September 16, 2024
  • September 16, 2024
Breaking News
May 31, 2018

எங்கள் போராட்டத்தை ரஜினி இப்படி விமர்சித்திருக்க வேண்டாம் – சந்தோஷ்ராஜ்

By 0 1050 Views

நேற்று ரஜினியின் தூத்துக்குடி வருகையின்போது அங்கு மருத்துவமனையின் சிகிச்சை பெறும் சந்தோஷ்ராஜ் என்ற வாலிபர் ரஜினியிடம் “நீங்கள் யார்..? எங்கிருந்து வருகிறீர்கள்..?” என்று கேட்ட கேள்வி நேற்று சமூக வலை தளங்களில் வைரலானது.

ரஜினியைத் திகைக்க வைத்த அந்தக் கேள்வியைக் கேட்ட சந்தோஷ்ராஜ் பி.காம் பட்டப்படிப்பு படித்தவர்.. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றபோது போலீஸ் தாக்குதலில் காயம் அடைந்து தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அங்கு சென்றபோதுதான் ரஜினிக்கு அந்த அனுபவம் ஏற்பட்டது. இது குறித்து சந்தோஷ் மீடியாக்களிடம் பேசியதிலிருந்து…

“நானும் ரஜினி ரசிகன்தான். ‘கபாலி’ படத்தை தியேட்டருக்குள் சீட் கிடைக்காமல் நின்றபடியே பார்த்தவன் நான். அப்படிப்பட்டவர் ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு ஆரம்பத்தில் இருந்தே எங்களுக்கு ஆதரவு கொடுத்திருக்க வேண்டும் என்பதே எங்களின் ஆதங்கமாகும்.

100 நாட்களுக்கும் மேலாக நாங்கள் ஸ்டெர்லைட்டை மூடக்கோரி போராடினோம். அந்த சமயத்தில் ரஜினி எங்களுக்கு ஆதரவு தெரிவித்திருந்தால் எங்கள் போராட்டம் வலிமை பெற்றிருக்கும்.

ஆனால் நடந்ததெல்லாம் எங்கள் எதிர்பார்ப்புக்கு மாறாக உள்ளது. எங்கள் போராட்டத்தைப் பற்றி அவர் இந்த அளவுக்கு விமர்சித்து பேசுவார் என்று நினைக்கவில்லை. எனவே தான் நான் இதுபற்றி ரஜினியிடம் கேள்வி கேட்க நினைத்தேன்.

எனது கோபம் எல்லாம், எங்களுக்கு தேவைப்படும் போது ரஜினி வரவில்லையே என்பதுதான். அதைத்தான் சற்று மாறுபட்ட விதமாக ரஜினியிடம் நான் கேள்வியாக எழுப்பினேன். ரஜினியை வேதனைப்படுத்த வேண்டும் என்பதற்காக நான் அந்த கேள்வியைக் கேட்கவில்லை.

நான் ரஜினியிடம் மட்டும் இப்படி கேள்வி எழுப்பவில்லை. அமைச்சர் கடம்பூர் ராஜு வந்தபோது கூட நான் “தூத்துக்குடி மக்கள் அனைவரும் பணம் திரட்டி தருகிறோம். ஸ்டெர்லைட் ஆலையை மூட முடியுமா?” என்று கேட்டேன்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கூட “ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா?” என்று கேட்டேன். அதற்கு அவர் சிறிது நேரம் யோசித்து விட்டு, “இருக்கிறது” என்றார். உடனே நான், “அப்படியானால் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் நீங்கள் பொறுப்பு ஏற்றுக் கொள்வீர்களா?” என்று கேட்டேன்.

எனது இந்த கேள்விக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எந்த பதிலும் சொல்லாமல் சென்று விட்டார். அடுத்தடுத்த படுக்கையில் இருந்தவர்களை சந்தித்த அவர் சிறிது நேரம் கழித்து மீண்டும் என்னிடம் திரும்பி வந்து, “தம்பி… நீங்கள் கேட்ட கேள்வியை நான் குறித்து வைத்துள்ளேன். நிச்சயமாக எங்களால் முடிந்த நல்லதைச் செய்வோம்..!” என்றார்.

அடுத்த சில மணி நேரங்களுக்கு பிறகு ‘ஸ்டெர்லைட்’ ஆலையை மூடி சீல் வைக்கும் நடவடிக்கையை தமிழக அரசு எடுத்தது..!”