெதுமெதுவே சுஜாதா மாற்றிக் காட்டினார்.

அதற்குப் பிறகும் பல எழுத்தாளர்கள் சினிமாவுக்குள் வந்து கொண்டிருந்தாலும் சுஜாதா பெற்ற வெற்றியை இவர்களால் பெற முடியவில்லை என்பது உண்மை. அந்த வகையில் இந்தப் படத்தில் எழுத்தாளர் ஜெயமோகனும், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனும் கைகோர்த்து இருக்கிறார்கள்.

இரண்டு வெவ்வேறு ஆளுமைகள் ஒன்று சேரும்போது என்ன நடக்குமோ அது நடந்திருக்கிறது.

தென் மாவட்ட முள்ளுக்காட்டு பராமரிப்பு வேலையில் இருந்து பஞ்சம் பிழைக்க வெளியூர் செல்ல நினைக்கிறார் சிம்பு. அம்மா மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வரும் அவருக்கு மும்பை செல்ல ஒரு வாய்ப்பு கிடைக்கிறது.

மும்பைக்கு செல்ல எத்தணிக்கும் வேளையிலேயே அப்படி அனுப்பியவர் தூக்கில் தொங்க அவருக்குப் பின்னால் ஏதோ மர்மம் இருப்பதை உணரும் சிம்பு அவருடைய கைத்துப்பாக்கியுடன் மும்பை பயணமாகிறார்.

ஆயுதம் எடுப்பவனுக்கு அந்த ஆயுதத்தினால்தான் மரணம் என்கிற மொழிக்கேற்ப அதற்கு பின் என்ன நடந்தது என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

படத்தின் ஆகப்பெரிய பலம் சிம்பு. வேறெந்தப் படத்திலும் இல்லாத அளவில் உடல் இளைத்து 20 வயது இளைஞனாகவே கண் முன் தோன்றுகிறார். உடல் மொழியிலும் அப்படி ஒரு வித்தியாசம். கொஞ்சம் கூட ஹீரோவுக்குரிய கிளாமர் சேர்த்துக் கொள்ளாமல் அப்படியே பஞ்சம் பிழைக்க வரும் இளைஞனாக சிம்பு நடித்திருப்பது அவரது பயணத்திலேயே புத்தம் புது முயற்சி.

அந்த அர்ப்பணிப்பே இந்தப் படத்தை இறுதி வரை என்ன ஆகிறது என்று பார்க்க வைக்கிறது. கையில் நயா பைசா இல்லாவிட்டாலும் தன்னுடைய தன்மானத்தை சொந்த ஊரிலிருந்து காப்பாற்றி கொண்டு வரும் சிம்பு கடைசி வரையிலும் அதை இழக்காமல் இருப்பது சிறப்பு.

முதல் பாதி வரை நாம் பார்ப்பது தமிழ்ப்படம் தானா என்கிற அளவில் அழகியலோடு இயல்புத் தன்மையுடன் நகரும் கதை பின் பாதியில் வேகம் எடுத்தாலும் சினிமாத் தனமாகவே நகர்கிறது.

தென் மாவட்டங்களில் இருந்து மும்பைக்கு சென்று செட்டிலான அத்தனை பேரும் இன்னும் நெல்லைத் தமிழே பேசிக் கொண்டிருக்க சிம்பு மட்டும் வந்த ஆறு மாதத்திலேயே இயல்பான தமிழ் பேசிக் கொண்டும், இந்தி ஆங்கிலமெல்லாம் பேசிக் கொண்டும் வருவது வழக்கமான சினிமா க்ளிஷே.

ஆனாலும் சிம்பு ரசிகர்களை மனதில் வைத்து காட்சிக்குக் காட்சி கைத்தட்டல் கிடைக்க வேண்டும் என்று முயன்று இருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன். 

சிம்பு என்றாலே காதல் வரவேண்டும் என்பதற்காக சித் இத்னானியுடன் அவருக்கு ஒரு காதல் எபிசோடும் இருக்கிறது. 

சிம்புவின் பாத்திரம் வடிவமைக்கப்பட்ட அளவுக்கு நாயகி சித் இத்னானியின் பாத்திரப் படைப்பு அமைக்கப்படாதது கொஞ்சம் தடுமாற்றம் தருகிறது.

மற்றபடி படத்தில் நடித்திருக்கும் அப்புக்குட்டி, நீரஜ் மாதவ், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட அத்தனை பாத்திரங்களும் உயிரோட்டமாக உலவிக் கொண்டிருக்கிறார்கள்.

வழக்கமாக தமிழர்களையே தன் படங்களில் வில்லனாக்கும் கௌதம் வாசுதேவ் மேனன் இந்த முறை மலையாளிகளையும் வில்லனாக்கி இருக்கிறார். படத்தில் தெரியும் வன்முறையின் அடிநாதமே மலையாள தாதா சித்திக்கும், தமிழ் தாதா சராவும் அடித்துக் கொள்வதுதான். அதற்கு ஏகப்பட்ட அப்பாவி இளைஞர்கள் இரண்டு பக்கமும் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் தாதா சராவுக்கு நன்றாக நடிக்க வருகிறது. ஆனால், ஏகப்பட்ட பில்டப்புகளுடன் அறிமுகமாகும் அவர், போகப் போக எப்படித்தான் இவ்வளவு பெரிய தாதா ஆனார் என்று தோன்றுகிறது.

பாடல்கள் முந்தி வந்து விட்டதால் ஏ.ஆர். ரகுமானின் இசையில் உண்டான பாடல்களான ‘மறக்குமா நெஞ்சம்’, ‘மல்லிப்பூ’ படத்தில் பார்க்கும்போது பிடித்துப்போய் விடுகிறது. ஆனால் பின்னணி இசை அவர் அமைத்ததா என்பது தெரியவில்லை. காட்சிகளின் உணர்ச்சிகளுக்கு ஒவ்வாமல் ஒலித்துக் கொண்டிருக்கிறது ஆர்ஆர்.

சித்தார்த்தா நுனியின் ஒளிப்பதிவில் தென் தமிழ்நாட்டு வறட்சியும், மும்பையின் குரூர முகமும் அப்பட்டமாகத் தெரிகிறது. குறுகிய இடங்களிலேயே சண்டைக் காட்சிகளைப் படமாக்கியிருப்பதில் அவரது திறமை பளிச்சிடுகிறது. இதில் ஸ்டண்ட் மாஸ்டரையும் பாராட்டியே ஆக வேண்டும்.

சிம்புவின் அர்ப்பணிப்பு இந்தப் படம் முழுவதும் தெரிகிறது. அவருடைய நடிப்புப் பயணத்தில் இந்த பயணம் ஒரு மைல் கல்லாக அமையும். அந்த வகையில் இது ஒரு வித்தியாசமான முயற்சிதான்.

ஆனால் கௌதம் மேனனின் இயக்கத்தில் அவருடைய தனிப்பாணி காணாமல் போய் அசுரன், கேஜிஎஃப், விக்ரம் என்று சமீபத்தில் வெற்றி பெற்றபடங்களின் பாதிப்பு அதிகமாகத் தெரிகிறது.

படத்தின் நீளத்தைக் குறைத்து இருந்தால் படம் சுவாரஸ்யப்பட்டிருக்கும்.

படம் நெடுக ஏகப்பட்ட கொலைகளைச் செய்திருக்கிறார் சிம்பு. இது எப்படி நியாயப்படும் என்று தெரியவில்லை.

கடைசியில்… எடுத்த துப்பாக்கியை சிம்பு வைக்கும் போது வெம்மை தணிந்து விடும் என்றுதான் நினைக்கிறோம். ஆனால் அதற்கும் மேல் அவர் போய்க் கொண்டிருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது.

இரண்டாவது பாகத்தில்தான் இந்த நெருப்பு தணியும் போல இருக்கிறது.

வெந்து தணிந்தது காடு – இன்னும் தணியவில்லை சூடு..!