November 22, 2024
  • November 22, 2024
Breaking News
December 23, 2023

சலார் 1- சீஸ்ஃபயர் திரைப்பட விமர்சனம்

By 0 297 Views

நடக்காத ஒன்றை நடந்ததாக நம்ப வைப்பதுதான் சினிமா. ஆனால் இயக்குனர் பிரசாந்த் நீல், இல்லாத ஒரு தேசத்தையும், இல்லாத மனிதர்களையும் இருப்பதாகக் காட்டுவதில் பலே கில்லாடி. 

அப்படித்தான் கேஜிஎப்- இல் இந்தியாவையே மிரட்டி தன் கைக்குள் வைத்திருக்கும் கொடூர வில்லன்களைக் காட்டினார். 

இந்தப் படத்தில் அதேபோல் இந்தியாவுக்கு பக்கத்தில் இருந்த கான்சார் என்ற தேசத்தை காட்டுகிறார். அதில் இருக்கும் மூன்று பிரிவுகள் இந்தியாவையே கைக்குள் வைக்கக்கூடிய அளவுக்கு சக்தி பெற்றவையாம். அங்கு நடக்கிற அரசியல் சூழ்ச்சிகள் இந்தியாவுக்குள் எப்படியெல்லாம் ஊடுருவி சம்பந்தப்பட்டவர்களை (நம்மையும் தான்) படாதபாடு படுத்துவதை இந்தப் படத்தில் காட்டியிருக்கிறார்.

தொடக்கத்தில் மேலே சொன்ன கான்ஸார் இனக்குழுக்களுக்குள் கலவரம் நடக்க, அதில் ஒரு தாயும் சிறுவனும் தப்பித்து போகிறார்கள். அந்த சிறுவனுக்கு எதிரி இன சிறுவன் மீது அப்பழுக்கில்லாத நட்பு இருக்க, “நீ அழைத்தால் எப்போது வேண்டுமானாலும் வருவேன்…” என்ற வாக்குறுதி கொடுத்துவிட்டுச் செல்கிறான்.

அப்போதே புரிகிறது இவன்தான் வளர்ந்து பிரபாஸ் ஆவான் என்றும், கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற மீண்டும் கான்ஸார் வருவான் என்றும்.

இது நடந்து பல வருடங்கள் கழித்து வெளிநாட்டில் இருந்து தன் தாயின் அஸ்தியைக் கரைப்பதற்காக இந்தியா வருகிறார் சுருதி ஹாசன்.  அவர் எப்போது வருவார் என்று இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் சதிகாரர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பிரபாஸ் எங்கே போனார் என்று தேடுவதும் இதே குழுக்கள்தான். தன் தாயுடன் அசாமில் தொழில்நுட்பக் கைகள் எட்டாத தூரத்தில் வசிக்கும் பிரபாஸிடம் சுருதிஹாசனுக்கு அடைக்கலம் கேட்கிறார் அவர் நண்பரான மைம் கோபி.

ஒரு கட்டத்தில் சதிகாரர்களுக்கு சுருதிஹாசன் இருப்பிடம் தெரிய வர அங்கேதான் அவர்கள் தேடுகிற பிரபாசும் இருப்பது தெரிய வர அப்புறம்தான் ஆரம்பிக்கிறது அதகளம்.

அதுவரை தாயின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு தன் சினத்தை அடக்கி கொண்டிருந்த பிரபாஸ் தாயே வெகுண்டு எழுந்து “பொறுத்தது போதும் பொங்கி எழு… மனோகரா..!” என்று ஆணை இட, எதிரிகளை இரண்டு மணி நேரமாக துவம்சம் செய்கிறார் பிரபாஸ் என்கிற தேவா என்கிற சலார்.

பிரசாந்த் நீல் படங்களின் ஹீரோக்களுக்கு எந்த விதமான கவலையும் இல்லை. ஒரே மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு படம் முழுவதும் வந்துவிடலாம். எல்லா உணர்வுகளுக்கும் ஒரு எக்ஸ்பிரஷன் போதுமானது. இதிலும் பிரபாஸ் அதையே தான் செய்திருக்கிறார்.

படத்தின் மெயின் வில்லனாக பிரித்வி ராஜைக் காட்டினாலும் அவருக்கான பகுதிகள் இந்த முதல் பாகத்தில் குறைவுதான். இரண்டாவது பாகத்தில் அவர் விஸ்வரூபம் எடுப்பார் என்று நம்பலாம்.

பிரபாஸின் நண்பராக மைம் கோபி, அம்மாவாக ஈஸ்வரி ராவ், கான்சார் மன்னராக ஜெகபதிபாபு, அவர் மகளாக ஸ்ரேயா ரெட்டி மற்றும் தேவராஜ், ராமச்சந்திர ராஜு, ஜான் விஜய், பாபி சிம்ஹா, ரமணா என படத்தில் ஏகப்பட்ட டிராபிக் ஜாம்.

கே ஜி எஃப் இல் தங்கச் சுரங்கத்தை ஆட்டிப்படைத்த பிரசாந்த் நீல், இந்தப் படத்தில் நிலக்கரி சுரங்கத்தை ஆக்கிரமித்து எல்லோரையும் ஆட்டுவிக்கிறார்.

ஆனால் இவ்வளவு பெரிய குழப்பமான கதையை கடைசியில் நமக்கு எப்படியோ புரிய வைத்து விடுகிறார் நீல். அதற்காக அவரது திறமையைப் பாராட்டியே ஆக வேண்டும்.

புவன் கவுடாவின் ஒளிப்பதிவு அபாரம். அந்த கலர் டோன் மீண்டும் கே ஜி எஃப் ஐ ஞாபகப்படுத்துகிறது.

10 படங்களுக்கான இசையை ரவி பஸ்ரூர் இந்த ஒரே படத்துக்காக அமைத்திருக்கிறார் படம் முழுவதும் திடும் திடும் என்று தியேட்டரை ஆட்டி வைக்கிறது.

ஆட்டுத் தொட்டியில் கூட ஆடுகளை ஒவ்வொன்றாகத்தான் வெட்டுவார்கள் ஆனால் இதில் பிரபாசும் பிரித்திவிராஜும் சேர்ந்து, எதிரே வருகிற மனிதர்களை எல்லாம் (ஒரு 500 பேர் இருப்பார்கள்) வெட்டி வெட்டித் தள்ளுகிறார்கள்.

படம் முடியும்போது நமது கழுத்தில் தலை இருக்கிறதா என்று தடவிப் பார்த்துக் கொண்டுதான் வெளியே வர வேண்டி இருக்கிறது.

ஆனாலும் டெக்னிக்கல் இன்டலிஜென்ஸ் என்ற அளவில் இந்திய படங்களுக்கெல்லாம் முன்னோடியாக நிற்கிறது இந்தப் படம்.

சலார் 1 – பளார்… பளார்… அனுபவம்..!