இன்றைக்குத் தலையாய பிரச்சனையாக இருப்பது பிழைப்பு தேடி தென்னிந்தியா வரும் வட மாநிலத்தினரின் பெருக்கம்தான்.
தமிழ்நாட்டிலும் இதன் பாதிப்பு அதிகமாகவே இருக்கிறது. இங்கு இருப்பவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் குறைந்த கூலிக்கு ஒத்துக்கொண்டு வேலை செய்யும் அவர்களால் இங்குள்ளோரின் வேலை வாய்ப்புகள் நிறையவே பாதிக்கப்படும் சூழலில்… அதற்கு எதிரான கருத்தை நிறுவ முயற்சித்து இருக்கிறது படம்.
தேனியில் வசிக்கும் குங்குமராஜ் முத்துசாமி மின் பழுது நீக்குபவராக இருந்தாலும் சரியாக வேலைக்கு போகாமல் நடத்தையில் பழுது பட்டு இருப்பதுடன் குடிக்கு அடிமையாகவும் இருக்கிறார்.
அதனால் மனைவி வைரமாலாவின் கோபத்துக்கும் ஆளாகும் அவருக்கு குழந்தையும் இல்லாத காரணத்தால் யாருமே தன்னை மதிப்பதில்லை என்கிற தாழ்வு மனப்பான்மையில் மேலும் தவறுகள் புரிந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் அவர்கள் வீட்டின் எதிர் அறையில் குடியிருக்கும் வடமாநில இளைஞன் பர்வேஸ் மெஹ்ரூ சுறுசுறுப்பாக எல்லா வேலைகளும் செய்பவனாகவும், சம்பாதிப்பனாகவும் இருக்க, அவனைத் தன் சொந்த தம்பி போல் நினைத்துப் பழகுகிறார் வைரமாலா.
இந்த ஒரு காரணம் போதாதா குங்குமராஜின் கோபத்திற்கு..? சம்பந்தமில்லாமல் அந்த இளைஞன் மீது வெறுப்பை வளர்த்து வரும் அவர் ஒரு கட்டத்தில் நண்பர் ரமேஷ் வைத்யாவுடன் சேர்ந்து அவனை ஊனப்படுத்த முடிவு எடுக்க… தொடர்ந்து அவன் மரணிக்க… என்ன ஆனது என்பது மீதிக் கதை.
இதை வட இந்தியக் கால் படிந்த (!) தென்னிந்திய மண்ணின் மணத்தோடு இயக்கியிருக்கிறார் எழுத்தாளர் பாஸ்கர் சக்தி.
‘தென்னிந்திய கிராமமும் கிராமத்தினரும் எப்படி..?’ என்பதை அப்பட்டமாகப் படம் பிடித்து காட்டி இருக்கிறது இப்படம்.
எந்த வேலைக்கும் ஆகாதவராக வரும் குங்குமராஜ் அந்த வேலைக்குச் சரியாகப் பொருந்தி இருக்கிறார். இயலாமை கொண்ட தன் பாத்திரத்தை உணர்ந்து அருமையாக அவர் நடித்தும் இருக்கிறார்.
அவரது மனைவியாக நடித்திருக்கும் வைரமாலா ஓங்கு தாங்கான தோற்றத்துடன் வாளிப்பாகத் இருக்க, அவர் கணவனை அடித்து இழுத்துக் கொண்டு வரும் காட்சிகள் எல்லாம் நியாயமாக இருக்கின்றன. ஆனாலும் கணவன் மீதான அன்பு குறையாமல் இருப்பதிலும் அவருடைய பெண்மையும், மென்மையும் மேலோங்கி நிற்கிறது.
வட இந்திய வாலிபர் வேடத்தில் நடித்திருக்கும் பர்வேஸ் மெஹ்ரூ, பார்வைக்கு ஒரு ஐரோப்பியர் போல் தோற்றம் அளிக்கிறார். அவர் ரொம்ப நல்லவராகவும் பரோபகாரியாகவும் இருப்பதில் படத்தின் பிரசாரத்திற்கு உதவும் செயற்கைத் தனம் நிரம்பி இருக்கிறது.
நாயகனின் நண்பன் என்றால் அவர் காமெடியனாகத்தான் இருக்க வேண்டும் என்ற இலக்கணத்தின்படி ரமேஷ் வைத்யா, காமெடியன் ஆகிறார். அங்கங்கே சன்னமாக நம்மைச் சிரிக்கவும் வைக்கிறார்.
ஆனால் சொந்த புத்தி இல்லாமல் இந்த ரமேஷ் வைத்யாவின் ஆலோசனைப்படியே நடக்கும் ஹீரோவின் பாத்திரம் அதைவிட சிரிக்க வைத்து விடுகிறது.
நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் செந்தில் கோச்சடையின் நடிப்பு அற்புதமான இயல்புடன் இருக்கிறது. அவரது உரையாடல்கள் எல்லாம் லைவ் டப்பிங் செய்யப்பட்டது போன்று அத்தனை துல்லியம்.
வட இந்திய பர்வேஸின் குடும்பம் அநியாயத்துக்கு அவரைவிட மிக நல்லவர்களாக இருக்கிறார்கள்.
சொந்த மண் என்பதாலோ என்னவோ தேனி ஈஸ்வரின் கேமரா தன் மண்ணைப் பாசத்துடன் முத்தமிட்டு மகிழ்ந்து படமாக்கி இருக்கிறது.
இயல்பு காரணமாகப் படம் இழுவையாகும் இடங்களில் எல்லாம் எஸ்.ஜே.ஜனனியின் இசை அந்த அயர்ச்சி தெரியாமல் இட்டு நிரப்பி இருக்கிறது.
ஒன்றிய அரசின் வேலைவாய்ப்பு முதற்கொண்டு எல்லா இடங்களிலும் வட இந்தியர்களின் ஆதிக்கம் அதிகமாகிப் போய் தமிழ்நாடு குமுறிக் கொண்டிருக்கும் நேரத்தில் வட இந்தியர்களைப் பாசத்துடன் அரவணைத்துக் கொள்ளச் சொல்லும் இந்தக் கருத்தை நிறுவ முயற்சிப்பது எதனால் என்பது புரியவில்லை.
ஏற்கனவே வந்தாரை வாழ வைப்பதுதான் தமிழகம் என்று இருக்க… எல்லா மாநிலத்தவர்களும் இங்கு அப்படி வாழ்ந்து கொண்டிருக்க… குறிப்பாக வட இந்தியர்கள் மீது பச்சாதாபத்தைக் காட்டச் சொல்லும் இந்தப் படத்தின் நோக்கம் அந்நியமாகி நிற்கிறது.
திட்டமிட்டு தென்னிந்தியாவில் வட இந்தியர்கள் குடியமர்த்தப்படும் அரசியல் பற்றியோ, தமிழர்களைப் போல் பெயர்களை மாற்றிக்கொண்டு இந்த மண்ணின் மைந்தர்களாக அவர்கள் மாற்றப்படும் அவலம் பற்றியோ, மத்திய அரசு பணியிடங்களில் அவர்களே அதிகமாக நிரப்பப்படும் கொடுமை பற்றியோ, சொந்த மண்ணின் மக்கள் வேலை பறிபோகும் அளவுக்கு பாதியும், கால்வாசியுமாக சம்பளம் பெற்றுக் கொண்டு வேலை செய்யும் அவர்களின் சுயநலம் பற்றியோ, குற்றச் செயல்களில் அவர்கள் ஈடுபடும் தகவல் பற்றியோ விவாதிக்காமல் மொட்டையாக ‘அவர்கள் எல்லாம் நல்லவர்கள் அவர்களை ஆதரியுங்கள்…’ என்பது போன்ற பிரசார நெடியுடன் அமைந்துள்ள இந்தப் படம் மேம்போக்கான கருத்தை முன் வைப்பதாகவே தோன்றுகிறது.
இந்த விஷயங்கள் புரியாமல் எடுக்கப்பட்டதா அல்லது ஏதாவது தேவை கருதி இந்த பிரசாரம் மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்து நிறைய யோசிக்க வேண்டி இருக்கிறது.
சொல்ல வந்த கருத்தை அதிரடியாகத் திணித்துவிட வேண்டும் என்கிற வேகத்தில் இங்கிருந்து துபாய்க்கு (பஞ்சம்..?) பிழைக்க போன ஒருவரின் கவலை துருத்தி இருப்பதும், ‘மண்ணில் பிறந்தவர்கள் அத்தனை பேரும் பிழைக்கத்தான் வந்திருக்கிறோம்…’ என்று பொத்தாம் பொதுவாக போட்டு உடைப்பதிலும், இயக்குனரின் பதட்டம் தெரிகிறது. (தவறு செய்பவர்கள் அத்தனை பேரும் ‘நோபடி இஸ் பெர்பெக்ட்’ என்று சொல்லி நியாயப்படுத்திக் கொள்வது போல…)
சிறிய பட்ஜெட் படங்கள் இது போன்ற விவாதங்களை முன் வைத்தால் மட்டுமே எடுபட முடியும் என்பது உண்மைதான். ஆனால், அது நியாயமாக விவாதிக்கப்பட்டிருக்க வேண்டுமே..?
அத்துடன், அது இந்த மண் சார்ந்த மக்களின் அடி வயிற்றில் கை வைப்பதாக இருந்தால் அதை மக்கள் எப்படி ஏற்பார்கள்..?
படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனரும் ரயிலில் ஒரு நடை கோயம்புத்தூர் போய் வந்தாலே வட இந்தியரின் அடர்த்தியும், ஆக்கிரமிப்பும் எந்த அளவு இந்த மண்ணை பீடித்து இருக்கிறது என்பது புரியும்.
ரயில் – ரெட் சிக்னல்..!
– வேணுஜி