உலகளாவிய மனிதம் பேசும் கதை. அதன் களமாக இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நடைபெறும் போரை வைத்து ஒரு கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஜெய் சிவ சே.
கதை நாயகனாக நடிக்கும் பிரதீப் இந்திய பாகிஸ்தான் எல்லைப் போரில் குண்டடிபட்ட தங்களுடைய மேஜரை தூக்கிக்கொண்டு சக சிப்பாய் இன்பாவுடன் இந்திய முகாம் நோக்கி வந்து கொண்டிருக்கிறார்.
பிரதீப்புக்கும் சரி இன்பாவுக்கும் சரி சமீபத்தில் தான் திருமணம் ஆகி இருக்க, இவர்கள் வரவுக்காக அவர்களது மனைவிமார் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் போரில் சிக்கி விட்டதால் இங்கிருந்து சென்றதும் மனைவியைக் காண வேண்டும் என்கிற ஆர்வத்தில் இருக்கும் இருவருக்கும் மேஜரை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இருக்க, எதிர்பாராத விதமாக இன்பாவும் குண்டடி பட்டு இறக்கிறார்.
தனி ஒரு மனிதனாக மேஜரை சுமந்து கொண்டு வருகையில் பிரதீப்புக்கு ஏற்படும் மனக் குழப்பம், எதிர் மறை சிந்தனை இவற்றையெல்லாம் முன் பாதி படம் எடுத்துரைக்க, அதிலிருந்து மீண்டு அவர் முகாம் நோக்கி வரும் வேளையில் கன்னிவெடி ஒன்றில் கால் வைத்து விடுகிறார்.
காலை எடுத்தால் உடல் சிதறிப் போகும் என்ற நிலையில் அவர் தற்கொலை முடிவுக்கு வர இந்த பரபரப்புடன் முதல் பாதி முடிகிறது. இரண்டாவது பாதியில் என்ன ஆகிறது என்பதுடன் எதிர்பாராத கிளைமாக்ஸ் ஆச்சரியப்படுத்துகிறது.
பிரதீப்புக்கு பாத்திரப் பொருத்தம் அவரது ராணுவ உடையை போலவே சரியாகப் பொருந்தி இருக்கிறது. அத்துவான காட்டில் விடப்படும் நிலையில் ஏற்படும் மனக்குழப்பத்தை நன்றாகவே வெளிப்படுத்தி இருக்கிறார்.
அவரது மனைவியாக வரும் அர்ச்சனா சிங்குக்கு கொஞ்சம் பூசிய உடம்பு. சரியான நேரத்தில் பிரதீப் நினைவில் தோன்றி அவரை மனசாட்சியுடன் நடந்து கொள்ள வைப்பது மனைவிமாருக்கு மரியாதை ஏற்படுத்தித் தருகிறது.
உடலை அசைக்கவோ பேசவோ கூட முடியாத மேஜர் பல்வேந்தர் சிங்காக வரும் யுவா யுவராஜ் அந்த பாத்திரத்தை புரிந்து கொண்டு நடித்திருக்கிறார்.
எதிர்பாராத பாகிஸ்தான் நண்பராக வரும் சுபாஷ் சிம்பு, பாத்திரப்படைப்பில் நமது மனதைக் கொள்ளை கொள்கிறார்.
கிட்டத்தட்ட ஒரு வில்லன் போன்ற பாத்திரத்தில் வரும் அமரன் எம்ஜிஆர், நாயகனின் செயல்களால் திருந்தி விடுவது நம்பும்படி இல்லை.
ஒளிப்பதிவாளர் கணேஷ் முத்தையாவுக்கு ஒரு சீமைக் கருவேலங்காட்டை விட்டு வெளியே வர வாய்ப்பே இல்லாமல் போய்விட, அதற்குள்ளேயே கோணங்களை வைத்து எடுத்து இருக்கிறார்.
ஜெய் கிஷானின் இசையும் அப்படியே படத்தின் பட்ஜெட்டுக்கு தக்கவாறு ஒலிக்கிறது.
ஜெய் சிவசேகரின் பாடல்களும், வசனங்களும் கவனிக்க வைக்கின்றன.
“ஒவ்வொருவரின் பெயரையும் ஆண்டவன் அரிசியில் எழுதி வைப்பான் ஒவ்வொருவரின் உயிரையும் மனிதன் தோட்டாவில் எழுதி வைப்பான்…” என்ற பொருள்பட வரும் பாடல் வரிகள் பாராட்ட வைக்கின்றன.
மனிதத்தை உணரச் செய்யும் அந்த கடைசி கவிதையும் புல்லரிக்க வைக்கிறது.
ஒரு உலகளாவிய நல்ல செய்தியை சொல்லி இருக்கும் ஜெய் சிவ சேவை பாராட்டலாம்.
அதே நேரத்தில் இந்த படத்துக்கு பட்ஜெட்டே இல்லாமல் போன வருத்தத்தையும் பதிவு செய்து ஆக வேண்டும்.
முழு படமும் ஒரு கருவேலங்காட்டுக்குள் நடப்பது இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதி இப்படியா இருக்கும் என்று வியக்க வைக்கிறது.
இடைவேளைக்கு பிறகாவது அங்கிருந்து வெளியில் வருவார்கள் என்று பார்த்தால் இடைவேளையில் நாயகன் நிலக்கன்னி வெடியை மிதித்து விட அங்கிருந்து அவர்கள் மட்டுமல்ல நாமும் தப்பவே வழியில்லை என்றாகி விடுகிறது.
அதற்கெல்லாம் சிகரம் வைத்தார் போல், இறந்தவர்கள் சொர்க்கத்தில் பேசிக் கொள்வது போன்ற ஒரு காட்சியைக் கூட அதே காட்டுக்குள் வைத்து எடுத்திருப்பதில் பரிதாபமே மிஞ்சுகிறது.
உள்ளதை வைத்துக் கொண்டு நல்லது செய்ய ஆசைப்பட்ட உள்ளங்களைப் பாராட்டுவோம்.
ராயல் சல்யூட் – படம் சொன்ன செய்திக்காக..!
– வேணுஜி