ஏப்ரல் 14ஆம் தேதி வெளியான கேஜிஎப் 2 படம் பெரிய வெற்றி அடைந்திருக்கிறது. ஆனால் அதற்கு முந்தைய நாள் விஜய்யின் பீஸ்ட் படம் வெளியான நிலையில் கேஜிஎப் 2 படத்துக்கு அதிகமான தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது.
இந்நிலையில் கே.ஜி.எஃப்2′ படத்திற்கு வரவேற்பு கிடைத்தும், தியேட்டர்கள் அதிகப்படுத்தப் படாமல் இருப்பது ஏன்..? என்ற நியாயமான கேள்விக்கு கேஜிஎஃப் தமிழ்நாடு விநியோக உரிமை வாங்கி இருக்கும் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு சொன்ன பதில்…
”உலகம் முழுக்க ‘கே.ஜி.எஃப்’க்கு வரவேற்பு இருக்குது. அதனால அதோட ரெண்டாவது பார்ட் ரிலீஸையும் ஏப்ரல்-14 னு அறிவிச்சாங்க. இப்படி முன்னாடியே திட்டமிட்டதால ‘பீஸ்ட்’ வருதுனு தெரிஞ்ச பிறகும் அவங்களால ரிலீஸ் தேதியை மாத்திக்க முடியல. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் ஒரே சமயத்துல ரெண்டு மெகா சைஸ் படங்கள் வரலாம்னு இதுக்கு முந்தைய சூழல்கள் உதாரணமா இருக்கு.
டிஜிட்டல் காலகட்டத்துல சொல்றதா இருந்தால்.. ‘பேட்ட’, ‘விஸ்வாசம்’ ரெண்டும் ஒரே நாள்ல வந்தது. அந்த சினாரியோல, ரெண்டு படமும் கலெக்ஷன் ஆச்சு. அதைப் போல ‘பிகில்’ வந்த போது ‘கைதி’ வெளியானது. இப்படி ரெண்டு படங்கள் வெளியாகுறது புதுசு இல்ல. ஆனா, ‘கே.ஜி.எஃப்2’ ரெக்கார்டு தான் புதுசு. எனக்கு வர்ற பாராட்டுக்களை எல்லாம் பட டீமுக்கு தெரிவிச்சுக்கறேன்.
ஆரம்பத்துல எங்களோட படங்களை மட்டும்தான் விநியோகம் பண்ணிட்டு இருந்தோம். அதன்பிறகுதான் வெளிப்படங்கள் டிஸ்ட்ரிபியூட் பண்ண ஆரம்பிச்சோம்.
‘கே.ஜி.எஃப்2’க்கு எங்களோட ‘கைதி’ மாதிரி திரையரங்குகள் கிடைச்சா போதும் நினைச்சோம். ஆனா, அதைவிட 40 சதவிகிதம் அதிகமா அமைஞ்சது சந்தோஷமா இருக்கு. கே.ஜி.எஃப் 2 படத்தைப் பொறுத்தவரை 240 தியேட்டர்கள் போதும்னு நினைச்சோம். ஆனா, எங்களுக்கு 350 தியேட்டர்கள் கிடைச்சது. இது ரொம்ப சின்ன இன்டஸ்ட்ரி. யார்கிட்டேயும் நாம அடிக்கடி பேசலைனாலும்கூட, சந்திக்கற வாய்ப்புகள் அமையும்.
கடந்த 60 வருட காலங்களாக முதலமைச்சர்கள் திரைத்துறையில் இருந்து வந்ததாலே, சினிமாவும் அரசியலும் பின்னிப்பிணைந்தே இருக்கும். ஒரு படத்தை பொறுத்தவரை ஷோக்கள் அதிகரிப்பது பத்தி ஆடியன்ஸ்தான் முடிவு பண்ணுவாங்க. அதுல ஒரு பர்சன்டேஜ் தான் தியேட்டர்கள் முடிவெடுப்பாங்க. அந்த ஒரு பர்சன்ட்டேஜும் மக்களுக்குப் பிடிச்ச படத்தை போடாமல், பிடிக்காத படத்தை போட்டால், அதுக்கு அடுத்த முறை அந்த தியேட்டரையே ஆடியன்ஸ் ஸ்கிப் பண்ண ஆரம்பிச்சிடுவாங்க. அதனால தியேட்டர்களை பொறுத்தவரை எந்தப் படத்துக்கு டிமாண்ட் இருக்குதோ.. அந்த படத்தைதான் கொடுப்பாங்க. திரைப்படங்களின் ரிசல்ட்டும், மக்களுடைய ஆதரவும்தான் திரையரங்குகளின் எண்ணிக்கையை முடிவு பண்ணுமே தவிர, வேறு எந்த ஒரு சக்தியும் முடிவு பண்ணமுடியாது.” என்கிறார் எஸ்.ஆர்.பிரபு.