இந்தப் பூவுலகில் மூன்றாம் உலகப்போர் நேருமானால் அது குடி தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்கிறார்கள் அறிஞர்கள்.
இயற்கையாக கிடைக்கும் குடிநீரை உலக மக்கள் பயன்படுத்த விடாமல் அந்த பொறுப்பை தனியார் கையில் எடுத்துக் கொண்டு விற்பனை செய்ய நேர்ந்தால் அதுவே மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என்கின்றன ஆய்வுகள்.
அதற்கு எடுத்துக்காட்டாக உலகின் பல பல பகுதிகளிலும் இப்படி தனியார் நிறுவனம் குடிநீர் விற்பனையை மேற்கொண்டு அதன் விளைவாக கடும் வறட்சியை சந்தித்து வருவது முன் வைக்கப்படுகிறது.
இந்தியாவில்… ஏன் தமிழகத்தில் கூட இப்படி குழாய் மூலம் தனியார் குடிநீர் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு விட்டது என்று இருக்க இந்த படம் சொல்லும் செய்தி அதிமுக்கியத்துவம் பெறுகிறது.
அப்படி ஒரே இந்தியா ஒரே பைப்லைன் திட்டம் என்று ஒரு திட்டத்தை படத்தில் வில்லனாக சித்தரிக்கப்படும் மாஜி உளவுத்துறை அதிகாரியான சங்கி பாண்டே ஏற்படுத்த முயல, அவரிடம் பயிற்சி பெற்ற உளவாளியான கார்த்தி அதைக் கண்டுபிடித்து முறியடிக்க முடிந்ததா என்பது கதை.
இந்தப் படத்தில் கார்த்திக்கு இரண்டு வேடங்கள். உளவுத்துறை அதிகாரியாக ஒரு வேடத்தையும் அவரது மகன் போலீஸ் இன்ஸ்பெக்டராக இன்னொரு வேடத்தையும் ஏற்று இருக்கிறார்.
படத்தில் முதலில் நமக்கு அறிமுகம் ஆவது இன்ஸ்பெக்டர் கார்த்திதான். தேசத்துரோகி என்று அடையாளம் காணப்பட்ட அப்பாவைப் பெற்றதால் தொடர்ந்து இன்னலுக்கு உள்ளாகும் இந்த கார்த்தி அதை தன் நேர்மையான செயல்களால் முறியடிக்க விரும்பி தன் எல்லா பாசிட்டிவ் பக்கங்களையும் பப்ளிசிட்டியோடு செய்வதில் வல்லவராக இருக்கிறார்.
“கட்சிக்காக தீக்குளிப்பேன்..!” என்று ஒரு டுபாக்கூர் கட்சி உறுப்பினர் சொன்ன காரணத்துக்காக பெட்ரோல் வண்டியோடு வந்து நிற்கும் கார்த்தியின் சாமர்த்தியமும் அதை அலட்டிக் கொள்ளாமல் முடித்துக் காட்டிய விவேகத்திலும் இன்ஸ்பெக்டர் கார்த்தியை நிறையவே ரசிக்க முடிகிறது
வில்லனால் தேசத் துரோகி என்று அறிவிக்கப்பட்ட உளவாளியான சர்தார் என்னும் பாத்திரத்தில் கார்த்தி நடித்த இன்னொரு வேடம் அவரது பயணத்திலேயே புதுமையானது.
அறுபதுக்கு மேல் வயதுள்ள அந்த பாத்திரத்துக்கேற்ற ஒப்பனையில் வரும் கார்த்தி உடல் மொழியிலும் கூட மாறுதலைக் காட்டி நடித்திருப்பது அவருக்கே புதுசுதான். பாதிப் படத்துக்கு மேல் அறிமுகம் ஆனாலும் அவர் பாயும் புலியாக பங்களாதேஷ் சிறையிலிருந்து வெளியே வருவது தியேட்டரை அதிர வைக்கிறது.
அந்த சர்தாரின் இள வயது தோற்றம் கூட பலே. கூத்தில் முருகன் வேடம், ரெஜிஷா விஜயனுடனான காதல் என்று அமர்க்களமாக வந்து உளவாளியாக நாட்டுக்கு உதவினாலும், அதை வெளியே சொல்ல முடியாமல் அப்பாவிடம் திட்டு வாங்கிக் கொண்டிருப்பது பரிதாபம்.
இப்படி படம் முழுக்க கார்த்திக்கே வியாபத்திருக்கும் படத்தில் நாயகிகளாக வரும் ரெஜிஷா விஜயனுக்கும், ராஷி கண்ணாவுக்கும் இட ஒதுக்கீடு கொஞ்சமாகத்தான் அளிக்கப்பட்டிருக்கிறது. இருந்தும் இருவரும் தங்கள் அடையாளத்தைப் பதித்திருக்கிறார்கள்.
இந்த ஹீரோயின்களைத் தூக்கி சாப்பிடும் வேடம் ஒன்று இருக்க அதை ஏற்று இருப்பவர் லைலா. குடிநீரால் தன் மகன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்க, இந்த அபாயத்தை மக்களுக்கு சொல்லியே தீருவது என்று தனி ஒரு போராளியாக அவர் படும் பாடு நெகிழ வைக்கிறது.
லைலாவும் அவர் மகனாக நடித்திருக்கும் ரித்விக்கும் கதைக்குள் வந்ததும்தான் படம் சூடு பிடிக்கிறது.
எந்த சிக்கலான நேரத்திலும் பதற்றப்பட்டுவிடாமல், பயப்படாமல் தன் மழலை மொழியுடன் அதை எதிர்கொள்ளும் ரித்விக் படத்தின் ஆகப்பெரிய பலம். இடைவேளையில் ரித்திக்கின் நிலை கண்டு ஒரு சொட்டு கண்ணீர் விடாதவர்கள் கல்நெஞ்சக்காரர்கள்.
சொல்ல வந்த விஷயத்தை அறிவுபூர்வமாக முன் வைக்க வேண்டும் என்பதால் இந்த படத்தின் வசனத்தை ஐந்து பேர் எழுதி இருக்கிறார்கள். வசனம் கூர்மையாக இருந்தாலும் இன்னும் கொஞ்சம் புரியும்படி இருந்திருந்தால் இன்னும் ரசிக்க முடிந்திருக்கும். அந்த அளவுக்கு ஒலிப்பதிவு தடுமாறி இருக்கிறது.
ஜார்ஜ் வில்லியம்சின் ஒளிப்பதிவும், ஜிவி பிரகாஷ் குமாரின் பின்னணி இசையும் படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்ல உதவுகிறது. ஏறு மயிலேறி பாடலும், அதை பாடி இருக்கும் கார்த்தியும் ரசிக்க வைக்கிறார்கள்.
என்றோ நடந்த கதை என்றெல்லாம் கதை விட்டுக் கொண்டிருக்காமல் இன்றைக்கு நாடு எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சனையை யாருக்கும் பயப்படாமல் கையில் எடுத்து சொன்ன பி.எஸ். மித்ரனுக்கும் அதை தயாரிக்க முன்வந்த லஷ்மன் குமாருக்கும் பாராட்டுக்கள்.
சர்தார் – குடி நீர்ப் புரட்சி..!