ரஜினி அரசியலுக்கு வெகு விரைவில் வருவார் என அவரது அண்ணன் சத்திய நாராயணா மீண்டும் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி வருமாறு:-
ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்பது மக்கள் விருப்பமாகும். இது தொடர்பாக அவர் தன் ரசிகர்களுடனும், தனது நல விரும்பிகளான நண்பர்களுடனும் ஆலோசனை நடத்தி வருகிறார். தற்போது முதல் சுற்று ஆலோசனையை அவர் முடித்துள்ளார்.
ஜூலை மாதம்
மீண்டும் ரசிகர்களை சந்தித்து இரண்டாம் சுற்று ஆலோசனை நடத்தவுள்ளார். அவரது ரசிகர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக அவரை அரசியலுக்கு வருமாறு வற்புறுத்தி அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே ரஜினியின் அரசியல் பிரவேசம் தவிர்க்க முடியாதது.
ரஜினி அடுத்து தனது ரசிகர்களை சந்திக்க தயாராகி வருகிறார். அதிகபட்சமாக எவ்வளவு ரசிகர்களை சந்திக்க முடியுமோ, அவ்வளவு ரசிகர்களை சந்தித்து விட வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். அதன் பிறகே அவர் தனது முடிவை வெளியிடுவார்.
பொதுமக்களிடமும், ரசிகர்களிடமும் அவருக்கு ஏகோபித்த ஆதரவு உள்ளது. எனவே ரஜினி எடுக்கும் முடிவும் அதற்கு நேர் மறையாக இருக்கும். அது தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் படைப்பதாக இருக்கும்.
ரஜினி தனது முடிவை தமிழ் மாதமான கார்த்திகை மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளார். அவரது அரசியல் வருகையின் முக்கிய நோக்கமே, பொது வாழ்வில் உள்ள ஊழலையும், லஞ்சத் தையும் ஒழிக்க வேண்டும் என்பதுதான்.
அரசு சார்பில் நிறைய திட்டங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால் அந்த பணம் ஏழை எளியவர்களுக்கு சென்று சேருவதில்லை. அதுபோல நலத் திட்டங்களின் பயன்களும் தேவைப்படுபவர்களுக்கு கிடைப்பதில்லை.
ஏழைகளுக்கு அரசுத் திட்ட பலன்கள் உரிய வகையில் கிடைக்காமல் போவதற்கு காரணமே அடிமட்டம் வரை ஊழல் புகுந்து இருப்பதுதான். இந்த ஊழலை ரஜினியால் திறம்பட ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
ரஜினி அரசியலுக்கு வருவதை அறிந்துள்ள சில கட்சிகள் அவரை தங்களுடன் இணைத்துக் கொள்ள முயற்சி செய்கின்றன. அதற்காக சிலர் அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால் ரஜினி எந்த கட்சியிலும் சேர மாட்டார்.
ரஜினி சொந்தமாக புதிய அரசியல் கட்சி தான் தொடங்குவார். இக்கட்டான இந்த Lockdown period ல் அந்த கட்சிக்கான பெயர் மற்றும் சின்னம் மற்றும் உள்கட்டமைப்பு தொடர்பாக மிக தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு ரஜினியின் சகோதரர் சத்திய நாராயணா கூறினார்.