வெளிநாட்டு மருத்துவப் படிப்பை முடித்து இந்தியாவுக்கு வரும் மாணவர்கள், இங்கு மருத்துவராக பணியாற்ற வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரி தேர்வில் (FMGE- Foreign Medical Graduate Examination) தேர்ச்சி பெறுவது அவசியம்.
அதாவது அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 5 நாடுகளில் மருத்துவப் படிப்பு முடித்தால் இந்த எப்எம்ஜிஇ தேர்வை இந்தியாவில் எழுதத் தேவையில்லை.
அதேவேளையில், ரஷ்யா, சீனா, வங்கதேசம், பிலிப்பைன்ஸ், ஜார்ஜியா உள்ளிட்ட நாடுகளில் மருத்துவம் படித்தவர்கள், இந்தியாவில் டாக்டராக பணியாற்ற கட்டாயம் இந்தத் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.
அதையொட்டி தேசிய தேர்வு வாரியம், ஜூன் மற்றும் டிசம்பர் என ஆண்டுக்கு 2 முறை இந்தத் தேர்வை நடத்தி வருகிறது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக ஜூன் மாதம் நடைபெறவிருந்த இந்தத் தேர்வு தள்ளிவைக்கப்பட்டு, நேற்று (ஆக.31) நடைபெற்றது.
இந்தத் தேர்வுக்காக திருச்சி சிறுகனூர் எம்ஏஎம் இன்ஜினியரிங் கல்லூரி தேர்வு மையத்தில் பிரபல நடிகை சாய் பல்லவி பங்கேற்று தேர்வெழுதினார். இவர், ஜார்ஜியா நாட்டில் மருத்துவப் படிப்பு முடித்துள்ளாராம்.
இரு வேளை தேர்வும் முடிந்து புறப்படுவதற்கு முன் சக மாணவர்கள் அவரை அடையாளம் கண்டு செல்பி எடுத்துக் கொண்டார்கள்.
ரௌடி பேபி இனி டாக்டர் பேபி..!