விக்ரம் வேதா வெற்றியின் காரணங்களில் ஒன்றான இசையை உருவாக்கிய ‘சாம் சிஎஸ்’தான் இன்று கோலிவுட் இசையின் நம்பிக்கை நட்சத்திரம். இப்போது கேரளாவிலும் தன் இசையுடன் களம் புகுந்திருக்கும் சாம் சி.எஸ்ஸுக்கு முதலடியே மோகன்லாலின் ‘ஒடியன்’ படமாக அமைந்தது சுவாரஸ்யம்.
“விக்ரம் வேதா ரிலீஸுக்குப் பிறகு பாலிவுட் உட்பட பல படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புகள் எனக்கு வந்தன. ஆனால் மோகன்லால் சாரின் ‘ஒடியன்’ படத்துக்கு கேட்டபோது என்னால் தவிர்க்க முடியவில்லை. நான் லீனியர் கதை சொல்லலில் மிக சிறப்பாக அமைந்திருந்தது ‘ஒடியன்’ என்கிற ‘சாம் சிஎஸ்’ தொடர்ந்தார்..
“ஒடியன் ஒரு குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட பிரதேசத்தில் நடக்கும் ஒரு திரில்லர். கதையைக் கேட்ட உடனே கேரளாவின் பழங்கால புராதன இசைக்கருவிகளை உபயோகிக்கலாம் என்ற யோசனை தோன்றியது. .
வழக்கமாக மூங்கில் இசைக்கருவி என்றால் அது ஃப்ளூட் தான். ஆனால் 6 அடி நீளம் மூங்கில் இசைக்கருவி ஒன்று பயன்படுத்தப் படுவதைக் கேள்விப்பட்டு அதை இசைக்கத் தெரிந்த வயதான பெண் ஒருவரை இசைக்க வைத்து, படத்துக்கு பயன்படுத்தினோம்…” என்றார்.
படப்பிடிப்புக்கு முன்பே சில காட்சிகளுக்கு இசையமைத்து, ஒட்டு மொத்த ஒடியன் படக்குழுவையும் கவர்ந்து விட்ட சாம், இரண்டு காரணங்களால் சொர்க்கத்தில் இருப்பதாக உணர்கிறாராம். “ஒன்று மோகன்லால் படம் தன்னுடைய முதல் படமாக அமைந்தது, மற்றொன்று ஒடியன் படம் வழக்கத்துக்கு மாறாக இசையில் பரிசோதனை முயற்சிகள் செய்து பார்க்கும் படமாக அமைந்தது..!” என்கிறார்.
இதற்கிடையில் கரு, கொரில்லா, அடங்க மறு, மிஸ்டர் சந்திரமௌலி, வஞ்சகர் உலகம் உள்ளிட்ட படங்களால் தமிழ் திரை உலகிலும் சாமின் இசைக்கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது.