November 22, 2024
  • November 22, 2024
Breaking News
December 28, 2022

புத்தாண்டு தினத்தில் ஆதரவாளர்களை சந்திக்கிறார் சசிகலா

By 0 391 Views

அ.தி.மு.கவை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும், விரைவில் அ.தி.மு.கவை தலைமை தாங்க இருப்பதாகவும் சசிகலா தெரிவித்து வருகிறார்.

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில் சசிகலாவும் தனது லெட்டர் பேடில் பொதுச்செயலாளர் என்றே குறிப்பிட்டு அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். அதே நேரத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் நான்தான். கட்சிக்கு தலைமை தாங்குவதும் நான்தான் என்று செயல்பட்டு வருகிறார்.

இதனால் அ.தி.மு.க.வில் நீடிக்கும் குழப்பம் முடிவுக்கு வராமலேயே உள்ளது. இதுதொடர்பான கேள்விக்கு சமீபத்தில் பதில் அளித்த சசிகலா, “பாராளுமன்ற தேர்தலுக்குள் எல்லாம் சரியாகிவிடும். அனைவரையும் ஒருங்கிணைத்து அ.தி.மு.க. தேர்தலை சந்திக்கும் என்றும் தெரிவித்தார். இப்படி அ.தி.மு.க.வில் நடக்கும் பிரச்சினைகளை என்னால் தான் சரி செய்ய முடியும்..!” என்று கூறினார்.

அதே நேரத்தில் அவர் தனியாக கூட்டம் எதையும் இதுவரை நடத்தியது இல்லை. மாவட்டம் வாரியாக சென்று ஆதரவாளர்களை மட்டுமே சந்தித்து உள்ளார்.

இந்த நிலையில் வருகிற ஜனவரி 1-ந்தேதியான புத்தாண்டு தினத்தன்று சசிகலா ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களை சந்திக்கிறார். தி.நகரில் உள்ள இல்லத்தில் அன்று காலை 10 மணி அளவில் ஆதரவு நிர்வாகிகளை சந்திக்கும் சசிகலா, புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறார்.

சசிகலாவை சந்திக்க வருபவர்கள் பூங்கொத்து, பரிசு பொருட்கள் உள்ளிட்டவற்றை எடுத்து வருவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க வருபவர்கள் எதையும் எடுத்து வராமல் வாழ்த்துக்களை மட்டுமே தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆதரவாளர்கள் சந்திப்பின்போது சசிகலா பத்திரிகையாளர்களையும் சந்திக்க முடிவு செய்துள்ளார். அப்போது அ.தி.மு.க.வில் தற்போது நிலவும் பிரச்சினைகள் மற்றும் தனது எதிர்கால அரசியல் பயணம் ஆகியவை பற்றி முக்கிய முடிவுகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.