அதிக உடல் எடை கொண்டவர்கள் மட்டுமே இசையமைப்பாளர் ஆக முடியும் என்கிற அளவில் ஸ்ரீகாந்த்தேவா, இமான், தமன் மற்றும் சைமன் கிங் என்ன என இளைய இசையமைப்பாளர்கள் எல்லோருமே அதிக அளவில் உடல் எடை கொண்டவர்களாக இருந்தனர்.
இவர்களில் அதிசயிக்கத் தக்க வகையில் இமான் தன் உடல் எடையை குறைத்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்தினார். அவர் வழியில் இப்போது இன்னொரு அதிசயம் நடந்திருக்கிறது.
‘கொலைகாரன்’ படப்புகழ் சைமன் கே.கிங், நான்கரை மாதங்களில் 24 கிலோ எடையைக் குறைத்து, அந்தப் படத்தை சமுக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த காரணத்தால் மீண்டும் இப்போது பேசு பொருளாகியிருக்கிறார்.
கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில், வேலை எதுவுமின்றி வீட்டில் அமர்ந்து சாப்பிட்டதைத் தவிர வேறு எதுவும் செய்யாத பலரும் உடல் எடை கூடிவிட்டதை கவலையுடன் பகிர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் சைமன் கே.கிங் உடல் எடையைக் குறைத்தது எப்படி? இதோ அவரை கூறுகிறார்…
“மூன்று கிலோ எடையைக் குறைக்க வேண்டும் என்ற சிறிய இலக்குடன்தான் ஆரம்பித்தேன். மூன்று கிலோ எடையை குறைத்தது மேலும் அதைத் தொடர எனக்கு மிகப் பெரிய உந்து சக்தியாக இருந்தது. இந்த எடை குறைப்பு நடவடிக்கை என்பதுகூட எதிர்பாராமல் செய்த திடீர் முடிவுதான். சர்வதேச பரவலாக அமைந்த இந்த ஊரடங்கு, என்னை நானே உருமாற்றிக் கொள்ள எனக்கு வரமாக அமைந்ததுடன், இந்த சமயத்தில் கிடைத்த ஓய்வு நேரம் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாற உதவியாகவும் இருந்தது.
நண்பர்கள் பலரும் எப்படி இந்த அளவுக்கு எடையைக் குறைத்தீர்கள் என்று கேட்கின்றனர். இதில் ரகசியம் ஒன்றும் இல்லை. விரும்பி சாப்பிட்டு வந்த ஆடம்பர மற்றும் குப்பை உணவுகளைத் தவிர்த்துவிட்டு வீட்டிலேயே அவ்வப்போது புதிதாக தயாரிக்கும் உடலுக்குகந்த உணவுகளையே சாப்பிடத் தொடங்கியதுடன் உடற்பயிற்சியையும் மேற்கொண்டேன்.
கோவிட் 19 ஊரடங்கு காலத்தில் உடற்பயிற்சிக்கூடங்களும் மூடப்பட்டிருந்த காரணத்தால், எனது நண்பரும் நெடுந்தூர ஓட்டப் பந்தயங்களுக்குப் பயிற்சியளிப்பவருமான ராம்நாத் மூலம் நான் சில பிரத்யேக பயிற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்தேன்.
வாரத்துக்கு மூன்று நாட்கள் அதி தீவிர HIIT எனப்படும் (high-intensity interval training) இடைவெளிப் பயிற்சியும், இரண்டு நாட்களுக்கு மிதமான மார்பு இயக்கப் பயிற்சியும் செய்தேன்.
பிரத்யேகமாக எனக்கென வடிவமைக்கப்பட்ட இந்தப் பயிற்சிகள், பயிற்சியாளரின் நேரடியான மேற்பார்வையிலும், ஆன் லைன் மூலமாகவும் தொடர்ந்து நடைபெற்றது. கடினமாகப் பயிற்சி எடுத்தல் ஓய்வெடுத்தால் மீண்டும் கடினமாக பயிற்சி எடுத்தல் இவைதான் பயிற்சியின் எளிய விதிகள். இதற்காக ஆடம்பரமான உடற்பயிற்சிக்கூடமோ, சாதனங்களோ தேவையில்லை.
ஒரு சாதாரண இயக்கத்தின் மூலம் உங்கள் இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்ய வேண்டும். அவ்வளவுதான். வேகமாக சைக்கிள் ஓட்டுவது, மாடிப்படிகளில் வேகமாக ஏறி இறங்குவது போன்றவையெல்லாம்கூட தீவிரமான HIIT (high-intensity interval training) வகை பயிற்சியைச் சேர்ந்ததுதான்” என்றார் சைமன் கே.கிங்
தனஞ்ஜெயன் தயாரிப்பில் பிரதீப் இயக்கும் இருமொழிப் படமான ‘கபடதாரி’ படத்தின் பின்னணி இசைக் கோர்ப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் சைமன் கே.கிங், தொடர்ந்து ‘கொலைகாரன்’ படத்தை இயக்கிய ஆன்ட்ரூ லூயிஸின் பெயரிடப்படாத படத்தில் பணியாற்றவிருக்கிறார்.
உடல் எடையை குறைத்த சைமன் கே இசையில் இளைத்திருக்க மாட்டார் என்று நம்புவோம்..!