July 8, 2020
  • July 8, 2020
Breaking News
October 18, 2018

சண்டக்கோழி 2 திரைப்பட விமர்சனம்

By 0 919 Views

இது இரண்டாம் பாகங்களின் சீசன் என்பதால் தங்கள் பங்குக்கு இயக்குநர் லிங்குசாமியும், விஷாலும் கைகோர்த்துக் களம் இறங்கியிருக்கிறார்கள், தங்களது வெற்றிப்படைப்பான சண்டக்கோழியின் இரண்டாம் பாகத்தில்.

முதல் பாகம் வெளியாகி 13 வருடங்கள் கழித்து வெளியாகும் இரண்டாவது பாகப் படம் என்பதால் கொஞ்சம் அதிகமாகவே எதிர்பார்க்கிறோம். காரணம் முதல் பாகம் ஒரு ஆக்‌ஷன் படம் எப்படி இருக்க வேண்டுமோ அதன் முழுத்தன்மையுடன் வெளியாகி பாராட்ட வைத்தது. 

இது முதல் பாகத்தின் தொடர்ச்சியா என்றால் “ஆமாம்…” என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், அதைப் புரிந்துகொள்ள பாதிப்படம் ஆகி விடுகிறது. கதையும் ஒரு திருவிழா நடத்துவதற்கான பஞ்சாயத்தில் தொடங்குகிறது. ஏழு வருடங்களாக நடத்தப்படாமல் இருக்கும் வேட்டைக் கருப்பசாமி கோயிலின் திருவிழாவை இந்த வருடம் நடத்தியே ஆக வேண்டும் என்று விரும்பும் ஊர்த் தலைக்கட்டு ராஜ்கிரண் விரும்ப, அதற்கு சுற்றுப்பட்டு கிராமங்களின் பிரதிநிதிகளும் சம்மதம் தெரிவிக்க, ஒரு ஊர்க்காரர்கள் மட்டும் அந்தத் திருவிழாவில் ஒரு உயிர்ப்பலி கேட்கிறார்கள்.

ஏழு வருடங்களுக்கு முன்னால் இதே கோயில் திருவிழாவில் கிடா விருந்து பரிமாறப்பட… அதில் பரிமாறிய தாழ்த்தப்பட்ட சாதிக்காரர் ஒரு ஆதிக்க சாதிக்காரருக்கு கிடாக்கறியை கொஞ்சமாகப் பரிமாறிவிட, அது பேச்சுத் தகராறாகி, அடிதடியாகி பரிமாறியவனைக் கொல்கிறார் ஆதிக்க சாதிக்காரரான விஸ்வநாத். பதிலுக்கு அவர்கள் விஸ்வநாத்தைப் பழிதீர்த்துக் கொல்ல அவரது மனைவியாக வரும் வரலட்சுமி கைம்பெண்ணாகிறார்.

திருவிழா முடிவதற்குள் தன் கணவனைக் கொன்ற அத்தனை பேரையும் வெட்டிச் சாய்த்தால்தான் தன் தாலி, பொட்டை எடுப்பேன் என்று அவர் சபதமிட, அவரது உறவினர்கள் அந்த கும்பலையே வெட்டிச் சாய்க்கிறார்கள். அதில் ஒரு நபர் (ஜானி ஹரி) மட்டும் பாக்கி. அந்த உயிர் போய்விடாமல் ராஜ்கிரண் காத்துநிற்க… எப்போது திருவிழா நடக்கிறதோ அதில் வைத்து அவரைக் கொல்ல வரலட்சுமி அன் கோ காத்துக்கிடக்க…  அதனாலேயே ஏழு வருட திருவிழா நின்று போகிறது. அது தொடர்பாக அரசு நல உதவிகளும் அந்த கிராமங்களுக்குக் கிடைக்காமல் போகிறது.

அதனால் அந்தத் திருவிழாவை நடத்தித் தங்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதுடன் அரசுக்கும் தங்கள் ஒற்றுமையைக் காட்ட நினைக்கும் ராஜ்கிரண் திருவிழாவை வெற்றிகரமாக நடத்தி முடித்தாரா, அதை நடத்த அவரது மகன் விஷால் எப்படி உதவினார், வரலட்சுமி தன் சபதத்தை நிறைவேற்றினாரா என்ற கேள்விகளுக்கு விடைதான் கதை.

இதில் வெளிநாட்டிலிருந்து வருகிறார் விஷால். படத்தில் ராஜ்கிரண் “அப்படியேதான் இருக்கார் இல்ல..?” என்று விஷாலைக் காட்டிக் கேட்பது போலவே 13 வருடங்கள் கழிந்தும் முதல்பாக சண்டைக்கோழி சாயலிலேயேதான் இருக்கிறார் விஷால். அதற்குப் பின் 25 படங்களில் அவர் வயது ஒன்றிரண்டு கூடியதாகத் தெரிகிறதே ஒழிய, தோற்றத்திலோ, ஆக்‌ஷன் விஷயங்களிலோ எந்த மாற்றமோ, தொய்வோ ஏற்படவேயில்லை. இன்னும் கேட்டால் அவரது வேகம் கூடியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

தந்தை சொல் மீறாத மகனாக அவர் நடந்து கொள்ளும் வேடத்தில் அடக்கமாக நடித்தே பொருந்திப் போகிறார். ஒரு கட்டத்தில் அப்பா ராஜ்கிரணே உணர்ச்சி வசப்பட்டு “இவன் வயசுக்கு மீறிய கஷ்டங்களைத் தாங்கி பொறுப்புகளைச் சுமக்கிறான்…” என்று சொல்லும்போது விஷாலைப் பார்க்கையில் அவர் நிஜ வாழ்வில் சுமக்கும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர், நடிகர் சங்கச் செயலாளர் பதவிகளும் அதில் அவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் நம் நினைவில் வந்து போவதைத் தவிர்க்க முடியவில்லை.

அவருக்கு இதில் ஜோடியாக கீர்த்தி சுரேஷ். கோழி பிடிப்பதில் தொடங்கி, கொழு கொம்பான விஷாலைப் பிடிப்பதற்காக பெண் பார்க்க வந்த மாப்பிள்ளையிடம் “உன்னைக் கட்டிக்கிறேன்… அவனை (விஷால்) வச்சுக்கறேன்…” என்று விரட்டி விடுவது வரை அலப்பறையில் அதகளம் செய்திருக்கிறார். முதல் பாகத்தில் நினைவில் நின்ற மீரா ஜாஸ்மினுக்கு ஈடு செய்ய கீர்த்தியை விட்டால் இப்போதைக்கு ஆளில்லை. 

வரலட்சுமியா அது..? அடேங்கப்பா… “உங்க ஊர்க்காரங்க சொல்றதோட சரியா… செய்ய மாட்டீங்களா..?” என்று கணவனைத் தூண்டிவிட்டு அவன் சாவுக்கே காரணமாவதுடன், தன் மகனையும் வன்மத்துடனேயே வளர்க்கும் ‘பேச்சி’யாக காட்சிக்குக் காட்சி பேயாட்சி நடத்தியிருக்கிறார்.

ஊர் போற்றும் துரை அய்யாவாக ராஜ்கிரண். அவருக்கும் வயது ஏறுவதே தெரியவில்லை. நடையில் தளர்வில்லை. நடிப்பிலும் குறைவில்லை. “ஒரு ஊரே வந்தாலும் எதிர்த்து நிக்கலாம். ஒரு பொண்ணு கிட்டயும், சின்ன பையன் கிட்டயும் எப்படி வீரத்தைக் காட்ட..?” என்ற அவரது தயக்கமே அவர் சுத்த வீரர் என்பதைப் பறை சாற்றுகிறது. அவரே வெகுண்டு மகனிடம் கதை முடிக்க சொல்லும்போது அனல் பறக்கிறது.

முதல் பாகத்தில் காமெடியில் கலக்கிய கஞ்சா கருப்புக்கு இதில் ஏனோ வேலையே இல்லை. ஆனால், அந்த வேலையைக் கொஞ்சம் ராம்தாஸ் எடுத்துக் கொண்டு கலகலப்பூட்டுகிறார். மற்றபடி சண்முகராஜன், தென்னவன் எல்லோரும் முதல்பாக சூட்டிலேயே வந்துபோகிறார்கள். இதில் ‘ஹரீஷ் பெராடி’யும், ‘ஆர்ஜை’யும் வில்லி பக்கத்து வில்லங்க வீரர்களாகிறார்கள். பேராசிரியர் ஞானசம்பந்தத்துக்கும் சிறிய வேடம்தான்.

கே.ஏ.சக்திவேலின் ஒளிப்பதிவில்… கே.எல்.பிரவீணின் படத்தொகுப்பில்… யுவனின் பின்னணி இசையில் அனல் பறக்கிறது. இருந்தும் பாடல்களுக்கான இசையில் செவிகளைக் குளிர்விக்கிறார் யுவன்.

முதல் பாகத்தில் பல ஊர்களுக்கு டிராவல் அடிக்கும் கதை இதில் ஒரே ஊரில் சூறாவளியாய் நிலை கொண்டிருக்கிறது. ஆக்‌ஷன் மட்டுமே படத்துக்கு ஆதர்ச சக்தியாக இருக்க அதுவே போதுமானதாக இருந்திருக்கிறது இயக்குநர் லிங்குசாமிக்கு.

எஸ்.ராமகிருஷ்ணன், பிருந்தாசாரதியின் வசனங்களில் ஒருவர் ராஜ்கிரணை ‘புலி’ என்றால், இன்னொருவர் ‘சிங்கம்’ என்கிறார். “மனுஷனைப்போய் புலி சிங்கம்னுகிட்டு…” என்று ராஜ்கிரணே நொந்து கொள்ளும் அளவுக்கு இந்த ‘புலி’, ‘சிங்க’ வசனங்கள் தொடர நமக்கே ஓருகட்டத்தில் ராஜ்கிரண் புலியா, சிங்கமா என்ற சந்தேகம் வந்து விடுகிறது.

சண்டக்கோழி 2 – சண்டைகளைத் தீர்த்து வைத்த சாகசக்கோழி..!

– வேணுஜி