‘வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்’ சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது மிக மிக அவசரம்’ படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார்.
கதாநாயகி ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ள படத்தில் இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் காவல்துறை உயரதிகாரியாக நடித்துள்ளார்.
‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’ ஆகிய படங்களின் இயக்குநர் ஜெகன்நாத் இந்தப்படத்தின் கதையை எழுத, இஷான் தேவ் இசையமைத்துள்ள இந்தப்படத்திற்கு பாலபரணி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜா, இயக்குனர் பாக்யராஜ், இயக்குனர் சேரன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரரும் இயக்குனருமான சீமான், நடிகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜேகே ரித்தீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வந்தவர்கள் பேசியதிலிருந்து…
படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான சுரேஷ் காமாட்சி –
“எப்போதுமே என்னை சர்ச்சையாக பேசுகிறான் என்கிறார்கள். உண்மையை பேசினால் அதை சர்ச்சை எனக் கூறினால் நான் தொடர்ந்து அப்படிதான் பேசுவேன். இந்த படத்தைப் பற்றி, படக்குழுவினரை பற்றி இந்த படத்தின் வெற்றிவிழாவில் பேசினால் தான் சரியாக இருக்கும்..
படத்தைப் பார்த்துவிட்டு குறை நிறை என எதுவாக இருந்தாலும் வெளிப்படையாகவே சொல்லுங்கள்.. ஏனென்றால் விமர்சனம் என்பது இங்கே கட்டாயம் தேவை.. அது ஆரோக்கியமாக இருக்க வேண்டும் விமர்சிப்பவர்கள் மீது புகார் கொடுப்பதில் எல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை..
நாம் இதுபோல செய்தால், படத்தில் நாம் கடுமையாக விமர்சிக்கும் அதிகாரிகள், அமைச்சர்கள் எல்லாம் இதே விஷயத்தை பின்பற்றி நம் மீது திருப்பினால் என்ன ஆகும் என்பதை யோசிக்க வேண்டும்..!”
இயக்குனர் சேரன் –
“சுரேஷ் காமாட்சி என்றாலே ஏதாவது மேடைகளில் சினிமாவில் உள்ள பிரச்சனைகளைப் பற்றியே பேசுபவராக, முக்கியமான தலைகளை எதிர்த்து குரல் கொடுப்பவராக பார்க்கப்படுகிறார். ஆனால் அவருக்கு இரண்டு முகங்கள் உண்டு.. அவர் பேசும்போது நமக்கு தெரிவது ஒரு முகம். ஆனால் ஒரு படைப்பாளியாக அவரைப் பார்க்கும்போது நிச்சயம் முற்றிலும் மாறாக இருக்கிறார்.
இந்தப் படத்தை நான் பார்த்ததும் அவரிடம் நீங்கள் இனிமேல் நிறைய பேசாதீர்கள், அடுத்தடுத்து படங்களை இயக்குவதில் கவனம் செலுத்துங்கள் எனக் கூறினேன்.
இந்த படத்தின் நாயகி ஸ்ரீ பிரியங்கா தமிழ் பெண்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என்கிற ஆதங்கத்தை வெளிப்படுத்தும் போதெல்லாம் நான் என்னைத்தான் சொல்கிறார்கள் என நினைத்துக்கொள்வேன். காரணம் கேரளாவில் இருந்து அடிக்கடி புது நாயகிகளை எனது படத்தில் அதிகம் அறிமுகப்படுத்தியது நான்தான்.. அதற்கு காரணம் தமிழ்நாட்டில் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு நடிப்புத் திறமையுள்ள பெண்கள் நடிக்க ஆர்வமாக முன் வராததுதான்.!”
இயக்குனர் பாக்யராஜ் –
“இந்த படத்தின் திரைக்கதை டைரக்ஷன் சுரேஷ் காமாட்சி என்ற பெயர் பார்த்தபோது, கதையை யார் எழுதியிருப்பார்கள் என்கிற யோசனை கொஞ்ச நாளாகவே இருந்தது. இங்கே வந்து போதுதான் அது ஜெகன் என எனக்கு தெரிந்தது. பொதுவாகவே கதாசிரியர்களுக்கு இங்கே பொருளாதார ரீதியாக மரியாதை சற்று குறைவாகவே இருக்கிறது அதிலும் நான் சங்கத்தில் பொறுப்பேற்ற பிறகுதான் அது நன்றாகவே தெரியவருகிறது.
தான் இயக்கும் முதல் படத்தில் கமர்ஷியலாக யோசிக்காமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் இயக்கியதற்காகவே சுரேஷ் காமாட்சியை பாராட்டலாம்..!”
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் –
“ஆண் காவலர்களுக்கு நிறைய சிரமங்கள் இருந்தாலும் அவர்களை விட பெண்களுக்கு அதிகம் சங்கடங்கள் இருக்கவே செய்கின்றன. அதனால்தான் ஆண் காவலர்களுக்கு 8 மணி நேரம், பெண் காவலர்களுக்கு 6 மணி நேரம் மட்டுமே பணி செய்ய ஒதுக்க வேண்டும் என்கிற கோரிக்கையை தொடர்ந்து முன்வைத்து வருகிறோம்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் போது அங்கு இளைஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியபோது அவர்களிடம் பேசி போராட்டத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவருவதற்காக நானும் அமீர் உள்ளிட்டவர்களும் சென்றிருந்தோம்.
அப்போது அங்கே பாதுகாப்புக்காக வந்திருந்த பெண் காவலர்கள் எங்களைப் பார்த்து அழுதபடி நாங்கள் வீட்டை விட்டு வந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டது மாற்றுத் துணி கூட கொண்டு வரவில்லை. எங்கள் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதுகூட எங்களுக்கு தெரியவில்லை. தயவுசெய்து இந்த போராட்டத்தை சீக்கிரம் முடியுங்கள். அப்போதுதான் நாங்கள் வீடு திரும்ப முடியும் என கெஞ்சியதை பார்த்ததும் பெண் காவலர்களின் நிலை என்னவென்று தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது.
இன்று தொலைக்காட்சி விவாதங்களில் பார்த்தால் அதில் பேசும் அனைவரும் ரஜினி பற்றி பேசும்போது, தலைவருடன் நடித்தேன்.. தலைவருடன் பேசினேன். தலைவருக்காக கதையை தயார் செய்தேன் என அவரை எப்போதுமே தலைவர் என்றுதான் கூறுகிறார்கள். அவர் தலைவர் என்றால் பிரபாகரன், காமராஜர், கக்கன் போன்றவர்களெல்லாம் யார்..? சினிமாவில் நடிப்பதால் மட்டுமே தலைவன் ஆக முடியாது..!
இயக்குனர் இமயம் பாரதிராஜா –
“நாங்கள் கலைஞர்கள்.. எங்களுக்கு எல்லா முகமும் உண்டு.. என் ஆளோட செருப்ப காணோம் என்கிற படத்தை எடுத்தவன்தான் மிகமிக அவசரம் என்கிற இந்த சமூக அக்கறையுள்ள படத்தின் கதையையும் எழுதி இருக்கிறான். இந்த படம் பார்க்கும் வரை சுரேஷ் காமாட்சியை ஒரு சாதாரண தயாரிப்பாளர் என்கிற அளவிலேயே அறிந்திருந்தேன். ஆனால் இந்தப் படம் பார்த்துவிட்டு நிஜமாக நீதான் இந்த படத்தை இயக்கினாயா என்று கேட்டேன். அப்புறம் தான் தெரிந்தது சுரேஷ் காமாட்சி ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்தவர் என்பது.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பெண் காவலர்களை பார்க்கும்போது இப்படி வெயிலில் காய்ந்து வாடுகிறார்களே என நினைக்கும்போது கொடுமையாக இருக்கும். நான் சொல்ல நினைத்த ஒரு விஷயத்தை சுரேஷ் காமாட்சி சொல்லிவிட்டார்..!”