தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக அறிவிப்பை வெளியிட்டதையடுத்து ரஜினி ரசிகர் மன்றங்கள் ரஜினி மக்கள் மன்றமாக மாற்றம் செய்யப்பட்டன.
அதன் பிறகு மாவட்டம் தோறும் ரஜினி மக்கள் மன்றத்துக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். இளைஞர் அணி, மகளிர் அணி உள்ளிட்ட பல்வேறு அணி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர்.
ஜூலை மாதம் மாவட்டந்தோறும் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கையும், உடனுக்குடன் அடியாள அட்டை வழங்கும் பணியும் நடைபெற்றது.
ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில அமைப்பு செயலாளராக இளவரசன் நியமிக்கப்பட்ட பிறகு இளைஞர் அணி, மகளிர் அணி நிர்வாகிகள் அனைவரும் மாவட்ட செயலாளர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டனர்.
இந்நிலையில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் மாவட்டம் வாரியாக ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பதாக இளவரசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான ஆலோசனை கூட்டம் அக்டோபர் 5-ந்தேதி மற்றும் 11-ந்தேதிகளில் தலைமை அலுவலகத்தில் நடக்கவிருக்கிறது.
இதனையடுத்து ரஜினி தனது அரசியல் கட்சியைத் தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.