July 14, 2026
  • July 14, 2026
Breaking News
June 5, 2026

சம்ஹாரம் திரைப்பட விமர்சனம்

By 0 143 Views

ஒரு இரவில் பெரும்பாலும் ஒரே வீட்டுக்குள் நடக்கும் திரில்லர் கதை.

ஒரு பக்கம் வயல் காட்டுக்குள் முகமூடி அணிந்த ஒரு உருவம் இருவரை அடித்துக் கொலை செய்கிறது.

இன்னொரு பக்கம் அடுத்த நாள் மாமன் மகனுடன் திருமணம் ஆக இருக்கும் நிலையில் நாயகி ஷருமிஷா தன் காதலனுடன் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்து வெளியேறும் தருணம் அண்ணன் பிரஜினின் பிடிக்குள் சிக்குகிறார்.

ஷருமிஷாவை ஒரு அறைக்குள் அடைக்கும் பிரஜின், தன் மனைவி, காவலாளி இருவருடன் அந்த இரவை தூங்காமல் கழித்து காலையில் தான் திட்டமிட்ட திருமணம் நடைபெற்று ஆக வேண்டும் என்ற பிடிவாதத்தில் இருக்கிறார். 

இந்நிலையில் கார் பழுதடைந்து விட்டதாக நடு இரவில் தன் மகளுடன் வரும் ஒருவருக்கு வீட்டில் அடைக்கலம் கொடுக்கிறார் பிரஜின். அதேபோல் மறுநாள் ஷருமிஷாவை மணக்கவிருக்கும் மாப்பிள்ளை கணேஷ் சாவரட்டில் ஒருபுறமும், ஷருமிஷாவின் ரகசிய அழைப்பின் பேரில் அவளது காதலனும் அதே வீட்டுக்கு வந்து சேர்கிறார்கள்.

கார் ரிப்பேர் ஆகி வந்த தந்தை – மகளும், மாமன் மகன் உயிரோடு இருந்தால் தங்களால் ஒன்று சேர முடியாது என்று நினைக்கும் ஷருமிஷா ஜோடியும், தனித்தனியாக அந்த மாப்பிள்ளை கணேஷ் சாவரட்டிலை அதே இரவுக்குள் கொலை செய்ய முடிவெடுக்க, இவர்களுக்கிடையில் மேற்படி முகமூடி கொலைகாரனும், முகம் தெரியாத இன்னொரு இளைஞனும் வீட்டுக்குள் புகுந்து அவர்களும் அவனைக் கொல்ல முயற்சி செய்ய… அவர்களால் கணேஷ் சாவரட்டிலை கொல்ல முடிந்ததா..?

பிரஜின் அவரையும், தங்கையையும் பாதுகாத்து மறுநாள் திருமணத்தை நடத்தினாரா என்பது தன் மீதிக் கதை.

பல படங்களில் மீசை தாடியுடன் வந்த பிரஜின் இதில் மழமழ சவரம் செய்யப்பட்ட முகத்துடன் வருவதை பார்த்தால் ரொம்ப நல்லவராக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் அவரது செய்கை எல்லாம் வில்லத்தனமாகவே இருப்பதை நாம் உணர அவரது நடிப்பு பெரிதும் கைகொடுக்கிறது.

பிரஜினின் தங்கையாக வரும் ஷருமிஷாதான் கதையின் மையப் புள்ளி என்பதால் படம் நெடுக அவரே வருவதுடன் படத்தையும் வறட்சி  இல்லாமல் பார்த்துக் கொள்கிறார்.

அவரது மாமன் மகனாக நடித்திருக்கும் கணேஷ் சாவரட்டில் முகத்தைப் பார்த்தாலே யாரும் பெண் கொடுக்க மாட்டார்கள். அத்துடன் அவரது நடவடிக்கைகளும் கீழ்த் தரமானதாக இருக்க, ஒரு திருமணத்துக்கு எல்லாம் ஆசைப்படுகிற பிறவியாகவே அவர் தெரியவில்லை.

பிரஜினின் மனைவியாக நடித்திருக்கும் நியா வர்கீஸ் பளிச்சென்று கவனம் கவருகிறார் – ஆனால் பாத்திரப் படைப்பு அவருக்கு வலுவாக இல்லை.

இவர்களுடன் ராஜ்குமார் , தென்றல் ராஜா, ரம் பிரபா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை தங்களால் இயன்ற அளவில் செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சுரேஷ்குமார் சுந்தரதுக்குதான் ஒரே வீட்டுக்குள் சுற்றி சுற்றி படம் எடுக்க வேண்டிய சிக்கலான பணி. ஆனாலும் பார்க்கிற அளவில் படமாக்கி தன் பெயரைக் காப்பாற்றிக் கொள்கிறார்.

பாடல்கள் இல்லை… அதனால் உங்கள் பின்னணி இசைதான் படத்தைத் தூக்கி நிறுத்த வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள் போலிருக்கிறது .இசையமைப்பாளர் வி.ஜி.ஹரி கிருஷ்ணன் படத்தில் வாத்திய கருவிகளை (வ)கைக்கு ஒன்றாக வைத்து வாசித்துத் தள்ளி இருக்கிறார். கொஞ்சமாவது கேப் விட மாட்டாரா என்று ஏங்க வைத்தும் விடுகிறார்.

எழுதி இயக்கியிருக்கும் ராம் பிரபா, சிறிய பட்ஜெட்டில் ஒரு பரபர திரில்லர் படத்தை கொடுக்க நினைத்திருக்கிறார். அதை நினைத்த அளவில் எடுத்தும் இருக்கிறார்.

ஆனால், லாஜிக் விஷயங்களில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். 

யாரும் எதிர்பாராத அளவில் கிளைமாக்ஸ் அமைந்திருக்கிறது. 

சம்ஹாரம் – அண்ணன் காட்டிய வழி..!

– வேணுஜி