November 23, 2024
  • November 23, 2024
Breaking News
  • Home
  • Uncategorized
  • ராட்சசி திரைப்பட விமர்சனம்
July 4, 2019

ராட்சசி திரைப்பட விமர்சனம்

By 0 925 Views

ஜோதிகா நடிக்கும் படம் என்பதுதான் படத்தின் தலையாய பலம். ஆனால், தலைப்பைக் கேட்டதும் ஏதோ நெகடிவ் கேரக்டரில் ஜோ வந்து அடித்துத் துவைப்பார் என்றெல்லாம் கற்பனை செய்து விட வேண்டாம்.

இதுவரை நாம் திரையில் பார்த்திருக்கக் கூடிய அரசுப் பள்ளிகளின் அவல நிலைதான் படத்தின் மையப்புள்ளி. அப்படி இருக்கும் புதூர் என்ற கிராமத்தின் அரசுப்பள்ளிக்கு தலைமை ஆசிரியராக வந்து சேரும் ஜோ எப்படி அந்தப் பள்ளியைச் சீரமைக்கிறார் என்பது கதை.

அவர் செய்யும் நல்லவை எல்லாம் பொல்லாதவர்களுக்கு அவரை ‘ராட்சசி’யாகக் காட்டுகின்றன. நல்லவர்கள் கண்ணுக்கு ‘தெய்வம்’ போலவும், குழந்தைகள் கண்ணுக்கு ‘தேவதை’ போலவும் காட்சியளிக்கிறார் அவர்.

ஆனால், ஒட்டுமொத்தப் படத்தில் நல்லவர்களைத் தேட வேண்டியிருப்பது கதையின் முக்கிய பலவீனம்.

இதுபோன்ற கதைகளில் செயற்கையாக உருவாக்கப்படும் சூழல்கள் படத்தின் நம்பகத் தன்மையை வெகுவாகக் குறைக்கின்றன. அரசுப் பள்ளி ஆசிரிய ஆசிரியைகள் என்றாலே அனைவரும் கெட்டவர்கள்தானா..? படத்தில் காட்டும் பள்ளியில் அப்படித்தான் இருக்கிறார்கள் எல்லோரும். ஜோதிகா மட்டுமே நல்லவர் என்பதால் படத்தில் ஒன்றவே முடியவில்லை.

ஒட்டுமொத்தப் பள்ளியில் இருக்கும் ஒரே ஒரு ஆசிரியை பூர்ணிமா பாக்யராஜ் மட்டும் நல்லவராக இருக்கிறார். அவரைப் பார்த்ததும் அவர் காலில் விழுந்து ஜோ ஆசி வேறு வாங்குகிறாரா, அப்போதே தெரிகிறது இருவருக்கும் ஏதோ கனெக்‌ஷன் கொடுக்கப் போகிறார் இயக்குநர் என்பது.

ஜோ இதுவரை ஏற்ற வேடங்களில் இது கொஞ்சம் புதுசு. எந்தக் கேரக்டரிலும் அவர் ஜொலிப்பார் என்பதால் இந்தக் கேரக்டருக்கும் அளவாகப் பொருந்துகிறார். ஆனால், முறைக்கும்போது பார்க்கும் அந்த ‘சைனீஸ்’ பார்வை மட்டும் உறுத்துகிறது. கிட்டத்தட்ட அதே பார்வைதான் வில்லன் ‘ஹரீஷ் பெரேடி’யும் பார்க்கிறார்.

கல்விக் கதை என்பதாலும், மாணவர்கள் விஷயம் என்பதாலும் வரும் பிரச்சினைகள் எல்லாமே ‘காமிக்’ கதைகள் போன்று முடிந்து விடுகின்றன.

எனவே… படத்தில் ஜோதிகாவுக்கு அமைந்தது போல்…

அப்பா நல்லவராக அமைந்தால்…

எப்போதும் பள்ளி பற்றியே காதலனும் பேசிக்கொண்டிருந்தால்…

ஒரு பள்ளியில் பிள்ளைகள் அன்புக்கு மட்டுமே பணிந்து கீழ்ப்படியும் நல்ல குணம் படைத்தவர்களாக இருந்தால்…

ஏற்கனவே ராணுவத்தில் பயிற்சி பெற்று ஒரு தலைமை ஆசிரியர் எந்த ரவுடியையும் எட்டி உதைக்க முடிந்தால்…

எதிர்க்கிற ரவுடியும் அடி வாங்கிக் கொண்டு போய் அடுத்த சீனிலேயே “குத்துன இடத்திலயே குத்துறா சார்…” என்று காமெடியனாக மாறி அழுவான் என்றால்…

கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் ‘சாதி சங்க’ தலைவர்கள் பின்வாங்கினால்…

அந்த மாவட்ட கலெக்டர் மரியாதை எல்லாம் எதிர்பார்க்காமல் அனுசரணையாக அமைந்து ஒரு பள்ளி தலைமை ஆசிரியரின் புகாருக்கு உடனே நடவடிக்கை எடுப்பார் என்றால்…

வில்லனாகத் தெரியும் அரசியல்வாதி தன் மகனின் மாறுதல் கண்டு ஒரு வருடத்துக்குள் மனம் திருந்தி விடுவார் என்றால்…

எந்த தலைமை ஆசிரியரும் எந்தப் பள்ளியையும் திருத்தி நல்வழிப்படுத்தி விட முடியும்தான்..! 

இப்படி நகர்த்துவதற்கு சாதகமான இயக்குநர் சை.கௌதம்ராஜின் திரைக்கதை சமுதாய நடப்பின் இயல்புத் தன்மையில் ஒட்டாமலேயே பயணிப்பதால்… வழக்கமான ‘புனை கதை’யாகவே தோன்றுகிறது இந்த நல்ல முயற்சி.

பிற நடிகர்களில் கவிதாபாரதியும், முத்துராமனும், ஆட்டோ ஓட்டுநர் மூர்த்தியும் கவனிக்க வைக்கிறார்கள். பலருக்கு ஒப்பனை படு நாடகத்தனமாக இருக்கிறது.

பாரதி தம்பியின் வசனங்கள் அங்கங்கே கவனித்துப் பாராட்ட வைக்கின்றன. ஒளிப்பதிவு அற்புதம்.

ஷான் ரோல்டனின் இசை படத்துக்கு ஒட்டவேயில்லை. அதிலும், ஜோதிகாவை தெய்வமாகவும், தேவதையாகவும் காட்டும் இடங்களில் ‘மொக்கை’யாக ஏதோ ஒன்றை இசைக்கிறார். ஆக்‌ஷன் படத்துக்குண்டான டைட்டில் இசையும் தவறான இசைப் பிரயோகம். படத்தின் தன்மை கருதி இசையமைக்க ஷான் ரோல்டன் நிறைய பயிற்சி எடுக்க வேண்டும்.

அங்கங்கே ஜோ மூன்று கேள்விகள் கேட்டு மற்றவர்களைத் திக்குமுக்காட வைப்பதை படத்தின் ஹைலைட்டாக வைத்திருக்கிறார் இயக்குநர். அதே போன்று படக்குழுவினரிடம் மூன்று கேள்விகள்…

1.அரசு, கல்வி அமைச்சர், கல்வி அமைச்சகம், மாவட்ட ஆட்சியர், மாவட்ட கல்வி அதிகாரி, பெற்றோர் என்று எல்லோர் பொறுப்பையும் வசதியாகத் தவிர்த்து விட்டு ‘அரசு ஆசிரியர்கள் மட்டுமே கெட்டவர்கள் – அவர்கள் திருந்தினால் அனைத்தும் மாறிவிடும்’ என்று குற்றம் சாட்டுவது சரிதானா..?

2. சர்வாதிகாரியாகக் கட்டளைகள் இடுவதற்கு மத்தியில் ஒரு காட்சியிலாவது தலைமை ஆசிரியர் என்ற முறையில் ஆசிரியர்களின் குறைகள் பற்றி ஜோதிகா கேட்டறிந்தாரா..?

3. தனியார் பள்ளிகளெல்லாம் பணம் காய்ச்சி வனங்கள் என்று நீங்கள் சொல்லும் அளவில் ஒட்டுமொத்த ‘ராட்சசி’ படக்குழுவில் எத்தனைபேர் தங்கள் பிள்ளைகளை அரசு அல்லது மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்க வைக்கிறீர்கள்..?